Friday 3 July 2015

மாதம் ஒரு வாகனம்: மாநகரப் பேருந்து

கானா கபாலிகள் உலாவும் இடமே!
கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவனின் பெயரில் ஓடிய பேருந்துகள், இன்று வண்ணங்களின் பல வகைகளைப் பெயராகக்கொண்டு சென்னை மாநகரச் சாலைகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. ‘மெட்ரோபாலிட்டன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் யெல்லோ லைன், ப்ளூ லைன், தாழ் தளப் பேருந்து - அவற்றில் தானியங்கிக் கதவுகள்,
அடுக்கு நிலை, தொடர் நிலைப் பேருந்து, சொகுசுப் பேருந்து, மாநகரப் பேருந்து, மாசற்ற பேருந்து என்றெல்லாம் ஓட்டுநரின் வலக்கைப் பக்கமிருந்து எழுதப்பட்ட பெயர்கள்.
பாக்கங்கள், பேட்டைகள் நீங்கலாக தியேட்டர்கள், கல்லூரிகள், நிறுவனங்கள், ஓட்டல்களின் பெயர்களைக் கொண்ட ஏராளமான நிறுத்தங்கள் - ஏகப்பட்ட டிப்போக்கள். வெளியூராரும் வேற்று மாநிலத்தவரும் வியக்கும் பிரமாண்டமான கோயம்பேடு பேருந்து நிலையம். மாநிலத்தின் வீசம் பகுதி மக்கள்தொகை இங்கே புழங்குவதால், ‘எத்தனை பஸ் விட்டாலும் போதவில்லை’ என்கிற பேச்சுக்களின் ஊடாகவேகூட வெற்றிகரமாக ஓடிச் சேவை புரிகின்றன.
எவ்வளவோ நாட்களுக்கு முன்னால் ‘டவுன் பஸ்‘ என்றொரு படம் வந்து, அதில் அஞ்சலிதேவி நடத்துநராக நடித்திருந்தாலும் பெண் நடத்துநர்கள் இங்கே தட்டுப்படுவதில்லை. அமர்ந்த இடத்தில் இருந்தவாறே டிக்கெட் எடுத்துப் பழகிய வெளியூர் வாசிகளுக்கு - சக பயணிகள் மூலமாகக் காசைத் தந்துவிட்டு டிக்கெட் பெறுவது புது அனுபவமாயிருக்கும். கொடுத்த பணம் சீட்டாகவும் மீதிச் சில்லறையாகவும் திரும்பிவரும் வரை கொஞ்சம் பதற்றம் தரும் அனுபவமும்தான். காசு கொடுத்து மூன்று நான்கு நிமிடங்களுக்குள் கைக்குச் சில்லறையும் சீட்டும் வந்து சேராவிட்டால் அம்பேல்.
லஸ்ஸில் இருந்து அசோக் பில்லர் போகிற 12ஜி-யில் மாலை நேர நெருக்கடிப் பயணத்தில் ரூபாய் பத்தைக் கொடுத்து சீட்டு வராமல் கை நஷ்டப்பட்டேன்.
சமீபத்தில் புழக்கத்தில்விட்ட சொகுசு வகைப் பேருந்துகளில், அமர்ந்திருப்போரை உய்க்கும் விதமாக மிதமான சாய்மானத்தோடு தனித்தனியாகத் தோன்றும்படியான இருக்கைகள். பேருந்தின் தமிழ் வடிவ விதிக்கு உட்பட்டு அவற்றிலும் மறக்காமல் குறள் எழுதி வைத்திருக்கிறார்கள். பஸ்ஸில் எழுதப்படுபவை பெரும்பாலும் அறத்துப் பால், பொருட்பால் குறள்கள்தான். பேருந்தில் செல்பவர்களுக்கு எதற்கு இன்பத்துப் பால் என நினைக்கிறார்கள் போலும்.
சென்னை ஒரு கான்கிரீட் வனமாகவே ஆகிவிட்டாலும்கூட இன்னும் பேருந்து நிறுத்தங்களாகமரத்தடிகள் செயல்படுவது ஆறுதலான விஷயம். சென்னையின் கடலொட்டிய சில கி.மீ-களில் மாலை நேரம் தொடங்குவதற்குக் கொஞ்சம் முன்பாக இருந்து கடற்காற்று வந்து அள்ளிக்கொண்டு போகும்.
