Saturday 14 January 2023

நாணய சேகரிப்பு - தெரிந்து கொள்வோம்!

நாணய சேகரிப்பு - தெரிந்து கொள்வோம்!

நாணயங்கள் சேகரிப்பு போல் தபால் சேகரிப்பு, ரேடியோ சேகரிப்பு உள்ளிட்ட பல சேகரிப்புகள் உள்ளன. ஆனால், மற்ற சேகரிப்பு போல் நாணயங்கள் சேகரிப்பு கிடையாது. நாணயங்கள் சேகரிப்பை 'பொழுதாக்கத்தின் அரசன்' (King of the Hobby) என வர்ணிக்கப்படுவதும் உண்டு. நாணய சேகரிப்பு பொழுதுபோக்காகவும் இருந்து நம்முடைய கலை - இலக்கியம் சார்ந்த வரலாற்று தகவல்களை பேணி பாதுகாக்கவும் உதவுகிறது என்பதால்தான் இப்படி வர்ணிக்கப்படுகிறது.

ஒரு நாட்டின் 'மெட்டாலிக் எவிடன்ஸ்' (Metallic evidence) என்று சொல்லக்கூடிய நாணயங்களை பாதுகாக்கவும், அழிவில் இருந்து மீட்டெடுக்கவும் இந்த நாணய சேகரிப்பு உதவுகிறது. நாட்டின் மற்ற புராதன சின்னங்களான கோவில் கோபுரங்கள், செப்பேடுகள், நடுகற்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் இருந்து வரலாற்று சம்பவங்களை நினைவுகூரலாம். ஆனால், ஆகச் சிறந்த வரலாற்று சான்று, உலோகச் சான்று என்றால், அது நாணயங்கள் தான். ஒரு சின்ன நாணயத்தில் ஒரு வரலாற்று சம்பவத்தின் முழு பின்னணியை தெரிந்துகொள்ள முடியும்.

சமீபத்தில் அரசாங்கத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 25 பைசா நாணயம் உங்களிடம் கிடைத்தால் இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள். காரணம், அதன் மதிப்பு இன்றைக்கு 30 ரூபாய் என்கிறார்கள். 25 காசுக்கே இவ்வளவு மதிப்பு என்றால்,  பழங்கால நாணயத்திற்கு இன்னும் எவ்வளவு மதிப்பு இருக்கும்! உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால், அதை வைத்தே நீங்கள் பல ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்கலாம். எப்படி?

நாணயச் சங்கம்!

''மெட்ராஸ் காயின் சொஸைட்டி, நாணயம் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்காக 1991 முதலே செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் ஆர்வலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாணயம் சேகரிப்பு முறைகள், அதுகுறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் நாணயங்களைச் சேகரித்து வருகிறார்கள். ஆனால், எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. பழங்காலத்து நாணயங்களை சிலர் தகர டப்பாக்களில் போட்டு வைத்து வருகிறார்கள். இதனால் நாணயங்கள் நாளடைவில் துரு பிடித்துவிடும். சேகரிக்கப்படும் நாணயங்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு வைக்கலாம். அதைவிட கடையில் விற்கப்படும் காயின் ஆல்பங்களை வாங்கி அதில் நாணயங்களைப் போட்டு வைக்கலாம். ஆல்பத்தில் நாணயங்களைப் போடும்முன், வெதுவெதுப்பான நீரில் நாணயங்களைக் கழுவி எடுத்து பருத்தி துணியால் துடைத்து வெயிலில் சிறிது நேரம் காயவைத்து அதன்பிறகே ஆல்பத்தில் போடலாம்.

விற்பனையும், விலை நிர்ணயமும்!

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அஸ்விதா கேலரியில் நாணயம் சேகரிப்பாளர்கள், வியாபாரிகள் கூடுவார்கள். அங்கு அவர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை மெட்ராஸ் காயின் சொஸைட்டியில் உள்ள மூத்த நாணயம் சேகரிப்பாளர்கள் நிவர்த்தி செய்வார்கள். பின்னர் வியாபாரிகளுக்கும், சேகரிப்பாளர்களுக்கும் இடையில் இருக்கும் நாணயங்கள் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்கள் நடக்கும்.

நாணயம் விற்பவர்கள் நிர்ணயிக்கும் விலையானது வாங்கும் ஆர்வலர்களுக்கு உடன்பாடாக இல்லை என்று அவர்கள் எங்களை நாடினால், அதற்கான விலையை நிர்ணயிக்க நாங்கள் உதவுவோம். 1 அணா, 10 பைசா, 20 பைசா, குறிப்பிட்ட தலைவர்களின் உருவம் பதிக்கப்பட்ட நாணயம் மற்றும் வெளிநாட்டு அரிய நாணயங்கள் போன்றவற்றுக்கு சந்தையில் தனியாக விலை மதிப்பிடப்படுகிறது. இந்த விலை டிமாண்ட் பொறுத்து மாறும். இந்தியா மற்றும் உலக நாடுகளில் உள்ள நாணயங்களின் விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் கடைகளில் கிடைக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கி நாணயம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது''.

