Saturday 11 July 2015

லேடீஸ் டிரைவிங்... கொஞ்சம் சரி... நிறைய தப்பு!

நெருக்கடியான சாலையில்கூட அநாயாசமாக வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. விசாலமான சாலை என்றால், சீறிச் செல்லும் பெண்களின் உற்சாகத்துக்கு அளவே இல்லை. இதில் பலர், அபாயகரமாக வாகனத்தை ஓட்டிச் செல்வதையும் பார்த்திருப்போம். அபாயகரம் என்பது வேகம் மட்டுமல்ல... உடை அணியும் முறை, ஓட்டும் முறை, பில்லியனில் அமர்ந்திருக்கும் முறை ஆகியவையும்தான். இவை எவ்வாறு இருந்தால், பாதுகாப்பானது என்பதைப் பார்ப்போம்.
ஓட்டுநர்
சேலை அணிந்து செல்லும் பெண்கள், அதிக இறுக்கமாகவோ அல்லது தளர்வாகவோ
அணியக் கூடாது. இறுக்கமாக அணிந்தால் பயணத்தின்போது சுமுகமாக இருக்காது. தளர்வாக இருந்தால் காற்றினால் மேலும் தளரும்.
முந்தானையைச் சரியாக தோள்பட்டையில் 'பின்' செய்து இருக்க வேண்டும். முந்தானை காற்றில் பறப்பதுபோல இருக்கக் கூடாது. இடுப்பில் சொருகப்பட்டு இருக்க வேண்டும். சேலை காற்றில் பறந்தவாறு இருந்தால், ரியர்வியூ கண்ணாடியை மறைக்கும். எனவே, கவனம் தேவை.
வழவழப்பு தன்மை கொண்ட சேலையை உடுத்திப் பயணிப்பது ஆபத்தானது. காரணம், சடர்ன் பிரேக் போடும்போது, அமர்ந்திருக்கும் நிலையில் இருந்து நழுவி, கன்ட்ரோல் இழந்துவிடும் அபாயம் உண்டு.
இரவு நேரங்களில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தால், பளிச்சிடும் வண்ணம் கொண்ட சேலையைத் தேர்ந்தெடுங்கள். அதுதான் இரவில் ஒளியைப் பிரதிபலிக்கும்.
பில்லியன் ரைடர்
சேலை அணிந்திருந்தால், இரு பக்கமும் கால் வைத்து பின் சீட்டில் அமர முடியாது. ஒரு பக்கமாகத்தான் அமர முடியும். வண்டியை ஓட்டுகிறவர், பின் சீட்டில் அமர்ந்து செல்பவர்... என இருவருக்குமே இதனால் பாலன்ஸ் கிடைக்காது.
முந்தானை தொங்கியவாறு இருந்தால், பின் சக்கரத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உண்டு. எனவே, முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு கவனமாக அமர வேண்டும்.
ஓட்டுநரின் இடுப்பைப் பிடித்தவாறு பயணிப்பதுதான் பாதுகாப்பானது. தோள்பட்டையைப் பிடித்தால், ஓட்டுநருக்கு பாலன்ஸ் தவறும்.
சடர்ன் பிரேக் போடும் சூழ்நிலை ஏற்படும்போது, ஓட்டுநரைப் பிடிக்காமல் இருந்தால், கீழே விழும் அபாயம் நிச்சயம்.
பயணத்தின்போது செல்போனில் பேசினால், பைக் பாலன்ஸ் செய்வது சிரமாக இருக்கும். கவனமும் சிதறும்.
ஒரு பக்கமாக அமரும்போது கால்மீது கால்போட்டு அமருவது ஆபத்தானது. அது அமர்ந்திருக்கும் உங்களுக்கும் சௌகர்யமாக இருக்காது.
'சாரி கார்டு' இல்லாத பைக்கில் அமர்ந்து செல்வது பாதுகாப்பானது அல்ல!
வெயிலுக்காகத் தலைமீது சேலையைச் சுற்றியிருந்தால், அதைச் சரியாக பின் செய்து இருப்பது நல்லது.
சுடிதார் ஓட்டுநர்
அதிக இறுக்கமாகவோ அதிக தளர்வாகவோ சுடிதார் அணிவதைத் தவிருங்கள். இறுக்கமாக அணிந்தால் பயணம் சௌகர்யமாக இருக்காது.
