ஃப்ளாட் வாங்கப் போகிறீர்களா?
![]()
‘‘என்னென்னவோ சொல்கிறார் பில்டர். அவர் சொல்லும் விஷயங்கள் எதுவும் புரியவில்லையே?” என்று திகைத்துப் போயிருக்கிறீர்களா... உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!
இந்திய பில்டர்கள் சங்கத் தென்னக மையத்தின்(பி.ஏ.ஐ) கௌரவ செயலாளர் ராமசாமி சொல்வதைக் கேளுங்கள்.
‘‘கார்ப்பெட் ஏரியா ( Carpet Area ), ப்ளிந்த் ஏரியா ( Plinth Area), காமன் ஏரியா ( Common Area ), சூப்பர் பில்ட்அப் ஏரியா ( Super Buildup Area ) என்று நான்கு விதமாக இடத்தைச் சொல்கிறார்கள்.
நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதிதான் கார்ப்பெட் ஏரியா. அதாவது, பயன்படுத்தக்கூடிய கட்டுமானப்பகுதி. ப்ளிந்த் ஏரியா என்பது கட்டடத்தின் நான்கு சுவர்களோடு சேர்ந்த பகுதி. காமன் ஏரியா என்பது லிஃப்ட், மாடி படிக் கட்டு, செப்டிக் டேங்க், லிஃப்ட் மெஷின் ரூம், சுற்றுச் சுவர், நடைபாதை போன்றவை அடங்கியது. ப்ளிந்த் ஏரியா மற்றும் காமன் ஏரியா சேர்ந்ததுதான் சூப்பர் பில்ட்அப் ஏரியா.
இந்த சூப்பர் பில்ட்அப் ஏரியா அடிப்படையில்தான் ஃப்ளாட்டின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அடுக்கு மாடி குடியிருப்பில் ஃப்ளாட்டின் விலை என்பது மனையின் விலை, ஃப்ளாட் மற்றும் காமன் ஏரியாவுக் கான கட்டுமானச் செலவு, சேவை வரி (12.24%), கல்வித் தீர்வை (2%), கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கான வரி (4%), ஃபிரிஞ்ச் பெனிஃபிட் வரி (1%), பில்டர் அல்லது ப்ரமோட்டரின் லாபம் போன்றவை சேர்ந்ததாக இருக்கிறது. பொதுவாக, சதுர அடிக்கு இவ்வளவு என்று விலை நிர்ணயிக்கப்படுவதால், ஒவ்வொரு வரும் வாங்கும் சதுர அடிக்கேற்ப விலை கொடுக்க வேண்டிவரும். அதே நேரத்தில், 600 சதுர அடி ஃப்ளாட் வாங்கியவருக்கும், 1,200 சதுர அடி ஃப்ளாட் வாங்கியவருக்கும் காமன் ஏரியா ஒன்றுதான்.
![]()
விவரம் தெரிந்தவர்கள் தற்போது ஃப்ளாட்டைப் பார்க்க வரும்போதே, காமன் ஏரியா, கார்ப்பெட் ஏரியா எவ்வளவு வருகிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு பில்டரிடம் விலை குறைக்கச் சொல்வதும் நடக்கிறது.
![]()
‘‘கார் நிறுத்த 50 சதுரஅடி பரப்பு போதும் என்றாலும் காரை நிறுத்தி, எடுக்க இடம் தேவை என்பதால் 150 சதுரஅடி ஒதுக்கப்படும். இந்த கார் பார்க்கிங் பகுதி, அடுக்கு மாடி குடியிருப்பின் தரைதளத்தில் அமைந்திருக்கும். ஃப்ளாட் வாங்குபவர், கார் நிறுத்தும் இடத்துக்கு தனியே விலை கொடுக்கவேண்டும். பொதுவாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் பார்க்கிங் ஒதுக்கப்படும். கார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயம் வாங்கவேண்டும். இந்த விலை மனையின் விலையைப் பொறுத்து மாறுபடும்.
அதேசமயம், திறந்த வெளியில் கார் நிறுத்தும் வசதியைப் பயன்படுத்த பணம் வாங்குவதில்லை. அந்தப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் எதுவும் போடக்கூடாது. வீட்டுக்கு வரும் விருந்தினர் நிறுத்திக் கொள்வதற்காகத்தான் திறந்த வெளி கார் நிறுத்தம் உருவாக்கப்படுகிறது. சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கும். அப்போது, கார் நிறுத்த கூடுதல் இடம் தேவைப்பட்டால், கார் இல்லாமல் கார் பார்க்கிங்கைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களிடம் பேசி, வாடகை அல்லது விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
‘‘காமன் ஏரியா அதிகமாக இருக்கும் ஃப்ளாட்டின் விலை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப அதிக வசதிகள் அதில் இருக்கும். பட்ஜெட் வீடுகள் கட்டப்படும் போது காமன் ஏரியா குறைக்கப்படுவதால் ஃப்ளாட் விலையும் குறைக்கப்படும்.
சாலையின் அகலம் அதிகமாக இருந்தால், வீட்டின் விலையும் கூடுதலாக இருக்கும்.பிரமாண்டமான இடத்தில் டவுன்ஷிப் போன்ற அமைப்புடன் அடுக்குமாடிக் குடி இருப்புகள் கட்டும்போது, மனையை உயர்த்த, உள்சாலை, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், பூங்கா, மழை நீர் வடிகால், போன்றவற்றை அமைக்க ஆகும் செலவும் காமன் ஏரியாவுக்கான செலவில் சேர்க்கப் பட்டு ஃப்ளாட் விலையில் ஏற்றப்படும். இதுதவிர, மழைநீர் சேகரிப்பு வசதி, குடிநீர்-கழிவு நீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான செலவும் காமன் ஏரியாவில்தான் சேர்க்கப்படுகிறது’’ என்றார் ராமசாமி.
ஃப்ளாட் வாங்கும்போது தெளிவாகக் கிளம்புவீர்கள்தானே..!
|
Hello world friends, this is ‘Jeeva General Information & Knowledge Repository’ about general information and knowledge from various fields. If you have the information here you need, read on, know it and get useful. “Knowledge is strength, power and energy. Progress through these in life.”
Wednesday, 1 July 2015
ரியல் எஸ்டேட்: ஃப்ளாட் வாங்கப் போகிறீர்களா? உஷார் டிப்ஸ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment