Friday 3 July 2015

பழைய கார் வாங்க... விற்க..

பழைய கார் மார்க்கெட் இப்போது செம பரபரப்பில் இருக்கிறது. பழைய கார்களை விற்பனை செய்ய, மூலைக்கு மூலை கண்காட்சிகள் நடந்தபடி இருக்கின்றன. கார் டீலர்களே, பழைய கார்களை வாங்கி விற்க, தனியாக ஷோரூம்கள் திறந்துவிட்டார்கள். இணையதளங்கள் வழியாகவும் பழைய கார் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்கினால், ‘எக்சேஞ்ச் போனஸ்’, ‘லாயல்ட்டி போனஸ்’ எல்லாம் கொடுக்கிறார்கள். அதனால், ஏற்கெனவே பழைய கார் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
பழைய கார் மார்க்கெட்டில் நீண்ட அனுபவமுள்ள டி.எஸ்.மகாலிங்கம் அண்டு சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கே.ரவிஷங்கர், பழைய கார் வாங்குவதிலும் விற்பதிலும் இருக்கின்ற சூட்சுமங்களை விளக்கினார்.
பழைய கார் மார்க்கெட்டில் அதிகக் கிராக்கியுள்ள கார்கள் எவை?
‘‘மாருதி 800, ஆல்ட்டோ, சான்ட்ரோ ஆகிய கார்கள்தான் சந்தைக்கு அதிகம் வருகின்றன.
இவைதான் அதிகமாகவும் விற்பனை ஆகின்றன. வங்கி மேலாளர்கள், அதிகாரிகள் போன்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்போது, அடுத்த வகை காரை வாங்க பழைய காரை விற்கிறார்கள். முதன்முதலாக கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த பழைய கார்களின் விலை சௌகரியமாக இருப்பதால், அவர்கள் அதை வாங்குகிறார்கள். அதே மாதிரி, பைக்கிலிருந்து காருக்கு மாறுபவர்களால் அதிக பட்ஜெட் ஒதுக்க முடியாது. அதனால், இவர்கள் நாடுவதும் பழைய கார் சந்தையைத்தான்.’’
‘‘விலை உயர்ந்த நவீன கார்களும் உடனடியாக பழைய கார் சந்தைக்கு வருகிறதே?’’
‘‘பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கார் வாங்க நிறைய சாய்ஸ் கிடையாது. இப்போதுஅப்படியில்லை. மாதத்துக்கு நான்கு புதிய கார்களாவது அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. புதிதாக அறிமுகமாகிற காரை உடனடியாக வாங்குவது என்பது அந்தஸ்து, கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயமாக மாறிவிட்டது. ஆகவே, புதிய மாடல் காரை வாங்க ஏற்கெனவே இருக்கும் காரை பலர் விற்கிறார்கள். சில சமயங்களில் விற்பனைக்கு வருகிற கார், வாங்கி ஒரு வருடம்கூட பூர்த்தியாகியிருக்காது. இவற்றை விற்கும்போது வருமான வரியில் சில சலுகைகளும் கிடைக்கின்றன.’’
‘‘இணையதளத்தில்கூட வாகன விற்பனை நடக்கிறதே?’’
‘‘இணையதளங்களில் வாகன விற்பனை என்பது நம்ப கஷ்டமாக இருக்கிறது. காரணம், வாகனத்தை நேரில் அலசி ஆராய்ந்து பார்த்தே பல சமயங்களில் கணிப்பு தவறாகிவிடுகிறது. அப்படியிருக்கும்போது நேரில் பார்க்காமல் இணையதளத்திலேயே கார் வாங்க முடிவுசெய்வது ஆச்சர்யம்தான்.’’
‘‘சில கார் டீலர்களும் கார் தயாரிக்கும் நிறுவனங்களும் பழைய காரை வாங்கி விற்கும் வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார்களே?’’
‘‘புது கார்களின் விற்பனைக்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதில் பாதி அளவுக்காவது பழைய கார்களின் விற்பனையும் சந்தடியில்லாமல் நடந்துகொண்டு இருக்கிறது. உதாரணத்துக்கு, பழைய மாருதி கார்களை விற்கிற வாடிக்கையாளர் தங்கள் கையைவிட்டு போய்விடக் கூடாதே என்ற அச்சத்தில், மாருதியே பழைய காரை வாங்கி விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்து விட்டது. மாருதியைத் தொடர்ந்து ஏறக்குறைய ஏனைய கார் நிறுவனங்களும் இதே ரீதியில் கார்களை வாங்கி விற்கும் மையங்களை துவங்கி வருகிறார்கள்.’’
‘‘எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்ட்டி போனஸ் என்றெல்லாம் வாரி வாரிக் கொடுத்து, வாடிக்கையாளர்களை பழைய கார் மையங்கள் உற்சாகப்படுத்துகிறதே?’’
‘‘கார் விற்பனை செய்ய விரும்பும் மிஸ்டர் குடிமகன், அதை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். ஆனால், தங்கள் பழைய காருக்கு வெளியே என்ன விலை கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு முடிவெடுப்பதே புத்திசாலித்தனமாக இருக்கும்.’’