நாணய சேகரிப்பின் பயன்கள்

இந்த நாணய சேகரிப்பால் என்ன பயன் என்றால், வகைப்படுத்தும் திறன், வரிசைப்படுத்தும் திறன், உற்றுநோக்கும் திறன், பகுத்தறியும் பண்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள முடியும். நாணய சேகரிப்பு மூலம் ஒருவரின் கவனிப்பு திறன் மேம்படுத்த முடியும். மேலும், ஒரு நாணயத்தை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் பல தகவல்களை, வரலாற்று ரீதியாக தெரிந்துகொள்ளும் பணப்பை நாணய சேகரிப்பு வழங்குகிறது. ஒரு நபரின் அறிவை பெருக்கக்கூடிய மிகப்பெரிய பங்களிப்பை, நாணய சேகரிப்பு செய்கிறது. எனவே, இது சாதாரண பொழுதுபோக்கு கலை என்பது மட்டுமில்லாமல், நம்முடைய வரலாற்றைப் பேணிக் காக்கக்கூடிய பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.

போலி நாணயங்கள் உஷார்!

''வாடிக்கையாளரிடமிருந்து பழங்கால நாணயங்களைப் பெற்றுக்கொண்டு அந்த நாணயங்களின் தரத்திற்கேற்ப விலை தருகிறோம். இந்த நாணயங்களை நாங்கள் ஒன்று சேர்த்து ஆல்பம் செய்து சந்தையில் விற்றுவிடுவோம். இந்த ஆல்பங்கள் தலைவர்களின் உருவங்கள் மற்றும் பல உருவங்கள் அச்சிடப்பட்ட தொகுப்புகளாகவும், அது தயாரிக்கப்பட்ட காலம் சார்ந்தும் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் நாணயங்கள் நூறு முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட்டவையாக இருந்தால், அவற்றின் நிலைக்கேற்ப 200 ரூபாய் முதல் 1,500 ரூபாய்வரை தருவோம். மன்னர் காலத்து நாணயங்கள், மேலும் சில அரிய வகை நாணயங்கள் லட்சம் ரூபாய் வரை விலை போகக்கூடியவை.

இதைச் சாக்காக வைத்து சிலர் போலியான நாணயங்கள், போலியாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளையும் காட்டி மக்களை ஏமாற்றி சந்தையில் விற்கின்றனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகம் நேராக இருப்பது போன்ற நாணயம் அரசால் அச்சிடப்படவேயில்லை. ஆனால், அப்படி ஒரு நாணயம் இருப்பதாகவும் அதன் விலை 20,000 ரூபாய் என்றும் சிலர் ஏமாற்றி வருகின்றனர். அதேபோல் பழைய நூறு ரூபாய் நோட்டில், உலக உருண்டையில் பாம்புகள் சுற்றி பின்னிக் கொண்டிருப்பதுபோல போலி நோட்டுகளை அச்சிட்டு லட்சக்கணக்கில் சந்தையில் விற்கின்றனர். மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம். இந்தியன் காயின் சொஸைட்டி என்ற அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தில் பழங்காலத்திலிருந்து தற்போதுள்ள நாணயங்கள் வரை இந்தியாவில் கிடைக்கும் அனைத்து நாணயங்களின் எடை, அளவு, நிறம், செய்யப்பட்ட உலோகம், காலம் போன்ற குறிப்புகள் தரப்பட்டிருக்கும். அந்தத் தகவல்களைப் பார்த்து, வாங்கும் நாணயம் உண்மையானதுதானா எனத் தெரிந்துகொள்ளலாம்''

கவனிக்க!

பழங்கால நாணயங்களை வாங்கும்போது பின்வரும் விஷயங்களைக் கவனிப்பது நல்லது.

1.போலியான நாணயங்கள் பாலிஷ் செய்யப்பட்டிருக்கும், எடையில் மாறுதல்கள், வடிவம் மற்றும் தர வேறுபாடுகள் இருக்குமானால் அவை போலியானவை.

2.எந்தெந்த கடைகள் உண்மையானவை என்று ஆராய்ந்தபின் நாணயங்கள் வாங்க வேண்டும்.

3.அரசு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட நாட்களில் பழங்கால நாணயங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அதற்கான அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியிடப்படும். அங்கு சென்று பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். சிலர் தாங்கள் சேகரித்துவைத்திருக்கும் நாணயங்களை விற்க முன்வருவார்கள். அவர்களிடமும் பெறலாம்.

அறிவுக்கு விருந்தாகவும், நிலையான வருமானத்தையும் தரும் இந்த நாணயம் சேகரிப்பை இனி நீங்கள்கூட செய்யலாமே!

No comments:

Post a Comment