Friday 3 July 2015

குழந்தைகள் முக்கியம் உஷார்... உஷார்! சைல்டு சீட்!

ணவர், டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்க... அருகில் கைக்குழந்தையுடன் மனைவி அமர்ந்து செல்வதுதான் நம்மூரில் வழக்கம். இப்படித்தான் பலரும் காரில் பயணிக்கிறோம். ஆனால், இந்தப் பயணம் குழந்தையின் உயிருக்கே உலை வைக்கக்கூடியது என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
திடீரென பிரேக் அடித்தாலோ, அல்லது எதிலாவது கார் மோதினாலோ முதலில் பாதிக்கப்படுவது, குழந்தைதான். அதனால், எக்காரணத்தைக் கொண்டும் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பயணம் செய்யக் கூடாது. குழந்தைக்கென்று தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் 'சைல்டு சீட்'டில் உட்காரவைப்பதுதான் பாதுகாப்பானது.
விபத்து ஏற்படும்போது, நாம் இருக்கையைவிட்டுத் தூக்கி வீசப்படாமல் இருப்பதற்காக
சீட் பெல்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. இது பெரியவர்களுக்கு மட்டுமே. வெளிநாடுகளில் சைல்டு சீட் என்பது கட்டாயம். அங்கே இது இல்லாமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பயணம் செய்தால், அபராதம் விதிப்பார்கள். ஆனால், நம்மூரில் பலருக்கு சைல்டு சீட் பற்றி தெரியவே இல்லை. இவை ஜெனரல் மோட்டார்ஸ், ஹோண்டா உள்ளிட்ட சில கார் டீலர்களிடமே விற்பனைக்கு உள்ளன. வெளிமார்க்கெட்டிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது கொஞ்சம் விலை அதிகம் என்றாலும், உங்கள் செல்லக் குழந்தையின் பாதுகாப்புதானே முக்கியம்!
கைக்குழந்தைகள்!
சைல்டு சீட்டுகள் குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப மாறுபடும். பின்புறமாகத் திரும்பி இருக்கும் சீட்டுகள்தான் கைக்குழந்தைகளுக்குச் சரியாக இருக்கும். 1 வயது வரையுள்ள குழந்தைகளை முன் பக்கமாகப் பார்த்து உட்காரவைப்பதைவிட பின்பக்கமாகப் பார்த்து உட்காரவைக்கும்போது குழந்தையின் கழுத்து, முதுகு, தலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன.
இதில், இரண்டு வகையான சீட்டுகள் உள்ளன. ஒன்று, குழந்தைகளுக்கு மட்டும். மற்றொன்று, கன்வெர்ட்டிபிள் சீட். குழந்தைகளுக்கான சீட்டுகளில் 1 வயது அல்லது 13 கிலோ எடை வரை உள்ள குழந்தைகளை உட்கார வைக்கலாம். இவை மிகவும் குட்டியான கைப்பிடி உள்ள சீட்டுகள்.
1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பின்புறமாகத் திரும்பி இருக்கும் வகையிலும், 1 வயதுக்கு மேல் காரின் முன் பக்கம் பார்த்தபடி உட்காரவைக்கும் வகையிலும் கன்வெர்ட்டிபிள் சீட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இந்த சீட்டுகளை முன் பக்க இருக்கைகளிலும் பின்பக்க இருக்கைகளிலும் பொருத்தலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் காற்றுப் பைகள் உள்ள கார்களில், குழந்தைகளை முன் பக்கம் உட்காரவைக்கக் கூடாது.
1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகளை முன் பக்கமாகப் பார்த்தபடி உட்காரவைக்கலாம். சைல்டு சீட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள எடையைவிட உங்கள் குழந்தையின் எடை கூடிவிட்டால், பூஸ்டர் சீட்டுகளை வாங்கிப் பொருத்துங்கள்.
4 முதல் 8 வயது வரை
4 வயதைத் தாண்டிவிட்டால் இனி சைல்டு சீட் தேவையில்லை என விட்டு விடக் கூடாது. ஏனென்றால், சீட் பெல்ட்டுக்கான உயரத்தை இன்னும் உங்கள் குழந்தை தொட்டுவிடவில்லை. இதற்காக பூஸ்டர் சீட்டுகளை வாங்கிப் பொருத்தவேண்டும். இப்படிப் பொருத்தும்போது சீட் பெல்ட்டுகள் தோளிலும், மடியிலும் சரியாகப் பொருந்தும். 8 வயது வரை அல்லது 36 கிலோ வரை எடையுள்ள அல்லது 4 அடி 9 இன்ச் உயரமுள்ள குழந்தைகளுக்கு இது சரியாக இருக்கும்.
சைல்டு சீட் பாதுகாப்பானது... குழந்தைகளுக்கு அவசியமானது!
பாதுகாப்பான பயணம்!
உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், கார் வாங்கும்போதே சைல்டு சீட்டையும் சேர்த்து வாங்கிவிடுங்கள். நிறைய சேல்ஸ்மேன்கள் இந்த சீட்டுகளைப் பற்றிப் பேசுவதே கிடையாது. அதனால், நீங்கள்தான் சைல்டு சீட்டுகளைப் பற்றி விசாரிக்க வேண்டும். நல்ல, தரமான, உங்கள் காருக்குப் பொருந்துகிற சீட் பெல்ட்டுகளை வாங்குங்கள். பாதுகாப்பாகப் பயணம் செய்யுங்கள்!

No comments:

Post a Comment