‘‘பழைய கார் வாங்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?’’
‘‘பழைய கார் வாங்கச் செல்பவர்கள், பகலில் சென்று பார்ப்பது நல்லது. இரவு நேரத்தில் பார்த்து எதையும் முடிவு செய்யக் கூடாது. என்னதான் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தாலும் இருட்டு பல விஷயங்களை நமது கண்களில் இருந்து மறைத்துவிடும்.
காரின் வெளிப் பக்கங்களில் இருக்கும் சிறு சிறு கீறல்களைக் கணக்கில்கொள்ளக் கூடாது. அவை சுலபத்தில் சரிசெய்துவிடக் கூடியவை. பெரிய விபத்தில் சிக்கி படுசேதமடைந்த காரை சரிசெய்து இருக்கிறார்களா என்பதை பானெட், கதவுகள், பின்புறக் கதவு(டிக்கி) ஆகியவற்றை திறந்து பேனல்கள் இணைக்கப்பட்டு இருக்கும் பகுதியை உன்னிப்பாகக் கவனித்தாலே புரியும். ஒரிஜினல் அளவுக்கு மாற்றியிருந்தாலும் கண்டுபிடித்துவிட முடியும் (பார்க்க- படங்கள்). விபத்தில் சிக்கிய காரைக் கண்டுபிடிக்க வேறொரு வழியும் இருக்கிறது. கார் விபத்தில் சிக்கி, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்யப்பட்டு இருந்தால், பாலிஸியில் அதற்குக் கூடுதலாக தொகை வசூலித்து இருப்பார்கள். அதேபோல், ஸ்பீடோ மீட்டரைத் திருத்தி குறைந்த கி.மீ ஓடியிருப்பதாகக் காட்டி விற்கும் முயற்சியும் நடப்பது உண்டு. இதை, டயரின் தேய்மானம், இன்ஜின் பிக்-அப், சர்வீஸ் ஆகியவற்றை ஒப்பிட்டுக் கண்டுபிடிக்க வேண்டும்.
10,000 கி.மீ மட்டுமே ஓடியதாகச் சிலர் பொய் சொல்லக்கூடும். ஆனால், காரின் டயர்களைப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
Click to enlarge
ஆர்.சி புத்தகம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். மறுபிரதியாக (டூப்ளிகேட்) இருக்கும்பட்சத்தில் ஒரிஜினல் எங்காவது அடமானத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும். காரில் உள்ள இன்ஜின், சேஸி ஆகியவற்றின் நம்பரை ஆர்.சி புத்தகத்தில் இருக்கிற நம்பர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். .
ஆர்.சி புத்தகத்தில் கடனுதவி வாங்கிய எண்டார்ஸ்மென்ட் இருந்தால், அது ரத்து செய்யப்பட்டு இருக்கிறதா எனக் கவனிக்க வேண்டும். காரின் சர்வீஸ் ரெக்கார்டுகளை ஆராய்ந்தாலே காரை எப்படிப் பராமரித்து இருக்கிறார்கள் என்பது புரிந்து விடும்.’’
‘‘விற்கும்போது என்ன கவனிக்க வேண்டும்?’’
‘‘கார் தயாரிக்கும் நிறுவனத்தினர் தந்துள்ள ஓனர்ஸ் மேனுவலில் குறிப்பிட்டுள்ளவாறு, சரியாகவும் முறையாகவும் சர்வீஸ் செய்தால், சுமார் 5 வருடங்களுக்குப் பெரிய செலவுகள் எதுவும் வராது. ஆயில் மாற்றுவது, டயர்களை மாற்றிப் பொருத்துவது, காரைச் சுத்தமாக வைத்திருப்பது ஆகியவற்றைச் சரியாகச் செய்துவந்தால், உங்கள் காரின் மதிப்புகூடும். நீங்கள் சர்வீஸ் செய்யும் ரெக்கார்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். அது உங்கள் காரை அதிக விலைக்கு விற்க உதவியாக இருக்கும்.
காரை முறையான நிறுவனங்களில் விற்கும்போதோ அல்லது நேரடியாக விற்கும்போதோ வாங்குபவர் உடனடியாக ஆர்.சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்கிறாரா என உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஆர்.சி புத்தகத்தில் ஓனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விலை குறையும் என்பதால், சிலர் பெயர் மாற்றம் செய்யாமல் உங்கள் பெயரிலேயே வாகனத்தை வைத்திருப்பார்கள். இது ஆபத்தானது. காரணம், உங்கள் பெயரில் இருக்கிற வாகனம் விபத்து, திருட்டு, கடத்தல் என ஏதாவது ஒன்றில் சம்பந்தப்பட்டால், நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே, இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும்!’’

No comments:

Post a Comment