Saturday 11 July 2015

கார்கள் - எதை வாங்கலாம்? எதை தவிர்க்கலாம்?

சார்லஸ்


தேவையைப் பொருத்து, பட்ஜெட்டைச் சுருக்கி, ஸ்டைலைப் பார்த்து காரை வாங்குகிறோம். இந்த காரைத்தான் வாங்குவது என முடிவெடுத்துவிட்ட பிறகு, கொடுக்கிற காசுக்கு இது சரியான கார்தானா என்பதில், எல்லோருக்குமே நிச்சயம் குழப்பம் வரும். 2 லட்ச ரூபாய் டாடா நானோவாக இருந்தாலும் சரி, 30 லட்ச ரூபாய் பென்ஸாக இருந்தாலும் சரி, விலைக்கு ஏற்ற காராக இருக்க வேண்டும். இதைக் கண்டுபிடிக்க முடியாமல் சிலர், விற்காத காரை வாங்கிவிட்டுப் புலம்புவதும், 'அதிகம் விற்பனையாகாத கார். ஆனால், நல்ல கார்’ என்று தாங்களாகவே முடிவெடுத்து, ஏதாவது ஒரு காரை வாங்கிவிட்டு அவதிப்படுவதையும் பார்க்கிறோம். உண்மையிலேயே மார்க்கெட்டில் இன்று விலை போகாத கார்கள் எவை? அந்த கார்களின் ப்ளஸ் என்ன, மைனஸ் என்ன? எதை வாங்கலாம், எதைத் தவிர்க்கலாம்?

ஜெனரல் மோட்டார்ஸின் சின்ன கார், செவர்லே ஸ்பார்க். இதன் ஜூன் மாத விற்பனை இந்தியா முழுக்க 293 கார்கள் மட்டுமே. ஹூண்டாய் சான்ட்ரோ, இயான், மாருதி 800, ஆல்ட்டோ, வேகன்-ஆர் ஆகிய கார்கள் மோதும் இந்த செக்மென்ட்டில், ஸ்பார்க்தான் மிகக் குறைவாக விற்பனையாகும் கார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களில், வெறும் 845 ஸ்பார்க் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.
என்ன ப்ளஸ்? என்ன மைனஸ்?
பீட் விற்பனைக்கு வந்ததால், ஸ்பார்க்கின் விற்பனை குறைந்ததே தவிர, ஸ்பார்க்கில் குறை என்று சொல்ல குறிப்பிட்ட விஷயங்கள் எதுவும் இல்லை. 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பார்க்கில், கடந்த ஆறு ஆண்டுகளாகத் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. இது பெரிய மைனஸ்தான். நான்கு பேர் பயணிக்கக்கூடிய காரான ஸ்பார்க்கில், முன் பக்க இருக்கைகள் சொகுசாக இல்லை. இதனால், நீண்ட தூரப் பயணம் செய்யும்போது, வலியை ஏற்படுத்துகிறது. 1 லிட்டர் இன்ஜின்கொண்ட ஸ்பார்க் அதிகபட்சம் 63 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது.
பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை, நகருக்குள் பயணிக்க சிறந்த கார் ஸ்பார்க். கிளட்ச் லைட்டாக இருப்பதோடு, 5 ஸ்பீடு கியர் பாக்ஸும் பயன்படுத்த எளிதாக இருக்கிறது. ஓட்டுதல் தரத்திலும், ஸ்டெபிளிட்டியிலும் குறை சொல்ல முடியாத கார் இது. மைலேஜ், லிட்டருக்கு நகருக்குள் 12.3 கி.மீ, நெடுஞ்சாலையில் 16.9 கி.மீ தருகிறது.
விலை
விலையைப் பொறுத்தவரை, செவர்லே ஸ்பார்க்கில் வசதிகள் அதிகம்கொண்ட மாடலின் சென்னை ஆன் ரோடு விலை ரூ.4.66 லட்சம். பவர் ஸ்டீயரிங், ரியர் வியூ கண்ணாடிகளை காருக்கு உள்ளே இருந்தே மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி, நான்கு கதவுகளிலும் பவர் விண்டோ, பின் பக்கக் கண்ணாடியைத் துடைக்கும் டிஃபாகர், எம்பி-3 சிடி ப்ளேயர், பென் டிரைவ் இணைக்கும் வசதி ஆகியவை இருக்கின்றன. காற்றுப் பை வசதி மட்டும் இதில் இல்லை. ஸ்பார்க்குடன் போட்டி போடும் ஹூண்டாய் சான்ட்ரோவின் அதிக வசதிகள் கொண்ட ஜிஎல்எஸ் மாடலின் விலையும் 4.66 லட்சம்தான். ஆனால், முன் பக்கக் கதவுகளில் மட்டுமே பவர் விண்டோ வசதி உண்டு.
ஸ்பார்க்கைப் பொறுத்தவரை விலையும் குறைவு, வசதிகளும் அதிகம் என்பதோடு, தரமான இன்ஜின் என்பதால் வாங்கலாம். 58,000 ரூபாய் கேஷ் டிஸ்கவுன்ட்டும் உண்டு!

