Friday 19 June 2015

எப்படி சேமிக்க வேண்டும்? ஆயிரங்களை கோடிகளாக்கும் அற்புதத் திட்டம்!

நிதித் திட்டமிடல்
எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவது என்பது ஒரு கலை. ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதுவும் நிதி சம்பந்தப்பட்ட விஷயத்துக்காகத் திட்டமிடவேண்டும் என்றால் நமக்கெல்லாம் அது பாகற்காய் சாப்பிடுவது போலத்தான். ஆனால், பாகற்காய் சாப்பிடப் பழகிக்கொண்டால் மற்றதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிடும்! நம்மில் பலர் ஏதோ சேமிக்கவேண்டுமே என்பதற்காக பணத்தைச் சேமிக்கிறார்கள். ஆனால், எந்தெந்தத் தேவைக்கு எவ்வளவு சேமிக்கவேண்டும் என்று தெளிவாகத் திட்டமிட்டுச் சேமிப்பதில்லை. அப்படிச் சேமித்தால்தான் அது பயனுள்ள சேமிப்பாக இருக்கும். அது எப்படி என்பதை இனிக்க இனிக்கச் சொல்லித் தருகிறார் மும்பையைச் சேர்ந்த நிதி ஆலோசகரான பி.வி.சுப்ரமணியன்.
சேமிப்பது எதற்கு? நமது தேவைகளுக்காகத்தானே... அதனால் முதலில் முக்கியமான தேவைகள் சிலவற்றைப் பட்டியலிடலாம்...
1. தனியாக ஒரு வீடு...
2. சிறுவயதுக் கனவான சொந்த பிஸினஸ் தொடங்குதல்...
3. குழந்தைகளின் கல்வி. (அவர்கள் கல்லூரியில் சேரும்போது எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதே உங்களுக்குத் தெரியாது! காரணம் அந்த அளவுக்குக் கல்வி இன்று காஸ்ட்லி ஆகிவிட்டது!).
4. பணி ஓய்வுக்குப்பிறகு மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்க கிடைக்கும் சொற்ப பென்ஷன் போதுமானதாக இருக்காது.
5. பின்னாளில் அதிகரிக்கவிருக்கும் விலைவாசி, வரிவிதிப்பு. (இதைத் தலைகீழாக நின்றாலும் உங்களால் கணிக்கவே முடியாது).
இப்படிப் பல காரணங்களுக்காக நமக்குப் பணம் தேவை. அந்தப் பணத்துக்கு நிதித் திட்டமிடல் தேவை. உங்கள் நிதித் திட்டமிடலை ஆரம்பிக்கும் முன் அதைப் பற்றிய சில அடிப்படை விஷயங்கள்...
நிதித் திட்டமிடல் என்றால் என்ன?
நிதித் திட்டமிடல் என்பது ஒரு நீண்டகாலச் செயல். உங்களுடைய நிதிஆதாரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற மாதிரி திட்டங்களை வகுத்து, குறுகியகால மற்றும் நீண்டகால லட்சியங்களை அடையவேண்டும். கீழே இருக்கும் மூன்று எளிய கேள்விகள் உங்கள் தேவைகளை எளிதாக உணர்த்தும்.
1. நான் எங்கே இருக்கிறேன்?
2. நான் எங்கே செல்லவேண்டும்?
3. அங்கே எப்படிச் செல்லவேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கு தெளிவான விடை தெரிந்துவிட்டால் பாதிக் கிணறு தாண்டிய மாதிரிதான்!
திட்டமிடலை எப்போது ஆரம்பிக்கவேண்டும்?
இழந்த காலத்தையும் நேரத்தையும் ஒருபோதும் நம்மால் திரும்பப் பெற இயலாது. அதனால் உங்களால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திட்டமிடலை ஆரம்பித்து விடவேண்டும். நாளை என்ற பேச்சுக்கே இடமில்லை!
அதேபோல, 'என் காலமே போச்சு... இனிமேல் எதுக்கு, யாருக்காக நான் திட்டமிடவேண்டும்' என்ற நினைப்பும் வேண்டாம்! நன்றே செய், அதை இன்றே செய்!
எனக்கான நிதித் திட்டமிடலை யார் செய்யவேண்டும்?
நல்ல தகுதியான நிதி ஆலோசகர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நிதி ஆலோசகர் நம்பத் தகுந்தவராகவும் சார்ட்டட் அக்கவுன்டன்டாகவும், நீண்டகாலம் இத்துறையில் இருப்பவராகவும் இருக்க வேண்டும். அவர் தொழில்முறையில் நிதி ஆலோசகராக மட்டும் இருந்தால் போதாது, முழுநேர நிதி ஆலோசகராகவும் இருக்கவேண்டும். ஏனெனில் பகுதிநேரமாக நிறைய பேர் நிதி ஆலோசகராக இருக்கிறார்கள். அவர்களுக்கு பல வேலைகளில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்! அதனால் கூடுமானவரை அப்படிப்பட்டவர்களைத் தவிர்த்துவிடுங்கள்.
திட்டத்தில் என்னென்ன இருக்க வேண்டும்?
உங்களுடைய நிதி சம்பந்தப்பட்ட தகவல்களும் இருக்கவேண்டும். உங்கள் ஆண்டு சம்பளம், நீண்டகால மற்றும் குறுகியகால இலக்குகள், அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், கடன் பொறுப்புகள், பண வரவுகள், முதலீடுகள், ஓய்வுக்காலத் திட்டம், வரிச் சேமிப்புக்கான திட்டங்கள் மற்றும் உங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸ் அளவு ஆகியவை இந்தத் திட்டத்தில் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
என்னிடம் நிறைய பணம் இல்லை. ஆனால், எனக்கு முழு அளவிலான நிதித் திட்டம் கிடைக்குமா?
சுவரில்லாமல் சித்திரம் இல்லை. தேவையான அளவுக்குப் பணம் இல்லையெனில் உங்களால் முழுஅளவிலான திட்டத்தில் நுழைய இயலாது. நிதி ஆலோசகரை அடிக்கடி சந்தியுங்கள். உங்கள் தேவைகளை அவர்களுடன் விவாதியுங்கள். அப்போது உங்களுக்கு நிறைய திட்டங்கள் கிடைக்கும். இறுதியில் உங்களால் முடிந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். நிறைய பணம் இல்லை எனில் முக்கியமான திட்டங்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கவும்.
நிதித் திட்டமிடலில் இலக்குகள் எவ்வாறு பயன்படுகின்றன?
காட்டாற்று வெள்ளத்தை வைத்து விவசாயம் செய்வதற்கும், அதை அணைகட்டித் தடுத்து, வாய்க்கால் வெட்டி விவசாயம் செய்வதற்கும் இருக்கும் வித்தியாசம்தான் இலக்குகளோடு சேமிப்பதற்கும் இலக்குகளற்றுச் சேமிப்பதற்கும் உள்ளது. இலக்குகள் வைத்துச் சேமித்தால் அந்தந்தச் சேமிப்பை அந்தந்தச் செலவுகளுக்குச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம். அப்படி இல்லாமல் மொத்தமாகச் சேமிப்பை வைத்திருந்தால் ஒரு தேவைக்கான செலவை இன்னொரு தேவைக்காகப் பயன்படுத்திக் குழப்பி, கடைசியில் சேமித்தும் கஷ்டப்பட்டுவிடுவோம். அதனால், முதலில் குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகளைப் பட்டியலிட்டுக்கொள்ளவும். அதன்பின் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்ற மாதிரி வரிசைப்படுத்தி சேமிக்கவும். சேமிப்பதும் இப்போது எளிதாக இருக்கும்.
என் மதிப்பு என்ன என்பதை எப்படித் தெரிந்துகொள்வது?
முதலில் உங்கள் நிதி நிலைமையை ஆராயவும். பல பேர்களுக்குத் தங்களது உண்மையான மதிப்பே தெரிவதில்லை. உங்கள் சொத்துக்களின் இன்றைய பண மதிப்பை முதலில் தெரிந்துகொள்ளவும். சொந்த வீடு, ரியல் எஸ்டேட், தங்கம், பேங்க் பேலன்ஸ், ஷேர்ஸ், இன்ஷூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் இவற்றைத் தனியாக வரிசைப்படுத்தவும். உங்கள் பொறுப்புகள், வீட்டுக் கடன், கார் கடன், கிரெடிட் கார்டு பேலன்ஸ் இவற்றைத் தனியாக வரிசைப்படுத்தவும். இப்போது உங்கள் சொத்துக்களில் இருந்து உங்கள் கடன்களைக் கழித்தால் உங்கள் மதிப்பை அறியலாம்.
இன்றைய நிலைமையே தடுமாற்றமாக இருக்கும்போது நாளையைப் பற்றி எப்படி நான் சிந்திப்பது?