நகரச் சுமையும், பணிச் சுமையும், வேகமும் அப்பிய முகங்களும், மனிதர்களும் என்பதாலோ என்னவோ இங்குள்ள பேருந்துகளில் தனிச்சுமைகளுக்கு இடமில்லை. அதிகாலை நேரத்தில் முக்கிய இடங்களில் வந்து இறங்குகிற சிலர் சூட்கேஸும் தோள் பையுமாக இரட்டைச் சுமையுடன் காட்சி தருவார்களே தவிர, மற்ற நேரங்களில் சுமைகள் இல்லாப் பயணங்கள்.
பேருந்துகளின் இடையில் ஒரு கறுப்பு ஜாயின்ட் அடித்து இரட்டை பேருந்துகள் பல ஓடுகின்றன. ரயிலை நினைவூட்டும் தன்மைகொண்ட அவை திணறாமல் ஓடுவதற்குத் தோதாக பாதைகள் இருக்கின்றன.
அப்புறம் மாடி பஸ்கள். ‘மாடி மேல மாடி வச்சு மாடி மேல உன்ன வச்சு பார்க்காமல் போவேனோ சம்போ...’ என்று பயணிகளைப் படிப்படியாக ஏறவைத்து மேல் மாடத்தில் அமரவைத்துக்கொண்டு போகிற ஏற்பாடு அது. அதில் ஜன்னலோர இருக்கை மட்டும் இன்னல் இல்லாமல் கிடைத்துவிட்டால், உப்பரிகையில் நின்றபடி மக்கள் ஊர்வலத்தை ரசிக்கிற மாதிரியோ அல்லது ஆட்களின் தோள் மேல் பல்லக்கில் அமர்ந்தபடி செல்கிற மாதிரியோ உணரலாம். ஆனால், தாமதமாகப் போனால் மேலதிகாரி திட்டுவாரோ என்கிற மாதிரி மனநிலை இருந்துவிட்டால், அப்புறம் ஆகாய விமானத்தைக்கூட ரசிக்க முடியாது.
சுற்றுப்புறத்தை ரசித்தபடி பயணம் போகிற மாதிரி மாநகரத்தின் நெருக்கடிகள் அனுமதிப்பதில்லை. பர்ஸைக் காப்பாற்ற வேண்டும், நிறுத்தத்தைத் தவறவிடாமல் இறங்க வேண்டும் என்பது மாதிரியான அவசியங்கள் முன் நின்று முண்டியடிக்கின்றன.
இந்த மில்லினியத் துவக்கம் வரை, தமிழ்த் துணுக்கு நகைச்சுவைகளில் ‘கபாலிகள்’ இடம் பெற்ற காலம் வரை ஜேப்படிகள் அதிகமாக இருந்தன. தமிழ்நாட்டில் மயிலாப்பூர் தவிர மற்ற ஊர்க் காரர்களுக்குக் கபாலி என்பது கடவுளின் பெயர் என்பதே தெரியாமலிருந்தது. இப்போது ஜேப்படிகள் குறைந்துவிட்டதற்குக் காரணம், சிறிய குற்றங்களில் ரௌடிகளுக்குப் பிரியமில்லாது போய்விட்டது என்றும் சிலர் கூறுகிறார்கள். ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிற குறளை அவர்கள் படித்துவிட்டனர் போலும். என்றாலும், கூட்டமுள்ள காலம் வரையிலும் ஜேப்படித் தொழில் இருந்துகொண்டுதான் இருக்கும்.
பாரிஸ் கார்னர் பாரதி
பஸ்ஸுக்குள்ளே நீ ரதி
கண்ணிருந்தும் பார்க்காத 
காரணத்தைக் கூறடி 
வெள்ளை பஸ்ஸைப் பாரடி
வேகமாக ஏறடி 
திருவிழாவில் உரசிக்கலாம் 
திருவொற்றியூர் தேரடி!
பஸ்ஸு வருது வேகமா 
ஜனங்க நிக்கிது கூட்டமா 
முந்தியடிச்சு ஏறலைன்னா 
நொண்டியடிக்கணும் சோகமா 
ராயபுரம் ராக்கம்மா
ராத்திரியில் ஏக்கமா
கறுப்பு போர்டு பஸ் பிடிச்சா 
காசிமேடு காத்தும்மா!