துப்பட்டா, இரு தோள்பட்டையிலும் 'பின்' செய்யப்பட்டு, முன் பக்கமாக முடிச்சு இருக்க வேண்டும். பின் பக்கம் முடிச்சுப் போட்டுச் செல்லும் பழக்கம் அதிகம் உள்ளது. முடிச்சு அவிழ்ந்துவிட்டால், வாகனத்தைச் செலுத்தியவாறு சரி செய்ய முயல்வது தவறு.
துப்பட்டாவைக் குறுக்காக அணிபவர்கள், தோள்பட்டையில் 'பின்' செய்து, முடிச்சை பக்கவாட்டில் இல்லாமல் முன் பக்கம் இருக்குமாறு அணிவது நல்லது.
முகத்தை மறைத்தோ அல்லது தலையை மூடியோ, கழுத்தைச் சுற்றியவாறு துப்பட்டாவைப் போட்டிருந்தால், அதன் ஒரு முனை எதிலாவது சிக்க நேரும்போது, கழுத்தே முறிந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, துப்பட்டாவை அப்படி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சுடிதார் பில்லியன்
இரு பக்கமும் கால் போட்டு அமருங்கள். இது ஓட்டுநருக்கு சௌகர்யமானது மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பானது. ஒரு பக்கமாக அமர்ந்தால் சேலை அணிந்து பயணிக்கும்போது உண்டாகும் ஆபத்துகள் அனைத்தும் இதிலும் உண்டு.
சில சமயம் பின் பக்க விளக்குகள், நம்பர் பிளேட் போன்றவற்றை சுடிதாரின் டாப் மறைத்தவாறு அமர்வதை கவனமாகத் தவிருங்கள். ஏனெனில், இண்டிகேட்டர், பிரேக் லைட் தெரியாததால் பின்னால் வரும் வாகனம் மோதிவிடும் ஆபத்து உண்டு.
இரு கால்களையும் உங்களுக்கு உரிய ஃபுட் ரெஸ்டில் வைத்திருக்க வேண்டும். முன்னும் பின்னுமாக வைத்திருந்தாலோ அல்லது கால்களைத் தொங்கவிட்டவாறு இருந்தாலோ ஓட்டுநருக்கு பாலன்ஸ் கிடைக்காது.
பேன்ட் - சர்ட், ஓவர் கோட் ஓட்டுநர்
ஆடைகளை அதிக இறுக்கமாகவோ, அதிக தளர்வாகவோ அணியக் கூடாது. பயணத்தின்போது பெல் பாட்டம் அணிவதைத் தவிருங்கள். ஏனெனில், ஃபுட் ரெஸ்ட்டில் சிக்கி தடுமாறி விழும் அபாயம் உண்டு.
வழவழப்பான ஆடைகளை அணியக் கூடாது.
ஓவர்கோட் அணிபவர்கள், முழுமையாக பட்டன்கள் அணிந்திருப்பது அவசியம். ஏனெனில், காற்றில் அலையும்போது ரியர் வியூ கண்ணாடியை மறைக்கும். மேலும், பயணம் சௌகர்யமாக இருக்காது.
பேன்ட் - சர்ட், ஓவர் கோட் பில்லியன்
சுடிதார் அணிந்து பயணிக்கும் பில்லியன்களுக்கான டிப்ஸ் இவர்களுக்கும் பொருந்தும்.
பொதுவானவை
பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஓட்டுநரைப் போலவே ஹெல்மெட் அணிவது பாதுகாப்பானது.
பறப்பதுபோல் தலைமுடி இருக்கக் கூடாது. நீண்ட கூந்தல் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தொப்பி அணிந்திருந்தால், தொப்பியின் பின்னால் உள்ள அட்ஜஸ்ட் செய்யும் பகுதி வழியாக முடியை எடுத்துவிட வேண்டும். தொப்பி தலையில் இருந்து பறக்காமல் கிரிப்பாக இருக்கும். ஸ்கார்ஃப், பர்தா அணிந்திருந்தால் சரியாக பின் செய்யுங்கள்.
கைக்குழந்தைகளை மடியிலோ, தோளிலோ வைத்துத் தூக்கிச் செல்வதைத் தவிருங்கள்.
ஹேண்ட் பேக்கை உடலில் மாட்டிச் செல்வதை தவிருங்கள்.
பொருட்களை மடியில் வைத்து எடுத்துச் செல்லாதீர்கள்!

No comments:

Post a Comment