மாதத்துக்கு 65,000 முதல் 70,000 கார்கள் வரை விற்பனை ஆகும் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில், போட்டி போடுகிறது ரெனோ பல்ஸ். நிஸான் மைக்ராவின் உட்டாலக்கடிதான் இது. கூட்டணிக் கொள்கைப்படி நிஸான் மைக்ராவின் அதே பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் இந்த காரின் தோற்றத்தில் மட்டுமே சின்னச் சின்ன வித்தியாசங்கள். மற்றபடி மைக்ராவுக்கும் பல்ஸுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. ஆனால், இதே செக்மென்ட்டில் மற்ற கார்கள் எல்லாம் சக்கைப் போடு போடும் நிலையில், ரெனோ பல்ஸின் விற்பனை ரொம்பவும் சுமார். மாதம் 400 முதல் 500 கார்கள்தான் விற்பனையாகிறது. மைக்ராவும் இதே நிலையில்தான் இருந்தது. ஏப்ரல் மாத மைக்ரா கார்களின் விற்பனை இந்தியா முழுக்க 335 கார்கள் மட்டுமே! ஆனால், மைக்ரா இப்போது புதிய உருவத்துடன் வந்துவிட்டதால், விற்பனையில் முன்னேறிவிட்டது. ஆனால், பல்ஸ் சரிந்து கொண்டே போகிறது.
என்ன ப்ளஸ் என்ன மைனஸ்?
தோற்றத்தைப் பொறுத்தவரை மைக்ரா - பல்ஸ் இரண்டுமே கவர்ச்சிகரமான கார்கள் இல்லை. பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும் போது, டீசல் கார்தான் பெஸ்ட். ரெனோ பல்ஸ் டீசல், அதிகபட்சமாக 63 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. மாருதி ஸ்விஃப்ட் டீசல் 0-100 கி.மீ வேகத்தை 13.65 விநாடிகளில் கடக்க, பல்ஸ் ரொம்பவும் பொறுமையாக இந்த வேகத்தைக் கடக்க 16.2 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. ஆனால், ஓட்டுதல் தரத்தைப் பொறுத்தவரை பல்ஸ் சிறந்த கார். மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது, அலுங்கல் குலுங்கல்களில் இருந்து காருக்குள் இருப்பவர்களைத் தப்ப வைக்கிறது சஸ்பென்ஷன்.
விலை
விலையைப் பொறுத்தவரை, அதிக வசதிகள்கொண்ட ரெனோ பல்ஸின் சென்னை ஆன் ரோடு விலை 7.73 லட்சம். எலெக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், கீ - லெஸ் என்ட்ரி, அட்ஜஸ்ட்டபிள் ஸ்டீயரிங், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி, சிடி, எம்பி-3 மற்றும் பென் டிரைவ் இணைக்கும் வசதி ப்ளேயரில் உண்டு. பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, டிரைவருக்கு மட்டுமே காற்றுப் பை வசதி. சர்வீஸ், மெயின்டனன்ஸ் மற்றும் ரீ-சேல் வேல்யூ ஆகியவற்றில் அடிவாங்கிவிடுகிறது பல்ஸ். சிறப்பம்சங்களும் அதிகம் இல்லை. மேலும், டிசைனும் மிரட்டலாக இல்லை என்பது இதன் மைனஸ்.

