திருவாரூரைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது இடுப்பில் மறைத்துக்கொண்டு சென்ற பீர் பாட்டில் வெடித்து இறந்திருக்கிறான்! எத்தனை சிறிய வயதிலேயே குடிப்பழக்கம் தொடங்கிவிடுகிறது என்பதற்கான ஒரு சின்ன ஆதாரம் இது! வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.
''ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை.
அடுத்து, குடிப்பதைக் கட்டுப்படுத்தவோ, மதுவின் அளவைக் குறைக்கவோ முடியாது. வற்புறுத்தலின்பேரில் சிறிது காலம் நிறுத்துவதுபோல் இருந்துவிட்டு, மறுபடியும் அதிகமாகக் குடிப்பார்கள். கோபம், வெறுப்பு, சண்டை, இவையே இடைப்பட்ட காலகட்ட நிலை; தொடர்ந்து அதிகமாகக் குடிப்பது, குடிப்பதற்காகக் கடன் வாங்குவது, பொய் பேசுவது, திருடுவது, குடிக்கத் தடுப்பவர்களை அடிப்பது, காரணமே இல்லாமல் மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நிலைமை விபரீதமாகும். 'குடித்தால்தான் சிறிதளவேனும் செயல்பட முடியும்’ என்கிற உச்ச நிலை உருவாகும். இவைதான் தீவிர இறுதிக்கட்ட நிலை'' என்கிறார் டி.டி.கே. மருத்துவமனை சீனியர் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஜாக்குலின் டேவிட்.
குடிநோயாளிகள் என்னென்ன பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை, டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனிதாராவ் விளக்குகிறார்.
''ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும். சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகிவிடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சி இன்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறார் அவர்.
இவர்களை எப்படி மீட்டு எடுப்பது? என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? வழிக்காட்டுகிறார் சென்னை, விஸ்டம் போதை மறுவாழ்வு மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி.
''குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும். குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். சச்சின் 100-வது சதம் அடித்தாலும் குடி, சச்சின் டக் அவுட் ஆனாலும் குடி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே.
சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட உடன், முதலில் உடல் பரிசோதனை செய்யப்படும். தொடர்ந்து மது
அருந்தியதால் ஏற்கெனவே உடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கும், நன்றாகப் பசித்து சாப்பிடவும், ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிசெய்யும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது கட்டமாக மனரீதியாக சிகிச்சை அளிக்கப்படும். மது அருந்தாமல், மகத்தான வாழ்வு வாழும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளல், குடியால் ஏற்படும் பாதிப்புகளை உணர்தல், வாழ்வின் உன்னதத்தை அறிந்துகொள்ளுதல், குரூப் தெரபி, மீண்டு நல்லபடியாக வாழ்பவர்களுடனான கலந்துரையாடல், ஆலோசனை எனப் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படும்.

உள்நோயாளியாகச் சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஆலோசனைகள், மருந்துகள், பிரச்னைகளைச் சமாளிக்க வழிகள் எனச் சிகிச்சை முறைகள் தொடரும். பழைய சகவாசத்தால் சிலர் மறுபடியும் குடிக்க நேரிடலாம். திரும்பவும் குடிக்க ஆரம்பித்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டும் குடிப்பவருக்கு குற்ற உணர்வு இருக்கும். இந்தச் சமயத்தில் குடும்பத்தினர் மறுபடியும் சிகிச்சைக்கு அழைத்து வந்துவிட்டால் அவர்களை எளிதில் மீட்டுவிடலாம்.
ஒருவர் குடிநோயில் இருந்து மீண்டு, நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று மற்றவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், 'விடுபட வேண்டும்’ என்ற உறுதியான எண்ணம் குடிப்பவருக்கும் இருக்க வேண்டும். சிகிச்சை முடிந்து சென்ற பிறகும், அதே வேலை, சூழல், சமுதாயம், குடிகார நண்பர்கள் இருக்கத்தான் செய்யும். நமக்காக எதுவும் மாறியிருக்கப்போவது இல்லை. மாற வேண்டியது குடிநோயாளிதான்'' என்றார் அறிவுடை நம்பி.
குடிநோயிலிருந்து ஒருவரை மீட்டெடுப்பதைவிட அந்தப் புதைக்குழிக்குள் ஒருவர் விழாமல் காப்பாற்றுவது புத்திசாலித்தனம். அதனால், குடிபோதைபற்றிய விழிப்பு உணர்வைப் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்தே தொடங்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஓர் ஆரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும்!
பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு...



பெற்றோர்களின் கவனத்துக்கு...




போதை ஏறினால்... பாதை மாறினால்...
1,30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்... மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).
மது 'உள்ளே’ சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது?
அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.

இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம், சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது.
குறிப்பாக, நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது. மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.
மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.
அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!''
No comments:
Post a Comment