Friday 3 July 2015

தவிக்க விடலாமா சக்தி தரும் தோழனை (பேட்டரி)?

‘‘ரயில் கிளம்ப பத்து நிமிஷம்தான் இருக்கு, சீக்கிரம்... சீக்கிரம்’’ என மற்றவர்கள் அவசரப்படுத்த கார் ஸ்டார்ட் ஆகாமல் தவிக்கிறவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?
இப்படி அடிப்பட்டுதான் கார் பேட்டரியின் அருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லையே...உங்கள் கார் பேட்டரியை பராமரிக்கவும், அதை சர்வீஸ் செய்ய கொடுக்கும் போது பேட்டரியை முறையாகத்தான் அவர்கள் சார்ஜ் செய்கிறார்களா, என்பதை உஷாராக இருந்து உறுதி செய்து கொள்ளவும் இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்.
 பேட்டரி பொருத்தும் கிளாம்பில் துரு இருந்தால், அது பேட்டரியைப் பாதித்துவிடும். அதனால், கிளாம்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 பேட்டரி செயல்படும்போது சூடேறும். அப்போது நீர் ஆவியாகிக் குறைந்து கொண்டே வரும். நீரின் அளவு குறையக் குறைய காற்று உள்ளே புகுந்து பிளேட்டை அரிக்கத் தொடங்கி விடும். பிளேட்டிலிருக்கும் ஈயம் (லெட்) வேதியியல் மாற்றத்தால் லெட் ஆக்ஸைடாக மாறும். லெட் என்பது நெகட்டிவ், லெட் ஆக்ஸைடு என்பது பாசிட்டிவ். பாசிட்டிவும், நெகட்டிவும் ஒன்றாக இணைந்து விட்டால் மின்சாரமே உற்பத்தியாகாமல் போய்விடும்.
 பேட்டரியை நிரப்புவதற்கு குழாய் நீர், மினரல் வாட்டர் போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது. சாதாரண தண்ணீரிலும், மினரல் வாட்டரிலும் இருக்கின்ற உப்பு, லெட் பிளேட்டை அரித்துவிடும். டிஸ்டில்ட் வாட்டர் என்பது எந்த உப்பும், மினரல்களும் இல்லாத வெறும் நீர். பேட்டரியில் டிஸ்டில்ட் வாட்டரை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
 பேட்டரியில் குறியிட்டுள்ள அளவுக்கு மேல் நீரை நிரப்பினால், ஆசிட் பொங்கி, பேட்டரியைச் சுற்றியுள்ள பாகங்களை அரித்துவிடும்.
 பேட்டரியில் பவர் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள டெர்மினல்களை இரண்டு ஒயர்களால் டச் செய்து, தீப்பொறி வருகிறதா என்று பார்க்கக்கூடாது. டெர்மினல்களை ஒயர் மூலம் ஷார்ட் செய்தால் பேட்டரியே செயலிழந்துவிட வாய்ப்பு உண்டு.
 இரு சக்கர வாகனங்களில் உள்ள பேட்டரியின் வென்ட் ஹோஸில் (குழாய்) மடிப்பு, அழுத்தம் போன்றவை இருந்தால் உள்ளிருந்து கேஸ் வெளியில் வரமுடியாமல் பேட்டரியே வெடித்து விடக்கூடும். அதிகமான வெப்பம் பட்டால் பிளாஸ்டிக் ஹோஸ் உருகிவிடும் என்பதால், அதை வெப்பமான பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
 இன்ஜினின் rpm அல்லது எலெக்ட்ரிகலில் தகுந்த மாற்றங்களைச் செய்யாமல் ஹாலஜன் லைட்டுகள், ஒயர்லெஸ் செட், மியூஸிக் சிஸ்டம் போன்ற கூடுதலாக மின்சாரத்தை இழுக்கும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகளை இணைக்கக்கூடாது. அப்படிச் செய்தால் பேட்டரியின் ஆயுள் விரைவில் முடிந்துவிடும்.
 பேட்டரியைச் சுத்தம் செய்யும்போது தண்ணீரை நன்றாக உறிஞ்சக் கூடிய பருத்தித் துணிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். செயற்கை இழைத்துணிகளையோ, கம்பளித் துணியையோ பயன்படுத்தினால் தண்ணீர் பேட்டரியின் உள்ளே இறங்கி செயலிழக்கக்கூடும்.
 பேட்டரியில் சார்ஜ் இறங்கியிருக்கும் போது வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால், இன்னும் பலவீனமடைந்து பேட்டரியே வீணாகப் போய்விடக் கூடும்.

No comments:

Post a Comment