சின்ன கார்களில் ராஜாவாக இருக்கும் மாருதிக்கு, பெரிய கார்களின் பேட்டையில் செல்வாக்கு இல்லை. மிட் சைஸ் கார்களில் ஹூண்டாய், ஹோண்டா, ஃபோக்ஸ்வாகன் நிறுவனங்களிடம் படாதபாடு படுகிறது எஸ்எக்ஸ்-4. கடந்த ஆறு மாதங்களாக 1,000 கார்களுக்கும் குறைவான கார்களையே விற்பனை செய்திருக்கிறது மாருதி. ஹூண்டாய் வெர்னா மாதம் 4,000 முதல் 5,000 கார்கள் வரை விற்பனையாக, மாருதிதான் இந்த மார்க்கெட்டில் கடைசி இடத்தில் இருக்கிறது.
என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
கடந்த மார்ச் மாதம் எஸ்எக்ஸ்-4 காரில் சில மாற்றங்களைச் செய்து வெளியிட்டது மாருதி. இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனுமே எஸ்எக்ஸ்-4 விற்பனையில் இருக்கிறது. பெட்ரோல் இன்ஜினின் மைலேஜ்  குறைவு என்பதால், எடுபடவில்லை. அதனால், டீசல் இன்ஜினுடன் எஸ்எக்ஸ்-4 காரை விற்பனைக்குக் கொண்டுவந்தது மாருதி. 90bhp சக்திகொண்ட மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் 0-100 கி.மீ வேகத்தை 13.8 விநாடிகளில் கடக்கிறது. இதன் போட்டி காரான ஹூண்டாய் வெர்னா, இதே வேகத்தை 10.54 விநாடிகளில் கடந்துவிடும். பெர்ஃபாமென்ஸ் மட்டும் அல்லாமல், காரின் உள்ளேயும் பல மைனஸ் இருப்பதுதான் எஸ்எக்ஸ்-4 காரின் தோல்விக்குக் காரணம். பின் பக்க இருக்கைகள் வசதியாக இருந்தாலும், கால்களை நீட்டி மடக்கி உட்கார போதுமான இடம் இல்லை. மேலும், காரின் முன் பக்க 'ஏ’ பில்லர் மிகவும் அகலமாக இருப்பது, வளைவுகளில் காரைத் திருப்பும்போது பார்வையை மறைக்கிறது. ஃபியட்டின் டீசல் இன்ஜின் என்பதால், மைலேஜ் ஓகே. இது நகருக்குள் லிட்டருக்கு 13.2 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.1 கி.மீ மைலேஜ் தருகிறது. ஹூண்டாய் வெர்னா, நகருக்குள் 13.8 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.9 கி.மீ மைலேஜ் தருகிறது.
விலை
விலை மட்டுமே மாருதியின் பலம். ஆனால், விலை குறைவாக இருந்தும் இந்த காரைப் பலரும் வாங்கத் தயங்குவதற்குக் காரணம், இதன் பெர்ஃபாமென்ஸும், காரின் உள்பக்க வடிவமைப்பும்தான். எஸ்எக்ஸ்-4 காரின் விலை உயர்ந்த மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 11.08 லட்சம். இதே செக்மென்ட்டில் இருக்கும் ஹூண்டாய் வெர்னாவின் விலை 13.89 லட்சம். எஸ்எக்ஸ்-4 காரைவிட விலை அதிகம் என்றாலும் கீ-லெஸ் என்ட்ரி, கிளைமேட் கன்ட்ரோல், சன் ரூஃப், எலெக்ட்ரிக் ஃபோல்டிங் மிரர்ஸ், ரிவர்ஸ் கேமரா, கூல்டு க்ளாவ் பாக்ஸ் என வெர்னாவில் பல சிறப்பம்சங்கள் உண்டு!

