Friday 3 July 2015

மாதம் ஒரு வாகனம்:கால் டாக்ஸி!

காத்திருக்குது கால் டாக்ஸி!
எத்தனை பொருத்தமான பெயர்... கால்டாக்ஸி! புத்தாயிரமாவது ஆண்டுகளை ஒட்டி... ‘ஒய் 2 கே’ என்ற பெயரைச் சொல்லி கம்ப்யூட்டர்காரர்களும் ஊடகங்களும், ‘உலகத்தின் கணக்குவழக்கே இனி கோவிந்தா!’ என்று மிரட்டிக் கொண்டு இருந்த அதே வேளையில், இந்தியப் பெருநகரங்களிலும் அதன் தொடர்ச்சியாக மற்ற நகரங்களிலும் அவதரித்தவை... கால் டாக்ஸிகள்!
புதுவகை வாகனங்கள் அல்லது புதுவகைச் செயல்திட்டத்துடன் வாகனங்கள் வருகிறபோது பழைய வண்டியோட்டிகள் குமுறுவது இயற்கையே. ஆட்டோக்கள் வந்தபோது பழனி, பெரியகுளம், கரூர் போன்ற நகரங்களில் குதிரை வண்டிக்காரர்கள் குமுறியிருப்பார்கள்தானே!
வாகனம் தேவைப்படுகிற தகவலைக் கூறிய அரை மணி நேரத்துக்குள் பயணிகளுக்கு வண்டி கிடைத்துவிடுகிற ‘உடுக்கை இழந்தவனது கை’ வேகம் பாராட்டத்தக்கது. நான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நள்ளிரவில் கால் டாக்ஸியின் பயனைப் பூரணமாக அனுபவித்தேன். கோடம்பாக்கத்தில் புகழ்பெற்ற கலைஞர்கள் சத்தமின்றி வசிக்கும் புலியூர் ஹவுஸிங் யூனிட்டிலிருந்து வட சென்னை தண்டையார்பேட்டை போக வேண்டியிருந்தது. நண்பனிடம் சொன்னேன்.
‘‘கவலைப்படாதே’’ என்று கால் டாக்ஸியை அழைத்துவிட்டு நான் அதுவரை பார்த்தேயிராத வட சென்னை நோக்கி அனுப்பிவைத்தான் நண்பன். வாடகை, கூடுதல் குறைச்சல் என்று நாம் கணக்கிட்டுப் பேசுவதெல்லாம் நமது செழுமை மற்றும் ஏழ்மை சம்பந்தப்பட்ட காரியங்கள் என்றாலும், இன்ன இடத்துக்கு இன்ன பணம்தான் என்று அறுதியிட்டுக் கொள்வது நல்ல விஷயம்.
இந்த முறை கால் டாக்ஸி பயணம் நேர்ந்த தருணத்தில், தி.நகர்- தெற்கு போக் சாலையில் உள்ள ஸ்ரீதேவி கால் டாக்ஸி நிறுவன இயக்குநர் குமாரிடம் நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டேன்.
‘‘கால் டாக்ஸிக்காரர்களுக்கு மட்டும் எப்படி ஃபேன்ஸியான தொலைபேசி எண்கள் கிடைக்கின்றன.?’’
‘‘எழுதிப் போட்டு காத்திருந்து வாங்கினதுங்க...’’ என்றார்.
எனக்கு என்னவோ பல ஊர்களிலுமுள்ள கார்களைப் பார்த்தவகையில், ‘கால் டாக்ஸிக்கு வேண்டும்’ என்று கேட்டால் கம்பி மார்க்க, ஆகாய மார்க்க தொலை இணைப்புக்காரர்கள் இப்படியான எண்களை ஒதுக்கித் தந்துவிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
கால் டாக்ஸிகளின் சஞ்சாரப் பாதையைப் பெருமளவு திட்டமிட உதவும் ஊடகம் மைக்தான். போலீஸ் வண்டிகளின் வயர்லெஸ் அமைப்பை உடையது இது. பலமுறை அதன் சத்தத்தைக் கேட்டு, காவல் வாகனமோ என மிரண்டிருக்கிறேன். அதைப் பற்றிக் கேட்டதும், டாக்ஸிகளின் பயண வரைபடத்தைத் தீர்மானிக்கிற கன்ட்ரோல் ரூமுக்கு அனுப்பிவைத்தார்.
அங்கே மேஜைக்கு மேல் போன்களை வைத்துக்கொண்டு வழித்தடத்தில் ஓடிக்கொண்டு இருக்கும் டிரைவர்களையும் வாகனங்களுக்காகக் காத்திருக்கும் பயணிகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டு இருந்தார்கள்.
ஓட்டுநர்களுக்கு தனித் தனி எண்கள் உண்டு. ‘501 எந்த ஏரியாவுல இருக்கீங்க?’ என்கிற ரீதியில் கேட்கிறபோது, மறுபடியும் போலீஸ் நினைவே வந்தது.
டிராவல் ஏஜென்ஸியாகட்டும், கால் டாக்ஸி சென்டர் ஆகட்டும்... பழுத்த தலை யாராவது ஒருவர் இருப்பதைப் பார்க்கிறேன். ‘கிரேஹேர்ஸ்’ என்பது அனுபவ முதிர்ச்சி கொண்ட நரைத் தலையைக் குறிக்கும் ஆங்கிலப் பெயர். இந்த அனுபவசாலிகள் உட்கார்ந்த இடத்திலிருந்து ஊரையும் ஊரின் சந்தடியையும் அறிபவர்கள். டிரைவர்களின் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு இவர்களின் அறிவு பெரிய அளவில் உபயோகப்படும்.