முதலில் பட்ஜெட் போடுங்கள். அதன்பின் தினசரி செலவுகளை எழுதி வாருங்கள். இதிலிருந்து தேவையற்ற செலவுகளைச் சுலபமாகக் கண்காணிக்கமுடியும். எக்ஸல் ஷீட்டிலும் குறித்து வரலாம். இதனால் ஒவ்வொரு மாதமும் நீங்கள் எதற்காக அதிகம் செலவு செய்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இப்படித் திட்டமிட்டு செலவு செய்யும்போது உங்களின் அனாவசியச் செலவுகளைத் தவிர்க்கமுடியும். உங்கள் செலவுகளை எழுதிப் பழகுங்கள். நம் மூளை சில விஷயங்களை மறந்துவிடும். ஆனால், எழுத்துக்கள் ஒரு போதும் மறப்பதில்லை!
நான் எவ்வளவு சேமிக்கலாம்?
சேமிப்புக்கு என்று விதிமுறைகளை ஏற்படுத்தமுடியாது... உங்கள் வயது, வருமானம் மற்றும் மாதாந்திரச் செலவுகளைப் பொறுத்து சேமிப்பு விதிகள் மாறும். பொதுவாக மொத்த வருமானத்தில் (வரிக்கு முந்தைய வருமானம்) 10% சேமிக்கலாம். இந்தப் பணம் உங்களுக்கு அதிகமாகத் தெரிந்தால், சேமிப்பதை விட்டுவிடாதீர்கள். மாதா மாதம் முடிந்த அளவு ஒரு குறிப்பிட்ட பணத்தைச் சேமிக்க ஆரம்பித்து, சிறிது சிறிதாக உயர்த்திக்கொள்ளலாம்.
இன்ஷூரன்ஸின் அவசியம்!
நிதித் திட்டமிடலில் காப்பீடுக்கு முக்கியத்துவம் கட்டாயம் கொடுக்கவேண்டும். கடந்த சில வருடங்களில் இன்ஷூரன்ஸ் துறை பல மாற்றங்களைக் கண்டுள்ளது. பல புதிய திட்டங்கள் வந்துள்ளன. இதனால் உங்கள் ஆலோசகரின் உதவியோடு தற்போது நீங்கள் வைத்திருக்கும் திட்டங்களை ஆராய்ந்து பிறகு தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளவும்.
உயில் தேவையா?
அனைவருக்கும் உயில் தேவை. நீங்கள் மணமானவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உயில் தேவை. அடுத்த நொடியில் என்ன நிகழும் என்பதே தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்கிறோம். நமது பொருட்களையோ, சொத்துக்களையோ நமக்குப் பிறகு யார் வைத்துகொள்வது என்பதில் பிரச்னை வராமல் இருக்கவேண்டும்.
எந்த வகையான ஆலோசனையை நிதி ஆலோசகரிடமிருந்து எதிர்பார்க்கலாம்?
உங்களுடைய குறிக்கோள், இலக்கு, ரிஸ்க் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டத்தை நிதி ஆலோசகரிடமிருந்து எதிர்பார்க்கலாம். நிதி ஆலோசகர் உங்கள் வக்கீல், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட், ஸ்டாக் புரோக்கர் போன்றவர்களைக் கலந்தாலோசித்து உங்களுக்கான திட்டத்தை வழங்கினால் அது சிறப்பாக அமையும்.
திட்டம் ரெடி, அடுத்து என்ன?
எவ்வளவு அருமையான திட்டமாக இருந்தாலும் பயன்படுத்தாதவரையில் அது வெறும் பேப்பர்தான். நிதி ஆலோசகர் உங்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்கமுடியும். அதைச் செயல்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. உங்களுக்குத் தேவைப்பட்டால், சந்தேகம் இருந்தால் வேறொரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனை கேட்கவும் தயங்கக் கூடாது.
எப்போதெல்லாம் திட்டதை மாற்றி அமைக்கலாம்?
வாழ்க்கையில் எப்போதெல்லாம் முக்கியமான சம்பவங்கள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் மாற்றி அமைப்பது நல்லது. திருமணம், குழந்தை பிறப்பு மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் நேரும்போது திட்டத்தை மாற்றி அமைக்கலாம். பலர் வருடம் ஒருமுறை தங்கள் திட்டம் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பரிசீலனை செய்கிறார்கள். இந்தப் பரிசீலனையில் நம்முடைய இலக்குகளை காலமாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
ஓகே... தியரி முடிஞ்சாச்சு... பிராக்டிக்கல் பிளானிங்குக்கு தயாராகுங்க!