ரெனோவின் முழுமையான எஸ்யூவி கார்தான் கோலியோஸ். கடந்த ஆறு மாதங்களில் இதன் அதிகபட்ச மாத விற்பனை 37 கார்கள் மட்டுமே! ஏப்ரல் மாதம் 10 கார்களாகவும், மே மாதம் 3 கார்களாகவும் இருந்த இதன் விற்பனை, ஜூன் மாதம் வெற்றிகரமாக பூஜ்ஜியத்தைத் தொட்டது. கோலியோஸ் விற்பனையாகும் எஸ்யூவி செக்மென்ட்டின் ஜூன் மாத விற்பனை எண்ணிக்கை மட்டும் 2,078. இந்த செக்மென்ட்டில் அதிகமாக விற்பனையாகும் கார், டொயோட்டா ஃபார்ச்சூனர். ஜூன் மாதம் 1,561 பார்ச்சூனர் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.
என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
2 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின்கொண்டு, 150bhp சக்தியை வெளிப்படுத்துகிறது கோலியோஸ். 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உண்டு. டெக்னிக்கல் விவரங்கள் மிரட்டலாக இருந்தாலும், பெர்ஃபாமென்ஸ் மிரட்டலாக இல்லை என்பதுதான் இந்த காரின் தோல்விக்குக் காரணம். 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க 12.1 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர், இதே வேகத்தைக் கடக்க 11.8 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது.
ரெனோ கோலியோஸ், நகருக்குள் லிட்டருக்கு 9.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 12.5 கி.மீ மைலேஜ் தருகிறது. 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கொண்ட மாடல் மட்டுமே விற்பனைக்கு இருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இல்லை. ஆறு காற்றுப் பைகள், ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல் என சிறப்பம்சங்கள் அதிகமாக இருந்தாலும், விலைக்கேற்ற வகையில் காரின் உள்பக்கம் டிசைன் செய்யப்படவில்லை. அதேபோல், மேனுவல் கியர்பாக்ஸ் இல்லை என்பது இதன் மிகப் பெரிய மைனஸ்.
என்ன விலை?
ரெனோ கோலியோஸ் காரின் சென்னை ஆன் ரோடு விலை 29.11 லட்சம். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனரின் விலை 29 லட்சம். விலை 11 ஆயிரம் ரூபாய்தான் குறைவு என்பதல்ல... பெர்ஃபாமென்ஸில் ஃபார்ச்சூனருடன் கோலியோஸ் போட்டியே போட முடியாது என்பதுதான் உண்மை.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஃபியஸ்ட்டா காரின் விற்பனை, படு டல். கடந்த ஆறு மாதங்களில் ஜூன் மாதம் மட்டுமே 233 கார்கள் விற்பனையாகி இருக்கிறது. மே மாத விற்பனை வெறும் 53 கார்கள் தான்.
என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
1.5 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட ஃபியஸ்ட்டா, அதிகபட்சம் 90bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை 1800 ஆர்பிஎம் வரை டர்போ லேக் அதிகம் என்பதால், குறைவான வேகத்தில் பயணிப்பது மிகவும் சிரமம். நகர டிராஃபிக் நெருக்கடிகளில் மாட்டிக் கொண்டால், கியர்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். 1800 ஆர்பிஎம்-க்கு பிறகும் பிக்-அப் பிரமாதம் என்று சொல்ல முடியாது. 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க ஃபியஸ்ட்டா 13.9 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. இதே வேகத்தைப் போட்டி காரான ஹூண்டாய் வெர்னா, 10.54 விநாடிகளில் கடந்துவிடும். வேகம் போகப் போக ஃபியஸ்ட்டா மேலும் மந்தமாகிவிடுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 171 கி.மீ.
ஹூண்டாய் வெர்னா அதிகபட்சமாக மணிக்கு 191 கி.மீ வரைப் பறக்கிறது. பெர்ஃபாமென்ஸ் மட்டுமே இதன் மைனஸ் இல்லை. பின் பக்க இட வசதியிலும் ஃபியஸ்ட்டா பின்தங்கிவிடுகிறது. மற்ற மிட் சைஸ் கார்களுடன் ஒப்பிடும்போது, ஃபியஸ்ட்டாவின் டிக்கியிலும் இடம் குறைவு. வெறும் 430 லிட்டர் மட்டுமே இடம் உண்டு.
நகருக்குள் இது லிட்டருக்கு 13.9 கி.மீ, நெடுஞ்சாலையில் 17.4 கி.மீ மைலேஜ் தருகிறது. ஃபியஸ்ட்டாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கொண்ட மாடலும் உண்டு. இதன் பெர்ஃபாமென்ஸும் சுமார்தான். பியஸ்ட்டாவில் பெர்ஃபாமென்ஸ், இட வசதி மட்டுமே மைனஸ் இல்லை. விலையும் தான்.
ஃபோர்டு ஃபியஸ்ட்டாவின் விலை உயர்ந்த டீசல் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை 12.69 லட்சம். வசதிகளைப் பொறுத்தவரை ப்ளூ-டூத், கிளைமேட் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் உண்டு. ஆனால், ரிவர்ஸ் கேமரா இல்லை. ரிவர்ஸ் சென்ஸார் மட்டுமே உள்ளது. மேலும், கிட்டத்தட்ட 13 லட்ச ரூபாய் காரில் சன் ரூஃப் இல்லை என்பதோடு, இரண்டு காற்றுப் பைகள் மட்டுமே உள்ளன. ஹூண்டாய் வெர்னாவின் விலை உயர்ந்த மாடலில் 6 காற்றுப் பைகள் உண்டு.
 