டாக்ஸிக்கும், கால் டாக்ஸிக்கும் எனக்குத் தெரிந்த வித்தியாசம், டாக்ஸியில் ‘அப் அண்ட் டௌன்’ என்று கணக்குப் போட்டுக் காசு கேட்பார்கள். கால் டாக்ஸியில் ஒரு வழிப் போக்கின்போதே இரண்டு மடங்காகப் பணத்தைக் கேட்டு வாங்கிவிடுவார்கள். அதாவது, மீட்டர் காட்டும் தொகையைத்தான். இப்போது குறைந்தபட்சத் தொகையாக ஐம்பது ரூபாயை வைத்திருக்கிறார்கள்.
சென்னையைப் பொறுத்தவரை கால் டாக்ஸியின் தேவை அதிகம்தான். மிதக்கும் மக்கள் தொகை, வெளியூர் சென்று வீடு மீள்வோர், வெளியூருக்குப் போகிறவர்கள், தற்காலிகப் பயணவான்கள், இறக்கை வைத்த மீன்கள் பறக்கக் காத்திருக்கும் மீனம்பாக்கம், இரும்பு இணைகளின் மீது உருளக் காத்திருக்கும் எழும்பூர் - சென்ட்ரல் ரயிலடிகள், பளிங்கு வழுக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம், ரிப்பன் கட்டடம், நாடக சபைகள், கோட்டை, கோடம்பாக்கம் என அதன் விஸ்தீரணமும் விசித்திரமும் மிகப் பரந்துபட்டது.
நான் பயணித்த காரின் சாரதி, குடிக்கிற பழக்கமுடையவர்களின் குணாதிசயங்கள், கால் டாக்ஸி டிரைவர்களிடம் மட்டுமே பத்துப் பன்னிரண்டு செல்போன்களை அழுத்திய ஒருவனின் சாகசங்கள் என விவரித்துக்கொண்டே தி.நகர் போனார்.
தி.நகர், பனகல் பூங்காவுக்கு அருகே எடைக்கு எடை எதையாவது வாங்கிய பைகளுடன் குடும்பமாக ஏறுபவர்கள் அதிகம். சுமைகள் இல்லாத உலகம் சாத்தியமில்லை என்பதைஅனைவருமே புரிந்து கொண்டாயிற்று. விலை மிகுந்த பைகளை நடுவில் வைத்துவிட்டு மனிதர்கள் ஒண்டி அமரவேண்டியதுதான். இவ்விதங்களிலான லகு ரகப் பயணங்கள் தவிர, அவசர ஆபத்துக் காலத்தில் விரைந்து வண்டியோட்டிய கதைகளை ஒவ்வொரு காரின் ஸ்டீயரிங்கும் சொல்லவே செய்கின்றன
தி.நகரில் சவாரிக்கு அழைக்கப்பட்ட கால் டாக்ஸி பல்லாவரம், தாம்பரம் என பல ‘ரம்’களைக் கடந்து பெருநகர எல்லையில் ஒரு குடும்பத்தை விட்டுவிட்டு வந்து கொண்டு இருந்த வேளையில், நண்பர் திருப்பதிசாமி என்னை தொலைபேசியில் அழைத்தார். அவரைப் பார்க்க பல்லாவரம் சென்றோம்.
திருப்பதிசாமியும் அவரது மனைவி நிர்மலாவும் மகள் காவ்யா நாச்சம்மாளையும் அழைத்துக் கொண்டு, மனோகரன் - மகேஸ்வரி தம்பதியைப் பார்க்கச் சென்ற அந்தப் பயணத்தில், திருப்பதிசாமி தமிழ், திராவிடம், சமணம் ஆகியவற்றைப் பேசிக்கொண்டு வந்தார். காரில் சென்று இறங்கிய எங்களை வரவேற்றது மனோகரனின் மகன் பாரிவேந்தன். அட... புத்தாயிரத்துக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கும்கூட தமிழில் பெயர் வைக்கப்படுகிறதே என வியந்தேன். கால் டாக்ஸிக்கு தமிழில் என்ன பெயர் வைக்கலாம்?
பம்மலில், கால் டாக்ஸியின் டிரைவருடனான தொடர்புக்கு அன்றைய அளவில் விடை தர வேண்டியிருந்தது. ‘‘பயணம் ரொம்ப நன்றாக இருந்தது’’ என்றேன்.
‘‘எங்கள் ஓனரிடம் சொல்லுங்கள்’’ என்று சிரித்தார்.
அதுதானே, நாம் கணக்குகளை மறக்கிறபோது யாராவது சொல்லித்தருவார்கள்!
மினிமம் சார்ஜ் 3 கி.மீ-க்கு ரூ.50-ம் அதற்கு மேல் கி.மீ-க்கு ரூ.10 வீதம் வசூலிக்கிறார்கள். இரவு 11 முதல் காலை 5 மணி வரை 25 சதவிகிதம் கூடுதலாக வசூலிக்கிறார்கள். அதேபோல் புறநகர் பகுதிக்குச் செல்வதற்கும் 25 சதவிகிதம் கூடுதல் கட்டணமாம். அதாவது, நகருக்குள் ரூ.200 ஆகிறது என்றால், புறநகர் பகுதிக்கு ரூ.250 ஆகும்.
 
பிஸி பிஸினஸ்!
சென்னை போன்ற நகரில் குறைந்தது 50 கார்கள் இருந்தால்தான் கால் டாக்ஸி பிஸினஸ் நடத்த முடியும். அதிகபட்சமாக 300 கார்கள் வரை வைத்து பிஸினஸ் நடத்துகிறவர்களும் உண்டு. ‘300 டாக்ஸியை வாங்க முதலீடுக்கு எங்கே போவது?’ என்று தயங்கத் தேவையில்லை. இதில் 95 சதவீதம் கால் டாக்ஸி நிறுவனத்துக்குச் சொந்தமானது இல்லை. கால் டாக்ஸி உரிமையாளர்களுடன் சின்னச் சின்ன தொழில்முனைவோர் ஒப்பந்தம் செய்துகொண்டு தங்கள் கார்களை இவர்களுக்கு உள்வாடகைக்குக் கொடுப்பார்கள்.

வயர்லெஸ் மைக் வைப்பதற்கு கார் ஒன்றுக்கு இருபது ஆயிரம் ரூபாய் செலவாகுமாம். இதற்கு சர்வீஸ் சார்ஜாக ஒரு டாக்ஸிக்கு ரூ.700 வீதம் வயர்லெஸ் ஏஜென்ஸிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்!

No comments:

Post a Comment