அப்பா சொன்ன பாடம்!
எபனேசர் செல்வம், தனியார் நிறுவன, மண்டல மேலாளர்.
''நான் இந்த அளவுக்கு வந்ததற்குக் காரணமே என் அப்பா சொல்லிக் கொடுத்த சேமிப்பு முறைகள்தான். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போதே எனக்கு வங்கியில் கணக்கு இருந்தது. அந்த வங்கிக் கணக்கை அப்பா ஞாபகமாக இப்போதும் தொடர்ந்து வருகிறேன். எனக்கு வங்கியின் கவுன்ட்டர் டேபிள்கூட எட்டாது... இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் எனக்காக ஒதுக்கும் சேமிப்புப் பணத்தை என்னையே கட்டச் சொல்வார்.
என் கல்யாணத்தின்போது எனக்கு சம்பளம் 3,000 ரூபாய்தான். என் மனைவி கருத்தரித்தபோதே என் அப்பா சொல்லிவிட்டார், 'குழந்தை பிறக்கும்போது உன் பணத்தில்தான் பிறக்கவேண்டும்' என்று. அப்போது இருந்து சிறுகச் சிறுகச் சேமித்து மனைவியின் டெலிவரியின்போது சுமார் 5,000 ரூபாய் கொடுத்தேன்.
என் அப்பா எனக்கு வங்கிக் கணக்கை தொடங்கிக் கொடுத்தது போல என் பையனுக்கு நான் ஆரம்பித்திருக்கிறேன். இன்ஷூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்கிறேன். குறிப்பிட்ட பணம் சேர்ந்தவுடன் நிலத்தில் முதலீடு செய்துவிடுவேன். பையனின் படிப்புக்காக அவனுடைய பெயரில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமித்து வருகிறேன். அவன் கல்லூரிக்குச் செல்லும்போது இந்தப் பணம் பயனுள்ளதாக இருக்கும். அப்போது நான் யாரிடமும் போய் நிற்கத் தேவையில்லை'' என்று சேமிப்பு பற்றிச் சொன்னவர், அடுத்து செலவுகள் பக்கம் டிராக் மாறினார்.
''நாங்கள் சிறு பொருளை வாங்கவேண்டும் என்றால் கூட தரமானதா என்று பார்த்துத்தான் வாங்குவோம். அதற்கு கொஞ்சம் அதிகம் செலவழிக்க வேண்டியிருந்தாலும் சரி, பணம் சேர்வதற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சரி, காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லை. ஒரு கட்டில் வாங்குவதற்கான பணம் சேர்க்க ஆறு மாதம் காத்திருந்தேன். தவணைமுறைக்கு நோ!'' என்றார் உறுதியாக...
திட்டமிடாமல் ஒரு பைசாகூட செலவழிக்க மாட்டேன்!
சிதம்பரம், தனியார் நிறுவன, ஃபைனான்ஸ் ஆபீஸர்.
''நான் பிறந்தது நடுத்தர குடும்பத்தில் என்பதால் எனக்குப் பணத்தின் அருமை நன்றாகத் தெரியும். திட்டமிடாமல் ஒரு பைசாகூட செலவழிக்க மாட்டேன். ஒவ்வொரு மாதமும் என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து என் குழந்தைகளின் கணக்குக்கு மாதம் 500 ரூபாயை மாற்றி விடுவேன். அந்தக் கணக்கில் 5,000 சேர்ந்தவுடன் தானாகவே ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மாறிவிடும். அவர்கள் உயர்கல்வித் தேவைக்கு இது பயன்படும். மாதம் 500 ரூபாய் எடுத்து வைப்பது பெரிய சுமையாகத் தெரியாது. அதேபோல குழந்தைகளின் படிப்பு என்பதால் அதிலிருந்தும் எடுக்க மனம்வராது.
மற்றபடி 1992-ல் இருந்தே பங்குச் சந்தையில் ஈடுபட்டு வருகிறேன். நிறைய லாபமும் சம்பாதித்திருக்கிறேன். சில நேரங்களில் நஷ்டப்படவும் செய்திருக்கிறேன். மற்றவர்களைப் போலவே நானும் தற்போதைய நிலை விரைவில் சீரடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்'' என்றார்.

No comments:

Post a Comment