ஹூண்டாயின் விலை உயர்ந்த பிரீமியம் செடான் கார் சொனாட்டா. கடந்த ஆண்டுதான் புதிய ஃப்ளூயிடிக் டிசைனுடன் விற்பனைக்கு வந்தது. ஃப்ளூயிடிக் டிசைன் வெர்னா போல, சொனாட்டாவையும் விற்பனையில் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்த்த ஹூண்டாய்க்கு, மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே!
நம் நாட்டில் மாதத்துக்கு 200 முதல் 250 வரை பீரிமியம் செடான் கார்கள் விற்பனையாகின்றன. ஸ்கோடா சூப்பர்ப் அதிகபட்சமாக ஜூன் மாதம் 126 கார்கள் விற்பனையானது. ஆனால், கடந்த ஆறு மாதங்களாகவே சொனாட்டாவின் மாத விற்பனை 20 கார்களைத் தாண்டவில்லை.
என்ன பிளஸ், என்ன மைனஸ்?
டிசைனைப் பொறுத்தவரை விலை உயர்ந்த சொகுசு செடான் கார்களுக்கு இணையாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது சொனாட்டா. காரின் முன் மற்றும் பின் பக்க இருக்கைகளில் இட வசதி தாராளம். 2.4 லிட்டர் டீசல் இன்ஜின்கொண்ட சொனாட்டா, அதிகபட்சம் 198bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் விற்பனையில் இருக்கிறது. ஆனால், ஸ்கோடா சூப்பர்ப், ஹோண்டா அக்கார்டு அளவுக்கு இந்த காரின் உள்பக்கம் தரமாக இல்லை. பில்டு குவாலிட்டியும் சுமார்தான்.
மேலும், 2 லிட்டர் இன்ஜின் மட்டுமே கொண்ட ஸ்கோடா சூப்பர்ப், 140 bhp சக்தியை மட்டுமே வெளிப்படுத்தினாலும் பெர்ஃபாமென்ஸில், சொனாட்டாவைவிட பின்தங்கிவிடவில்லை. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஸ்கோடா சூப்பர்ப், 0-100 கி.மீ வேகத்தை 11.22 விநாடிகளில் கடக்கிறது. சொனாட்டா, இதே வேகத்தை ஒரு விநாடிகள் முன்னதாக அதாவது 10.34 விநாடிகளில் கடக்கிறது. மைலேஜைப் பொறுத்தவரை சொனாட்டா நகருக்குள் லிட்டருக்கு 7.5 கி.மீ, நெடுஞ்சாலையில் 10.3 கி.மீ மைலேஜ் தருகிறது. ஸ்கோடா சூப்பர், நகருக்குள் 9.9 கி.மீ, நெடுஞ்சாலையில் 14.3 கி.மீ மைலேஜ் தருகிறது.
விலை
ஹுண்டாய் சொனாட்டா ஆட்டோமேட்டிக் மாடலின் விலை 23.56 லட்சம். ஸ்கோடா சூப்பர்பின் சென்னை விலை 29.47 லட்சம். கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் அதிகம். இருந்தும் சூப்பர்ப் ஹிட் ஆகக் காரணம், இதன் பில்டு குவாலிட்டியும் உள்பக்க பாகங்களின் தரமும், இன்ஜினும் மைலேஜும்தான். சிறப்பம்சங்களில் அதிகமாக இருக்கும் சொனாட்டாவை, மைலேஜ் ஒரு பிரச்னை இல்லை என்றால் வாங்கலாம்.
 
