Thursday 18 June 2015

ஆஹா.. அறுசுவை!

சமைப்பது, ஒரு வகையில் தவம். மாங்காய்க் குழம்பு, பாயசம், பாகற்காய் பொரியல், வாழைப்பூ கூட்டு, கார வறுவல், வடுமாங்காய் என அன்றாட உணவில் அறுசுவையையும் படைத்து, ருசித்து மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. 
''நாம் உண்ணும் உணவில் தினசரி அறுசுவைகளும் சரியான அளவில் இருந்தாலே, எந்த நோயும் கிட்ட நெருங்காது!'' என்று கூறும் சித்த மருத்துவர் வீரபாபு, அறுசுவையின் அருமை பெருமைகளை விளக்குகிறார்.    
''சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்ற இந்த ஆறு சுவைகள்தான் உணவுக்கு அடிப்படை. நம் உடலில் உள்ள தாதுக்கள் சரிவர இயங்க இந்த அறுசுவையும் சரியாக இருக்க வேண்டும். இன்றோ, நம்மில் பலர், குறிப்பிட்ட சில சுவைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பது இல்லை. தொடர்ந்து ஒரேவிதமான சுவையுடைய உணவை அதிகம் உண்பதும், ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும்'' என்கிற வீரபாபு, எந்தச் சுவையை, எப்படிச் சாப்பிடலாம் என்பது குறித்து விவரிக்கிறார்.
இனிப்பு
மனதுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய சுவை, இனிப்பு. இந்தச் சுவையை நாம் மிதமான அளவு உண்ணும்போது, அது உடலுக்குப் பலத்தைத் தரும். இன்று நாம் சாப்பிடும் உணவிலேயே இனிப்புச் சுவை அதிகம். தவிர, செயற்கை இனிப்பு சேர்த்த ஸ்வீட்ஸ் வகைகளை உண்ணும்போது, உடலில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை சேர்ந்துவிடும்.  இது போதாதா ஆரோக்கியம் குறைய?
இனிப்பை அதிகம் சாப்பிட்டால், தொப்பை, உடல் பருமன், பித்தம், வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படும். அடிக்கடி சளி பிடிக்கும் உடல்வாகுகொண்டவர்கள் இனிப்புச் சுவையைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரைக்குப் பதிலாக பனங்கற்கண்டு, கருப்பட்டி, வெல்லம், இனிப்பு நிறைந்த பழ வகைகள் சாப்பிடலாம்.
புளிப்பு
சாப்பிட்ட உணவு செரிக்க உதவும் சுவை இது. நல்ல ஜீரண சக்தியைத் தந்து, வயிற்றைச் சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது. பசியைத் தூண்டும், நரம்புகளை வலுவாக்கும். ஆனால், புளிப்பு அதிகம் சாப்பிட்டால், வயிறு கோளாறு, பற்கள் வலுவிழத்தல், ரத்த அழுத்தம், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.  
எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் உள்ள புளிப்பைச் சேர்த்துக்கொள்ளலாம்.
உவர்ப்பு
மற்ற சுவைகளைச் சமன்படுத்தி நாவுக்குச் சுவையைத் தரக்கூடியது இது. உடல்  சூட்டை அதிகப்படுத்தும் என்பதால், மிதமான அளவு உண்ணலாம்.  இதனால், உடல் வியர்வை பெருகி ரத்தம் சுத்தமடையும். அதிகமானால் வாதம், உடலின் உள் உறுப்புகள் பாதிப்பு அடைதல், முடி நரைத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
கடுக்காய், கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உள்ள உவர்ப்புச் சுவை உடலுக்கு மிகவும் நல்லது.
கைப்பு (கசப்பு)  
உடலுக்கு அதிக நன்மையைத் தரக்கூடியது. பலரும் வெறுத்து ஒதுக்கக்கூடிய சுவை இது. வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும் சிறந்த கிருமிநாசினி.  தோல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தரும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். இந்தச் சுவை அதிகமானால், உடல் உறுப்புகள் சோர்வடைந்துவிடும்.
பாகற்காய், சுண்டைக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ போன்றவற்றில் உள்ள கசப்பு, உணவில் சேர்க்கத் தகுந்தவை.
கார்ப்பு (உறைப்பு)
இந்தச் சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். கண், வாய் போன்றவற்றில் நீர் வரச்செய்யும். மிதமாகப் பயன்படுத்துவது ஜீரணத்துக்கு உதவும். அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதியில் புண்களை உண்டாக்கும்.
வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு ஆகியவற்றின் காரச் சுவையை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.
துவர்ப்பு
மெதுவாக ஜீரணமாகக்கூடிய இந்தச் சுவை, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கல்லீரல், கணையம், சிறுநீரகத்துக்கு சிறந்தது. பித்தத்தைச் சமன்படுத்தக்கூடியது. அதிகமானால் நாக்கு  தடிக்கும். வாயுவை அதிகப்படுத்தும். வாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
வாழைக்காய், மாதுளை, மாவடு, அத்திக்காய் போன்ற காய் வகைகள் அனைத்திலும் இயற்கையாகவே உள்ள துவர்ப்புச் சுவை, உடலுக்கு நல்லது.  

No comments:

Post a Comment