‘போ னஸ் போட்டாச்சு... நல்லதா ஒரு பட்டுப் புடவை, பசங்களுக்கு ஆளுக்கு 1,000 ரூபாய்க்கு வெடி, பலகாரங்களுக்கு தனியாக ஒரு தொகை’ என்று பலமாக பட்ஜெட் போட ஆரம்பித் திருக்கும் மாதச்சம்பள ஊழியர்களே... இந்தக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு, உங்கள் பட்ஜெட்டைப் போடுங்கள். ஏனென்றால், அதில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
பண்டிகை, திருநாள் என்பதெல்லாம் கொண்டாட்டம்தான்... மகிழ்ச்சியாக இருப்பதற்கான தினங்கள்தான். ஆனால், அடுத்தநாள் அந்த மகிழ்ச்சி நீடிக்குமா... பட்டாடைகளிலும் பட்சணங்களிலுமா இருக்கிறது உண்மையான மகிழ்ச்சி..? உபரியாகக் கிடைத்த போனஸ் பணத்தை எப்படி உபயோகமாக முதலீடு செய்திருக்கிறோம் என்பதில் இருக்கிறது!
‘‘பண்டிகைகளின்போது புத்தாடை வாங்குவதும், வெடி வெடித்து மகிழ்வதும் நடக்கவேண்டிய விஷயம்தான். ஆனால், நம்முடைய தேவைகளுக்கு அதிகமாக இருக் கிறதே என்று செலவழிக்காமல் தெளிவாகத் திட்டமிட்டுக் கொண்டால் அந்த முதலீடு, எதிர் காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்’’ என்றார் நிதி மேலாண்மை வல்லுநர் ஒருவர்.
போனஸ் பணத்தை எப்படி முதலீடு செய்வது?
‘‘கிடைக்கும் போனஸில் 25 முதல் 30% விழாக் கொண்டாட்டத்துக்கு ஒதுக்கிவிடலாம். அதிலேயே நிறைவாகக் கொண்டாட முடியும். மீதமுள்ள பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பதற்கு பல திட்டங்கள் இருக்கின்றன. பட்டாசு வாங்குவதும் ஆடைகள் வாங்குவதும் வீண் செலவு என்று அதைத் தவிர்த்துவிட்டு மார்க்கெட்டில் புதிதாக வந்திருக்கும் மொபைல் போனை வாங்கக் கூடாது. அல்லது ஹோம் தியேட்டர், டி.வி.டி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் காசைப் போடக்கூடாது. இதெல்லாம் வீட்டு உபயோகப் பொருட்கள்தானே தவிர, முதலீடு கிடையாது’’ என்று சொன்ன அந்த நிதி மேலாண்மை வல்லுநர், சில முதலீட்டு வழிகளை அடையாளம் காட்டினார்.
‘‘பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பழக்கம் உள்ளவராக இருந்தால் நீண்டகாலப் பங்குகளில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது அந்தப் பங்குகளில் கைவைப்பதில்லை என்ற முடிவோடு முதலீடு செய்யுங்கள்.
எதிர்காலத்தில் அதிக பென்ஷன் பெற விரும்புகிறவர்கள், அலுவலகத்தில் பி.எஃப் பிடிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், தபால் அலுவலக பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் 8% வட்டி மற்றும் போனஸ் கிடைக்கும்’’ என்றார்.
புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டரின் இணைத் துணைதலைவர் சரவணனிடம் கேட்டபோது, ‘‘இன்றைய இளைஞர்கள் மாதம் சராசரியாக 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அப் படி இருக்கும்போது அவர்களது போனஸ் தொகை நிச்சயமாக அதைவிட அதிகமாகத்தான் இருக்கும். அவர்கள், நல்லவிதமாக முதலீடு செய்வது அவர்களுடைய எதிர்காலத்துக்கு நல்லது.
பங்குச் சந்தை நல்ல லாபம் தரும் என்பார்கள், ஆனால், அதைத் தொடர்ந்து கவனிக்க நேரம் இருக்காது. அதனால், நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் எது என்பதை அலசி ஆராய்ந்து அதில் முதலீடு செய்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். இப்போதைய சூழ்நிலையில் நீண்டகால அடிப்படையில் ‘டைவர்ஸி ஃபைட் ஈக்விட்டி ஃபண்ட்’ திட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். இவற்றின் மீதான ரிட்டர்ன் சராசரியாக 15 முதல் 20% இருக்கும். மேலும், நீண்டகால முதலீடு என்பதால், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தால், முதலீடு மீதான வருமானம் குறைய வாய்ப்பில்லை’’ என்றார். இப்போது இருக்கும் வாய்ப்புகளை வைத்து நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் எது என்பதை அறிய ஒரு மணிநேரம் செலவிட்டால் போதும்.
அதேபோல, ‘‘உபரியாகக் கிடைக்கும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதும் நல்ல முடிவாக இருக்கும்’’ என்கிறார் ‘குட்வில் இண்டஸ்ட்ரியல் ஹோம் கேர்’ என்ற நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் கன்சல்டன்ட் காமராஜ்.
‘‘மனை மற்றும் வீட்டில் செய்யப்படும் முதலீடு நிச்சயமாக லாபம் தரக்கூடியது. பத்தாண்டுகளுக்கு முன் 40 வயதுக்கு மேல்தான் வீடுவாங்குவது பற்றி யோசிப் பார்கள். இன்றைக்கு முப்பது வயதுக்குள் வீட்டுக்குச் சொந்தக்காரராகி விடவேண்டும் என்று துடிக்கும் அளவுக்கு இளைஞர்களின் வருமானம் இருக்கிறது. அதனால், அவர்களின் கவனம் ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியிருக்கிறது’’ என்றார் அவர்.
‘‘ரியல் எஸ்டேட் என்பது பெரிய முதலீடாக இருக்குமே... சின்னதாகக் கிடைக்கும் போனஸ் பணத்தை வைத்து அதில் எப்படி முதலீடு செய்யமுடியும்?’’ என்ற சந்தேகத்தை அவரிடம் கேட்டபோது,
‘‘இப்போது குடும்பத்தில் கணவரும் மனைவியும் வேலைக்குச் செல்வது அதிகமாக இருக்கிறது. இருவருக்கும் கிடைக்கும் போனஸைக் கணக்கிட்டால், புறநகர் பகுதியில் இடமே வாங்கிப் போடமுடியும். அது ஒருவகையில் முதலீடுதானே! அப்படி இல்லாவிட்டா லும் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தால் போனஸாகக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு வீட்டுக் கடனை அடைத்து வந்தால் வீணாக வட்டி கட்டுவதைத் தவிர்க்கலாமே... அல்லது புதிதாக வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு வங்கிக் கடன் தவிர, முன்பணமாகச் செலுத்துவதற்கு இந்தத் தொகை பெரிய அளவில் பயன்படும். ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லமுடியும். ரியல் எஸ்டேட் முதலீடு பாதுகாப்பான, அதிக ரிட்டர்ன் தரக்கூடியது’’ என்றார் காமராஜ்.
ஆலோசகர்கள் சொல்வது ஒருபக்கம் இருக்க, அனுபவபூர்வமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த முரளி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவர், போனஸ் தொகையை எப்படி முதலீடாக மாற்றுகிறார் என்று கேட்டபோது, அவர் மனைவி ஜெயராணியுடன் சேர்ந்தே பேசினார். ஜெயராணியும் பணிபுரிகிறார்.
‘‘இந்த வீடு கட்டுவது என்பது எங்கள் கனவாக இருந்தது. அதனால், உபரியாகப் பணம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டுக்காகவே சேமித்து வைத்துக் கொண்டிருந்தோம். இப்போது வீட்டைக் கட்டி முடித்துவிட்டோம்.
அடுத்து, வீட்டுக்கான அடிப்படைத் தேவை களுக்கு செலவழித்தோம். இப்போது வரப்போகும் போனஸ் தொகையை சேமிக்க வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைத் தேர்வுசெய்து வைத்திருக்கிறோம். வங்கிகளில் இப்போது 8 முதல் 8.5%வரை வட்டி தருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நினைத் துக்கூடப் பார்த்திருக்க முடியாத வட்டி விகிதம் இது. அதோடு, பணத்தை முதலீடு செய்துவிட்டு, நல்லபடியாகத்தான் இருக்கிறதா என்று தினமும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பணத்தைப் போட்டுவிட்டு அதை மறந்துவிட வேண்டும். அதில் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு எனக்கு இப்போது நேரமில்லை. அதனால், இந்த முறை என் சாய்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்தான்’’ என்றார் முரளி.
ஜெயராணி, ‘‘ஆடைகளை வாங்கிக் குவிப்பதைவிட, எப்போதும் மதிப்பில் உச்சத்தில் இருக்கும் தங்கநகையில் முதலீடு செய்வது புத்திசாலித் தனமானது. நாங்கள் அதை எப்போதும் செய்து வருகிறோம். முதலீட்டு கோணத்தில் பார்த்தால் ஆபரணங்களை விட தங்கநாணயங்கள் லாபகரமானவை என்பது என் கருத்து’’ என்றார்.
குழந்தைகளுக்குச் சிறிய தொகைக்கு பட்டாசு வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களுக்குப் பயன்படும் விளையாட்டு பொருட்கள், அறிவை வளர்க்கும் பொருட்களை வாங்கிக்கொடுத்து, பொறுப்பானவர்களாக மாற்றமுடியும்.
போனஸ் பணத்தைப் பொருத்தமான முறையில் முதலீடு செய்து அதனைப் பன்மடங்காக பெருக்க வாழ்த்துக்கள்...!
No comments:
Post a Comment