ரோப்பிய, ஜப்பான் மார்க்கெட்டில் செம ஹிட் அடித்த இந்த எம்பிவி, இந்தியாவில் எடுபடவே இல்லை. டொயோட்டா இனோவா, மாருதி எர்டிகா ஆகிய கார்களுடன் போட்டி போடுகிறது நிஸான் எவாலியா. டொயோட்டா இனோவா ஜூன் மாதம் 4,964 கார்கள் விற்பனையானது. அதே மாதம் மாருதி எர்டிகாவின் ஜூன் மாத விற்பனை 4,950. ஆனால், எவாலியாவின் விற்பனையோ வெறும் 36 கார்கள் மட்டுமே!
என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
டிசைன்தான் எவாலியாவின் பெரிய மைனஸ். இனோவா, எர்டிகா போன்று கார் டிசைனில் இல்லாமல், வேன் டிசைனில் இருப்பதை பலரும் ரசிக்கவில்லை. இட வசதியைப் பொறுத்தவரை, இது இனோவா அளவுக்கு இடம் இருக்கிறது. மேலும், எல்லா இருக்கைகளிலும் அமர்ந்த பிறகும் டிக்கியில் பொருட்கள் வைக்க இடமும் உண்டு. ஆனால், சிக்கன விஷயங்களால் எரிச்சலூட்டுகிறது எவாலியா. பின் பக்கக் கண்ணாடிகளைத் திறக்க முடியாது.  
இனோவாவில் இருப்பது 2.5 லிட்டர் டீசல் இன்ஜின். ஆனால், எவாலியாவில் இருப்பது வெறும் 84 bhp சக்திகொண்ட 1.5 லிட்டர் இன்ஜின்தான். ஆனால், 1.3 லிட்டர் இன்ஜின் கொண்ட மாருதி எர்டிகா 90bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. குறைந்த எடை காரணமாக, எவாலியாவின் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாகவே உள்ளது. ஆனால், டொயோட்டா இனோவா அளவுக்கு சொகுசான காராக எவாலியா இல்லை. மாருதி எர்டிகாவுடன் ஒப்பிடும்போது, எவாலியாவின் பெர்ஃபாமென்ஸ் ஓகேதான்.
விலை
அதிக வசதிகள்கொண்ட நிஸான் எவாலியாவின் சென்னை ஆன் ரோடு விலை 12.29 லட்சம். இதே அளவு வசதிகள்கொண்ட மாருதி எர்டிகாவின் விலை 10.58 லட்சம். அதிக வசதிகள்கொண்ட இனோவா காரின் விலை 17.78 லட்சம். எவாலியாவில் ரிவர்ஸ் கேமரா, கீ-லெஸ் என்ட்ரி, மூன்றாவது வரிசைக்கு ஏ.சி வென்ட், 2 காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக்ஸ் ஆகியவை உண்டு. ஆனால், முன் பக்கம் மட்டுமே பவர் விண்டோஸ் என்பதோடு, ஸ்டீயரிங்கில் ஆடியோ கன்ட்ரோல் இல்லை.
பெர்ஃபாமென்ஸிலும், சிறப்பம்சங்களிலும் சிறப்பான காராக இருந்தாலும், 12 லட்ச ரூபாய் காருக்கான ஸ்டைலுடன் இல்லை என்பதும், ரியர் வியூ கண்ணாடிகளைத் திறக்க முடியாது என்பதுமே எவாலியாவின் மைனஸ்.
 