கஜல் குஜல் டகிலு - ஏ 
கண்டக்டரு பிகிலு - அந்த 
பிகிலுச் சத்தம் கேட்டுப்புட்டா
பஸ்ஸு வேகம் சுகுரு 
ஜன்னலோர சீட்டு - அதைப் 
பார்த்தது யார் காட்டு 
பராக் பார்த்து வந்தியானா 
பறிபோகும் நோட்டு!
அப்படியான ஜேப்படிப் பிரதாபர்கள் பேருந்தில் இருக்கும் போது நடத்துநர்கள், ‘உள்ளே போங்க! பத்திரம் பத்திரம்! கவனமா இருங்க சார்!’ - இந்த ரீதிகளில் சத்தமெழுப்பி எச்சரிக்கை செய்வார்கள். அவற்றைக் காதில் போட்டுக்கொள்ளாமல் தேமே என்று இருந்தால் கைக்காசை இழக்கவேண்டியதுதான்.
கூட்டம், நெரிசல், பிதுங்கி வழிதல் என எள் போட்டால் நல்லெண்ணெய் ஆகிற, கடலை போட்டால் கடலை எண்ணெய் ஆகிற ஆள் எண்ணிக்கை, அலுவல்களுக்குச் செல்லுகிற சிகர நேரங்களில் நிலவுகிறது. தமிழ் நவீன சிறுகதைப் பரப்பில் வெகுஜன இதழ்களில் சற்றேறக்குறைய 1995 வரை இடிராஜாக்களைப் பற்றிய கதைகளும் பெண்கள்தம் பாடுகளும் உலவிவந்தன. அப்புறம் இடிகளை மின்னல்கள் வெல்லக் கற்றுக் கொண்டதாலோ என்னவோ அவை வழக்கொழிந்தன.
‘அவள் பேருந்துக்குள் ஏறி நிற்பதற்குள் உடலின் மேற்பரப்பினை பதினாறு பேர் பகிர்ந்து கொண்டார்கள்’ என்று அசோகமித்திரன் ஒரு கதையில் குறிப்பிட்டிருப்பார்.
நான் போய்வந்த சில பாதைகளின் அடிப்படையில் பார்க்கிறபோது ஓரிரு நிறுத்தங்களில் இறங்கிவிட்டால்தான் எண்ணிக்கை பதினாறோடு நிற்கும் என்று தோன்றியது. மனிதர்கள் செங்கல், காரை வகைகளால் கட்டப்பட்டு இருந்தால், நொறுங்கித்தான் விடுவார்கள் அந்தக் கூட்டங்களில். எலும்பு தோல் போர்த்த உடம்பு என்பதால், ஏதோ ஒருவிதமாக குறைவான காற்று நிரப்பப்பட்ட பலூன்போல நெளிந்து வளைந்து தப்பிக்கிறார்கள். ‘காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா...’ என்று பஸ் வருவதற்கு முன்னே சொன்ன தமிழனை வியக்கிறேன்.
பழம் பாடலை வியக்கும் அதே அளவு பச்சையப்பா பையர்களின் கானாவையும் வியக்க வேண்டியதாகத்தான் இருக்கிறது. பேருந்துத் தடத்தில் இப்படிச் சில ‘கானா வழிகள்’ இருக்கின்றன. நந்தனம் கலைக் கல்லூரி, புதுக் கல்லூரி இப்படிக் கானாக் கட்டுகிற மாணவர்கள். அவர்கள் புன்னகைகளையும் பகைகளையும் தங்கள் சீனியர்கள் வாயிலாக அறிந்து பாரம்பரியக் கண்ணியாக தங்களது நடவடிக்கைகளைத் தக்கவைத்துக்கொண்டு இருப்பவர்கள். அடக்கஒடுக்கமான பிள்ளைகளை, தொடர்ந்து எல்லாப் பருவங்களும் ஈன்றுகொண்டுதான் இருக்கின்றன. இன்னொரு சாரார் இருக்கிறார்கள், தேனடை போல அடைந்து மின்னி நிரம்புகிற படிக்கட்டுப் பகுதிகளில் இனி அங்கே ஒரு பெருவிரலையும் வைக்க முடியாது எனத் தோற்றம் காட்டுகிற இடத்தில்தான் ஒரு கையில் நோட்டுடன் வந்து தாவி ஏறுபவர்கள்.
படிக்கட்டுக்கு மூன்றடி தொலைவில் - தொங்கும் ஆட்களின் முழங்கால் கொஞ்சம் தவறினால் விலாவில் குத்திவிடும் அபாயத்துக்கு அருகிலேயே சக்கர வேகத்தில் ஓடுகிறார்கள். ஒரு டைமிங்கான புள்ளியைத் தேர்ந்தெடுத்து உடலை வாழைப்பழத்தோல் வழுக்கியது போல ஐம்பது டிகிரிக்குச் சாய்த்து, பாதத்தை உந்தி படிக்கட்டில் தாவுகிறார்கள். வலக்கால் படிக்கட்டில் இருக்கிறது. வலக்கையால் அங்குள்ள கம்பியைப் பற்றுகிறார்கள். இடக்கையால் கண்டக்டருக்கு முன்னால் அல்லது முன்னாலுக்கு முன்னால் ஜன்னலில் உள்ள கம்பியைப் பிடித்துவிட்டு அதே ஜன்னலோர இருக்கைப் பயணியிடம் கைப்பொருளைக் கொடுக்கிறார்கள். இடக்காலோ சக்கரத்தைத் தொட்டுந் தொடாதவாறே அந்தரத்தில் நீந்தி பயணம் முழுக்கக் கூட வருகிறது. இப்படியரு சாகசத்தைக் கண்டு இன்னும் மீதமிருக்கும் இளமையோ துடிக்கிறது. இதயமோ படபடக்கிறது.
வண்ண வண்ணக் காகிதங்கள், எண்ண எண்ணக் கானாக்கள், கனாக்கள், கலர் பூசுதல், கவர் பண்ணுதல், காகிதக் கணைகளை எறிதல் போன்ற திடுக்கிடல்கள் மற்றும் திருப்பங்களுடன் இந்தப் பேருந்து தினங்கள் கொண்டாடப்படுகின்றன. கூரையின் மீது அமர்ந்தும் நடனமாடியும் டிரைவரின் கண்ணாடி முன் அமர்ந்து வைப்பருக்குப் பதிலாக கால்களை ஆட்டிக்கொண்டும் பஸ்ஸுக்கு உள்ளிலும் வெளியிலும் பயணிப்பவர்களை திகிலில் ஆழ்த்துவார்கள். இப்படிப்பட்ட சாகச வாதிகளுக்கு முதலுதவிப் பெட்டிகளால் எவ்விதப் பயனும் இல்லையென்பதாலோ என்னவோ, நிறைய பஸ்களில் முதலுதவிப் பெட்டிகள் செயலிழந்து இருக்கின்றன. பின்னால் ஆம்புலன்ஸே வந்தால்தான் பொருத்தமாக இருக்கும்.
அன்றாட வாழ்வின் அவசர கதியிலும், நெருக்கடியிலும் வாழ்கிற பொதுமக்கள் இத்தகைய பேருந்து தினங்களின் காரணமாக மிகுந்த அச்சத்துக்கும், பீதிக்கும் ஆளாகித் தவிக்கிறார்கள்.
பல அலுவலகங்கள் வேலை நேரத்தை மாற்றி வைத்துக் கொண்டாலும் எப்போதும் கூட்டம் குன்றாமல்தான் பஸ்கள் ஓடுகின்றன. சென்னைப் பட்டணம் என்கிற இந்த நல்ல பட்டணத்தில் அன்றும் இன்றும் மாறாமல் இருப்பவை பஸ்களுக்குள் இருக்கும் விளம்பரங்கள்தான். திருக்குறள், 178(1) பயண விதிகள், அபராத, அரை டிக்கெட் அறிவிப்புகள் நீங்கலாக எப்படியும் மூணு அங்குலத்துக்கு மூணு அங்குல அளவிலோ அல்லது இரண்டடிக்கு இரண்டடி அளவிலோ விளம்பரங்கள்.
இப்போது உடனடி வேலை வாய்ப்பு, வீட்டிலிருந்தே சம்பாத்தியம், சகல ரோக நிவாரணி, ராசிக் கற்கள், பில்லி நீக்குதல் இத்தனை விளம்பரங்களுடன் ரைட் ரங்காவின் எய்ட்ஸ் விழிப்பு உணர்வு விளம்பரங்களும் தட்டுப்படுகின்றன. வள்ளுவர் ‘எண்ணித் துணிக கருமம்’ என்கிறார் அதே பேருந்தில்!
எழுத்தாணிக்குப் பதில் கம்யூட்டரில் எழுதுகிற வள்ளுவராக இருந்தால் என்ன சொல்வார் என யோசிக்கிறேன்.
எண்ணித் திணிக்க ஆட்களை - ‘ஏறட்டும் எண்ணுவம்’ என்ப திடர்.
ஒலகமே சுத்துடா சாமி...!
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகங்களின் வழித்தடங்களையும் கட்டண விகிதத்தையும் ஆராய்ந்தால் முனைவர் பட்டமே வாங்கிவிடலாம். அந்தளவுக்கு வெவ்வேறு விதமான பேருந்து சேவைகள்... கட்டணங்கள்!
வெள்ளைப் பலகை
இதில் பயணிக்க குறைந்தபட்சக் கட்டணமாக 2 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதன் பின் ஒவ்வொரு நிறுத்தத்துக்கும் தூரத்துக்கு ஏற்றவாறு கட்டணம்.
மஞ்சள் பலகை
இவை எல்.எஸ்.எஸ். ( LSS - Limited Stop Service) பேருந்துகள். இந்தப் பேருந்துகளில் சாதாரணக் கட்டணத்தைவிட 50 காசு அதிகம் வசூலிக்கிறார்கள்.
பச்சைப் பலகை
இவை விரைவுப் ( Express ) பேருந்துகள். சாதாரணப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் தொகையைவிட ஒன்றரை மடங்கு அதிகம். உதாரணத்துக்கு, சாதாரணப் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 2 ரூபாய் என்றால், இதில் 3 ரூபாய்.
நீலப் பலகை
இவை சொகுசுப் ( Deluxe ) பேருந்துகள். இதில் எல்.எஸ்.எஸ். பேருந்துகளில் வசூலிக்கப்படும் தொகையைவிட இரு மடங்கு தொகை அதிகம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 2.50 ரூபாய் என்றால், இந்த வகை பேருந்துகளில் 5 ரூபாயாகும். மஞ்சள் கோடு (Yellow Line ), நீலக் கோடு ( Blue Line ), ஆரஞ்சுக் கோடு ( Orange Line ), தாழ் தளப் ( Low Floor ) பேருந்துகள் எல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவையே.
கறுப்புப் பலகை
இரவு நேரங்களில் 10 மணிக்குப் பிறகுதான் இந்த Black Board பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சாதாரணக் கட்டணத்தைவிட இருமடங்குக் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 4 ரூபாய்.
இதெல்லாம் போக ‘வி’ சர்வீஸ் என்ற முறையும் உண்டு. இதை ‘ஃப்ளாட் ரேட்’ ( Flat Rate)என்கிறார்கள். அதாவது, அந்தப் பேருந்தின் கட்டண விகிதம் எல்லாம் 3,4,5 என முழு ரூபாயாகத்தான் இருக்கும்.
சென்னையில் மாடி பஸ்கள் எனப்படும் டபுள் டெக்கர் (Double Decker ) பஸ்கள் தாம்பரத்துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் இடையில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதுபோக இரண்டு நடத்துநர்களைக்கொண்ட ‘T ’ என்று சொல்லப்படும் நீளமான தொடர் (Trailor) பேருந்துகளும் சென்னையில் சில வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சில பேருந்துகளில் ஊர் பலகையில் உள்ள வழித்தட எண்ணின் மேல் குறுக்காக ஒரு கோடு போடப்பட்டிருக்கும், இதை கட் சர்வீஸ் ( Cut Service) என்று சொல்வார்கள். இந்த வகைப் பேருந்துகள் வழக்கமாகச் செல்லும் வழித்தடத்தில் பாதி தூரம் சென்று திரும்பிவிடும். இதற்கு நேர்மாறாக சில பேருந்துகளில்EXTN ( Extension) என்று போட்டிருப்பார்கள். இந்த வகைப் பேருந்துகள் வழக்கமாகச் செல்லும் வழித்தடத்தைத் தாண்டியும் செல்லும். இவை தவிர, காலை மற்றும் மாலை நேரங்களில் முக்கிய வழித்தடங்களில் மகளிர் மட்டும் ( Ladies Special) பேருந்துகளும் இயக்கப்படுகின்றன!

No comments:

Post a Comment