Saturday 11 July 2015

மழையில் தத்தளிக்காமல் இருக்க...

மழை என்றாலே சிலருக்கு ரம்மியமான நிகழ்வாகவும், சிலருக்கு சிக்கலான தருணமாகவும் இருக்கிறது. மழைக் காலத்தில் வாகனங்களை ஓட்டுவது சவாலான விஷயம். மழை நீர் தேங்கிய சாலையில் மேடு பள்ளம் அறிய முடியாமல், தேங்கிய நீரின் அளவு அறியாமலும் தவித்துப்போய் விடுவோம்.
மழைக் காலத்தில் வாகனங்களுக்கென சில பிரச்னைகள் உண்டு. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பெரிய அளவில் பர்ஸை பதம் பார்த்து விடும். இதைத் தவிர்க்க, சில பராமரிப்பு முறைகளை கடைப்பிடித்தால் செலவை தவிர்க்கலாம். அதற்கான டிப்ஸ்...
பேட்டரி முதலில் கவனிக்க வேண்டியது பேட்டரி. நல்ல கண்டிஷனில், தேவையான சார்ஜுடன் இருப்பது அவசியம். ஸ்டார்ட் செய்ய, வைப்பர் பிளேடுகள் வேலை செய்ய, விளக்குகள் சரிவர இயங்க பேட்டரி அவசியம். மேலும், எலெக்ட்ரிகல் ஒயர்கள் சார்ட் சர்க்யூட் ஆகாமல் சரியாக இன்ஷ§லேசன் செய்யப்பட்டு இருப்பது முக்கியம்.
வைப்பர் மழையில் செல்லும்போது ஆபத்பாந்தவன் வைப்பர்தான். வைப்பர் பிளேடுகள் சரியாக உள்ளதா என்று சோதித்து, தேய்ந்திருந்தால் புதிதாக மாற்றிவிடுவது நல்லது.
காருக்கு மேலே நிறுத்தி வைக்கும் கார் மழையிலேயே நனையும் என்றால் கவர் போட்டு மூடி வைப்பது நல்லது. காரின் முன் பகுதி கண்ணாடியின் கீழ் இருக்கும் 'ஃப்ரெஷ் ஏர் வென்ட்'டை பராமரிப்பது அவசியம். இதில் அடைப்பு இருந்தால் நீர் தேங்கி காலப்போக்கில் பானெட்டின் உள்பகுதி துருப் பிடித்துவிடும். பழைய கார் மார்க்கெட்டில் துருப்பிடித்த கார்களுக்கு மதிப்புக் குறைவு.
காருக்குக் கீழே - சேஸி சேஸி பகுதியில் கல், மண், சேறு போன்றவற்றால் துருப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. மேலும், காரின் கீழ்ப் பகுதி பாதிக்காமல் இருக்க 'அண்டர் சேஸி கோட்டிங்' செய்திருப்பது அவசியம். காரில் கீழ்ப் பகுதியில் ஏதாவது விரிசல்கள் இருக்கிறதா என சோதித்துக்கொள்ளுங்கள்.
கதவுகள் மழை நீர் கதவுக்கிடையில் உள்ளே வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கதவுகளில் இருக்கும் ரப்பர் பீடிங்குகள் சரியாக இருந்தால் நீர் உள்ளே வராது.
டயர்கள் ஸ்டெப்னி டயர் முதற்கொண்டு காற்றழுத்தத்தைக் கச்சிதமாக வைத்துக்கொள்வது அவசியம். கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் மழையால் வாகனம் க்ரிப்பை இழந்துவிடும். மேலும், பஞ்சர் ஆகவும் வாய்ப்புகள் அதிகம்.
தேங்கிய நீரில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்தில் காரை வேகமாகச் செலுத்தாதீர்கள். சாலையில் செல்பவர்கள் மீது நீரை வாரி இறைப்பது மட்டுமல்லாமல், உங்கள் காரின் பக்கவாட்டிலும் சேறும் சகதியுமாக ஆகிவிடும். மேலும், சாலையில் மேடு பள்ளங்கள் இருக்கலாம். அதனால், குறைவான கியரில் சீராகச் செல்வது பாதுகாப்பாக இருக்கும்.
பிரேக் ஈரத்தின் காரணமாக பிரேக் ஷு நனைந்து பிரேக் அழுத்தும்போது நழுவி கார் நிற்காமல் போகும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, நீர் தேங்கிய இடத்தில் வாகனத்தை செலுத்த நேர்ந்தால், அந்த இடத்தை தாண்டியதும் பிரேக் பெடலை லேசாக அழுத்தி அழுத்தி எடுங்கள். இப்படிச் செய்வதால் பிரேக் டிரம் - ஷு சூடேறி ஈரம் உலர்ந்துவிடும். முடிந்த வரை உங்கள் காரின் பாடி நீரில் மூழ்கும்படி காரை ஓட்டாதீர்கள். அதையும் மீறி காரை ஓட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், ஆக்ஸிலரேட்டரைக் குறைக்காமல் குறைந்த கியரில் கடந்துவிடுங்கள்.

No comments:

Post a Comment