ந்தியாவின் விலை குறைவான, ஸ்மார்ட்டான கார் டாடா நானோ. ஆனால், '1 லட்ச ரூபாய் கார்’ என இதை விளம்பரப்படுத்தி, 'சீப்’ கார் என்கிற எண்ணத்தை வர வைத்து விட்டது டாடா. விலைக்காகவே இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்த்து, இதைத் தயாரிப்பதற்காக மட்டுமே குஜராத்தில் தொழிற்சாலையும் அமைத்தது. ஆனால், போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக நானோவின் விற்பனை சரிந்துவிட்டது. மாதந்தோறும் சுமார் 1,000, 1,500 கார்கள் மட்டுமே விற்பனையாகி வந்த நானோ, கடந்த ஜூன் மாதம்தான் 2,000 கார்களைத் தாண்டியது.
என்ன பிளஸ், என்ன மைனஸ்?
இரண்டரை லட்ச ரூபாய்க்கு உண்மையிலேயே விலைக்கேற்ற தரமான கார் டாடா நானோ. கடந்த மாதம் புதிய டிசைனுடன் விற்பனைக்கு வந்த நானோ, விலை குறைவான கார் என்பதைத் தாண்டி, ஒரு முழுமையான கார் என்கிற அடையாளத்தை எட்டியிருக்கிறது. காரின் முன் மற்றும் பின் பக்கத்தில் க்ரோம் ஸ்ட்ரிப், புதிய ரியர் பம்ப்பர், இரட்டை க்ளோவ்பாக்ஸ், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், பென் டிரைவ் இணைப்பு மற்றும் ப்ளூ-டூத் வசதியுடனும் வந்திருக்கிறது 2013 நானோ. ஆனால், பவர் ஸ்டீயரிங் இதில் இல்லை என்பது மைனஸ். ஆனால், அக்டோபர் மாதம் பவர் ஸ்டீயரிங் கொண்ட மாடலை டாடா அறிமுகப்படுத்த இருக்கிறது.
நகருக்குள் பயன்படுத்த சிறந்த கார் டாடா நானோ. 37 bhp சக்தி கொண்ட பெட்ரோல் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ், நகருக்குள் ஓகே. 0-100 கி.மீ வேகத்தைக் கடக்க இது 26.83 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. மைலேஜைப் பொறுத்தவரை ஆல்ட்டோ, இயான், ஸ்பார்க் ஆகிய கார்களைவிட அதிகமாக, நகருக்குள் லிட்டருக்கு 14.6 கி.மீ,, நெடுஞ்சாலையில் 20.3 கி.மீ மைலேஜ் தருகிறது.
விலை
விலையில்தான் முன்பு சொதப்பியது டாடா. இரு சக்கர வாகன வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்கு, குறைந்த விலைகொண்ட கார் என்பதை மட்டுமே சொல்லிவந்த டாடா, இப்போதுதான் குறைந்த விலையில் அதிக வசதிகள்கொண்ட கார் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அதிக வசதிகள்கொண்ட நானோவின் விலை 2.69 லட்சம். அதிக வசதிகள்கொண்ட மாருதி ஆல்ட்டோ 800 காரின் விலை 3.89 லட்சம். நகருக்குள் மட்டுமே பயணிப்பவர்கள் நானோவை வாங்கலாம்!
 
ஸ்கோடாவின் மினி எஸ்யூவி கார் ஸ்கோடா யெட்டி. இதன் ஜூன் மாத விற்பனை 35 கார்கள் மட்டுமே! ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆகிய கார்களுடன் மோதும் காம்பேக்ட் எஸ்யூவி ஸ்கோடா யெட்டி.
என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
4.2 மீட்டர் நீளம்கொண்ட ஸ்கோடா யெட்டி, மிகவும் சின்ன காராக இருக்கிறது. இது டிராஃபிக் நெருக்கடியில் பயணிக்கச் சிறப்பாக இருக்கும் என்றாலும், அதிரடியான எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்களுக்கு யெட்டி ஏமாற்றத்தையே தரும்.
4 வீல் டிரைவ் சிஸ்டம்கொண்ட யெட்டியில் உள்ள 2 லிட்டர் டீசல் இன்ஜின், அதிகபட்சமாக 140bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்கொண்ட இந்த காரில், ஆரம்பத்தில் கொஞ்சம் டர்போ லேக் இருந்தாலும் போகப் போக பிக்-அப் நன்றாக இருக்கிறது. ஆனால், 5,000 ஆர்பிஎம்-க்கு மேல் இழுக்க முடியாமல் திணறுகிறது யெட்டியின் இன்ஜின். மேலும், டீசல் இன்ஜினின் சத்தமும் அதிகரிக்க ஆரம்பித்து விடுகிறது.
பில்டு குவாலிட்டியைப் பொறுத்தவரை, மிகவும் சிறப்பான காராக இருக்கிறது யெட்டி. மலைப் பாதைகளில் கார் பின் பக்கம் உருளாமல் தடுக்கும் ஹில் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்ஸ், 6 காற்றுப் பைகள், பார்க்கிங் சென்ஸார், 6.5 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி என பல சிறப்பம்சங்கள் உள்ளன.

