Thursday 18 June 2015

சுத்தத்தில் உங்களுக்கு எத்தனை மதிப்பெண்கள்?

சுயப் பரிசோதனை
நீங்கள் சுகாதாரமாக இருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள இதோ சில கேள்விகள்.  கீழ்கண்ட கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்டு உள்ள பதில்களை டிக் செய்து, இறுதியில் உங்கள் மதிப்பெண்களைக் கூட்டிப்பாருங்கள். நீங்கள் சுகாதாரத்துக்கு எவ்வளவு மதிப்பு அளிப்பவர் எனத் தெரிந்துவிடும்... 
எப்போதெல்லாம் கைகளைக் கழுவுவீர்கள்?
அ) கழிப்பறைக்குச் சென்ற பிறகு, சமைப்பதற்கு முன்பு, சமைத்த பிறகு, சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பிறகு
ஆ) சாப்பிட்ட பிறகும், கழிப்பறையைப் பயன்படுத்தும்போது மட்டும்
இ) கை அழுக்காக உள்ளது என்று தோன்றும்போது மட்டும்
ஈ) எப்போதாவது
(கைகளில் கிருமிகள் வேகமாக வளரும். எனவே, அவ்வபோது சோப் அல்லது கிருமிநாசினி ஜெல் போட்டு அவ்வப்போது கையைக் கழுவ வேண்டும்.)
தும்மல் வரும்போது என்ன செய்வீர்கள்?
அ) வாய் மற்றும் மூக்கைக் கைக்குட்டையால் மூடிக்கொள்வேன், பின்னர் கைகளைக் கழுவுவேன்.
ஆ) வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்வேன். ஆனால், கை கழுவ மாட்டேன்.
இ) வாய் மற்றும் மூக்கை மூடப் பயன்படுத்திய கைக்குட்டை, டிஷ்யூவை அங்கேயே போட்டுவிடுவேன்.
ஈ) அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை; வாய் மற்றும் மூக்கை மூடுவது இல்லை.
(தும்மல், இருமல் ஏற்பட்டால், மூக்கு மற்றும் வாயை நன்கு உலர்ந்த துணி, அல்லது டிஷ்யூ கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்)
குளித்த பின் துடைக்கும் துண்டை எப்போது சலவை செய்வீர்கள்?
அ) தினமும்
ஆ) வாரத்திற்கு ஒருமுறை
இ) மாதத்திற்கு ஒருமுறை
ஈ) எப்போதாவது
(ஈரமான இடத்தில் கிருமிகள் வேகமாக வளரும். எனவே, முடிந்தவரை தினமும் துண்டை சலவை செய்வது, வெயிலில் உலர்த்துவது நல்லது)
பாத்திரம் கழுவும் இடம், பாத்திரம் கழுவப் பயன்படுத்திய நார், பிரஷ் போன்றவற்றை எப்போது சுத்தம் செய்வீர்கள்?
அ) பாத்திரங்கள் கழுவி முடித்ததும்
ஆ) தினமும்
இ) வாரத்திற்கு ஒருமுறை
ஈ) எப்போதாவது ஒருமுறை
(பாத்திரம் கழுவும் நார் போன்றவை கிருமிகள் வளர ஏற்ற இடம். எனவே, இவை சுத்தமாகவும், உலர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள்.)
செல்லப்பிராணிகளுடன் உங்கள் அணுகுமுறை?
அ) எங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இல்லை
ஆ) அதற்கெனத் தனி இடம், சாப்பிடும் தட்டு போன்றவை பயன்படுத்துவேன். செல்லப்பிராணியைத் தொட்ட பிறகு கைகளை சோப் போட்டுக் கழுவுவேன்
இ) அதுவும் ஓர் உயிராக இருந்தாலும் சில கட்டுப்பாடுகள் அதற்கும் உண்டு. இருப்பினும் அதற்குப் பயன்படுத்திய பொருட்களை நாங்களும் பயன்படுத்துவோம்.
ஈ) செல்லப்பிராணி எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினர்போல. வீட்டில் எங்கு வேண்டுமானாலும் செல்லவும், படுக்கையில் படுக்கவும் அனுமதிப்போம்.
(செல்லப்பிராணிகளைத் தொட்ட பிறகு உடனடியாகக் கைகளை கிருமிநாசினி போட்டுக் கழுவ வேண்டும். செல்லப்பிராணிகளிடம் இருந்து கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.)
உங்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டால், என்ன செய்வீர்கள்?
அ) கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்து காயத்தின் தன்மைக்கு ஏற்ப மருத்துவமனைக்கு செல்வேன் அல்லது காயத்தை பேண்ட்எய்ட் போன்றவற்றைக் கொண்டு மூடுவேன்
ஆ) காயத்தை சுத்தம் செய்து ஆன்டிசெப்டிக் க்ரீம் போடுவேன்
ஆ) பேண்ட்எய்ட் போடுவது போதுமானது
ஈ) சின்ன காயம்தானே இதனால் என்ன ஆகப்போகிறது என விட்டுவிடுவேன்
(காயங்கள் மூலம் கிருமிகள் உடலுக்குள் மிக எளிதில் புகுந்துவிடும். முதலில் ஆன்டிசெப்டிக் திரவத்தைக்கொண்டு காயத்தைச் சுத்தம் செய்து, புண்ணை மூட வேண்டும்.)
(அ-வுக்கு 3, ஆ-வுக்கு 2, இ-க்கு 1, ஈ-க்கு 0 மதிப்பெண்கள்)
14-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள்: அருமை. வீட்டைத் தினமும் சுத்தம் செய்வதன் மூலமும், அதிக அளவில் கிருமிகள் வளர வாய்ப்பு உள்ள இடங்களை உடனுக்குடன் சுத்தம் செய்வதன் மூலமும் உங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்கள்.
8 முதல் 13 மதிப்பெண்கள் பெற்றவர்கள்: சுகாதாரம் பற்றிய விவரங்கள் தெரிந்தவராக இருந்தாலும், அதைச் செயல்படுத்துவதில் நீங்கள் காட்டும் சுணக்கம்,  உங்கள் வீட்டில் தொற்றுக் கிருமிகள் வளரக் காரணமாகிவிடுகிறது.
7-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள்: பாக்டீரியா உள்ளிட்ட தொற்றுக்கிருமிகள் உங்கள் வீட்டில் இருந்துதான் உற்பத்தியாகின்றது. கிருமிகள் ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களில் நீங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment