இன்றைய நிலையில் டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்றால், குறைந்தது இரண்டாயிரம் ரூபாய் கையில் இருந்தால்தான் முடியும். இதுதான் நிதர்சனம். ஆனால், அரசு நிர்ணயத்திருக்கும் கட்டணம், சில நூறு ரூபாய்கள்தான். தனி நபர் ஒருவர், தானே விண்ணப்பம் செய்து டிரைவிங் லைசென்ஸை வாங்கிவிட்டார் என்றால், அது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.

காரணம், டிரைவிங் ஸ்கூல் அல்லது புரோக்கர்களின் துணையில்லாமல் தனியாக விண்ணப்பம் செய்பவர்களை, ஆர்.டி.ஓ அலுவலத்தில் ஒரு பூச்சியைவிட அலட்சியமாகத்தான் நடத்துகிறார்கள் என்பது பலரின் குற்றச்சாட்டு. தனியாக விண்ணப்பம் செய்பவர்களிடம் ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகள் கேட்கும் கேள்விகள்
ஏராளம். மேலும், அவர்கள் வைக்கும் தேர்வில் வெற்றி பெறுவது என்பதும் எளிதானதாக இல்லை. அதே சமயம், புரோக்கர் மூலம் சென்றால் காரியம் கன கச்சிதமாக நிறைவேறி, டிரைவிங் லைசென்ஸ் வீடு தேடி வந்துவிடுகிறது.
2,000 ரூபாய் செலவு செய்து டிரைவிங் லைசென்ஸ் வாங்குபவர்கள் எல்லாம் சாலை விதிமுறைகள் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இன்னொருபுறம் ஆண் - பெண், ஏழை - பணக்காரன், சைக்கிளில் போகிறவர் - லாரி ஓட்டுகிறவர்... என எந்தவிதமான பேதமும் இன்றி சகலவிதமானவர்களும் சாலை விதிமுறைகளை மீறுகிறார்கள். அதனால், நம் நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு 13 பேர் சாலை விபத்துகளால் மரணம் அடைகிறார்கள். இதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் பொருட்டு, ஏறக்குறைய காலாவதியாகும் நிலையில் இருக்கும் மோட்டார் வாகனச் சட்டத்தில், அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.
1988-ம் ஆண்டே இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அரசு முடிவெடுத்து வேலைகளை ஆரம்பித்தது என்றாலும், இப்போதுதான் இந்த நடவடிக்கை இறுதி வடிவத்தைப் பெற்றிருக்கிறது.

டிரைவிங் ஸ்கூல் நடத்துவதற்கான அடிப்படைத் தேவைகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை, வாகன விபத்தால் பாதிக்கப்படுபவர்கள் அல்லது மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை அதிகரிப்பது, குறிப்பாக அமைப்பு சாராத பணியாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட பல விஷயங்கள் இந்தப் புதிய சட்டத்தில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தில் தற்போதுள்ள அபராதங்களை அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. வேகமாக அல்லது அலட்சியமாக வாகனம் ஓட்டுவது மூலம், அடுத்தவருக்கு காயம் அல்லது வாகனத்துக்குச் சேதம் ஏற்படுத்தினால், தற்போது 3,000 முதல் 4,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இது இனிமேல் 10,000 ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விதம் வசூலாகும் தொகையை, அடையாளம் தெரியாத வாகனம் மோதி (Hit and Run) மரணம் அடைபவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.
அதேபோல், ஓவர் ஸ்பீடில் செல்லும் வர்த்தக வாகனங்களான பஸ்கள், கேப்ஸ், லாரிகளுக்கு 1970-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகையே இப்போதும் தொடர்கிறது. அது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இப்படி பல யூகங்கள் டெல்லி முழுதும் இறக்கை கட்டிப் பறக்கின்றன.
அடுத்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் மோட்டார் வாகனச் சட்டத்தை மாற்றி அமைத்து விட வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதற்குள், 'எந்தக் குற்றத்துக்கு என்ன தண்டனை?' என்பது தெளிவாகிவிடும்!
சென்னையைச் சேர்ந்த வக்கீல் வி.எஸ்.சுரேஷ், மோட்டார் வாகனச் சட்டத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் வேண்டும் என்பது பற்றிக் கூறி-னார். ''வாகனம் மோதி ஒருவர் இறந்தால், டிரைவருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள்தான் தண்-டனை வழங்கப்படுகிறது. இதனை 10 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை உடனடியாகக் கைது செய்வதுடன், அவர்களின் வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால், 400 ரூபாய் அபராதம் இப்போது இருக்கிறது. இதை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஹேண்ட்ஸ் ஃப்ரீ (Hands Free) பயன்படுத்தப்பட்டால் அபராதம் உண்டா, இல்-லையா என்பது இப்போது தெளிவு-படுத்தப்படாமல் இருக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டும்!''
No comments:
Post a Comment