விலை
அதிக வசதிகள்கொண்ட, 2 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ள ஸ்கோடா யெட்டியின் சென்னை ஆன் ரோடு விலை 18.88 லட்சம். ரெனோ டஸ்ட்டரில் அதிக வசதிகள்கொண்ட மாடலின் விலை 14.86 லட்சம். கிட்டத்தட்ட 4 லட்ச ரூபாய் விலை குறைவான டஸ்ட்டரில் இரண்டு காற்றுப் பைகள், ஏபிஎஸ் பிரேக்ஸ், ஜிபிஎஸ், ப்ளூ-டூத், ஸ்டீயரிங் வீல் ஆடியோ கன்ட்ரோல் என ஒரு காம்பேக்ட் எஸ்யூவி காருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.
யெட்டியின் உள்பக்க பாகங்கள் தரமாகவும், காரின் பில்டு குவாலிட்டி சிறப்பாகவும் இருந்தாலும், விலைக்கேற்ற தரமான காராக ஸ்கோடா யெட்டி இல்லை. 18 லட்ச ரூபாய்க்கு இந்த மினி எஸ்யூவி காரை வாங்குவதற்குப் பதில், டஸ்ட்டர் அல்லது எக்கோஸ்போர்ட்டை சாய்ஸில் வைக்கலாம்!
 
டொயோட்டா இனோவாவுக்குப் போட்டியாக, 2010-ம் ஆண்டு ஆரியாவை விற்பனைக்குக் கொண்டு வந்து கையைச் சுட்டுக் கொண்டது டாடா. இந்தியா முழுக்க ஆரியா காரின் ஜூன் மாத விற்பனை 2 கார்கள் மட்டுமே! கடந்த மாதம் ஆரியாவிலும் சில மாற்றங்களைச் செய்து காரை வெளியிட்டது டாடா. ஆனால், இதுவும் விற்பனையில் எடுபடுமா என்பது சந்தேகமே!
என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
ஆரியாவின் முன் பக்கத் தோற்றம் கவர்ந்திழுப்பதாக இருந்தாலும், பில்டு குவாலிட்டியில் சிறந்த காராக இல்லை. இது 7 சீட்டர் கார்; ஆனால், கடைசி வரிசை இருக்கைகளில் பெரியவர்கள் நிச்சயம் உட்கார முடியாது. சிறுவர்களுக்குத்தான் இடம் சரியாக இருக்கும். 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட டாடா ஆரியா 138bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. பெர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை, 2 வீல் டிரைவ் கொண்ட ஆரியா 0-100 கி.மீ வேகத்தை 13.9 விநாடிகளில் கடக்கிறது. இனோவா, இதே வேகத்தைக் கடக்க  17.5 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. பெர்ஃபாமென்ஸில் சிறந்த காராக இருந்தாலும் பில்டு குவாலிட்டியிலும், தரத்திலும் சிறந்த காராக இல்லை ஆரியா.
விலை
2 வீல் டிரைவ் ஆப்ஷன்கொண்ட டாடா ஆரியாவின் சென்னை ஆன் ரோடு விலை 14.65 லட்சம். 4 வீல் டிரைவ் ஆப்ஷன்கொண்ட காரின் விலை 17.92 லட்சம். சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை ரிவர்ஸ் கேமரா, ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம், ப்ளூ-டூத், க்ரூஸ் கன்ட்ரோல், கூல்டு க்ளோவ் பாக்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர் என பல வசதிகள் இருந்தாலும், டொயோட்டா இனோவாவுடன் மட்டும் அல்ல... மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருடன்கூட போட்டி போட முடியாமல் திணறுகிறது ஆரியா. அதிக வசதிகள் கொண்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் சென்னை ஆன் ரோடு விலை 18.06 லட்சம். ஆரியாவைவிட விலை அதிகம்தான் என்றாலும் பில்டு குவாலிட்டியிலும், ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களிலும் டாடா ஆரியாவைவிட சிறந்த காராக இருக்கிறது எக்ஸ்யூவி 500.
ஆரியாவின் பெர்ஃபாமென்ஸ் ஓகே என்றாலும், விலை அதிகம் என்பதோடு, பில்டி குவாலிட்டி மற்றும் உள்பக்க பாகங்களின் தரத்தில் சிறப்பான காராக இல்லை ஆரியா.

No comments:

Post a Comment