Wednesday, 1 July 2015

வரி தாக்கல்... செக் லிஸ்ட்!


'ஓரெண்டு ரெண்டு... ஈரெண்டு நாலு' என்ற வாய்ப்பாடு தொடக்கப் பள்ளியில் படித்ததுதான்... ஆனால், சின்னதாகக் கணக்குப் போடுவது என்றாலும் அந்த வாய்ப்பாடு நிச்சயம் தேவைப்படும். அதுபோலத்தான் வரித் தாக்கல் தொடர்பான செக் லிஸ்ட்டும்! எத்தனை முறை செய்திருந்தாலும் அடிப்படையான விஷயங்களைக் கொஞ்சம் துடைத்துப் பளிச்சிடச் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதற்கான நேரம் இது. கடைசி நிமிடத்தில் அவதி அவதியாக ஓடாமல் நிதானமாக இப்போதே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!
யாரெல்லாம் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவேண்டும்?
மொத்த வருமானம் 1.5 லட்ச ரூபாயைத் தாண்டினால் (வரி எதுவும் கட்டவில்லை என்றாலும்) வரிக் கணக்குத் தாக்கல் செய்யவேண்டியது அவசியம்.
பெண் என்றால் 1.80 லட்ச ரூபாய்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 2.25 லட்ச ரூபாய்.
அதேநேரத்தில், மொத்த வருமானம் மேற்கண்ட தொகையை விடக் குறைவாக இருந்தாலும், ஏதாவது வருமானத்துக்கு டீ.டி.எஸ் (TDS) பிடிக்கப்பட்டிருந்தால் வரிக் கணக்குத் தாக்கல் செய்வது அவசியம்.
தேவையான ஆவணங்கள் எவை?
வரிக் கணக்குத் தாக்கல் படிவத்துடன் எந்த ஆவணத்தையும் இணைத்துக் கொடுக்கவேண்டியதில்லை. அதே நேரத்தில், வரித் தள்ளுபடிக்காக செய்த முதலீடு மற்றும் செலுத்திய பணத்துக்கான ஆதாரத்தைத் தயாராக வைத்திருக்கவேண்டும். வருமான வரி அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கேட்கும்போது அவற்றைக் காட்டவேண்டும்.
'பான்' எண்ணை வரிக் கணக்குப் படிவத்தில் குறிப்பிடுவது கட்டாயம்.
80 சி, 80 டி, 80 டிடி. போன்ற பிரிவுகளின் கீழ் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள்.
ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற இதர வருமானத்துக்கு டீ.டி.எஸ். சான்றிதழ் 16 ஏ.
மாதச் சம்பளக்காரர்கள் என்றால் படிவம் 16.
வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டியைத் திரும்பச் செலுத்தியதற்கான சான்றிதழ்.
வரிக் கணக்கு கணக்கிடுவது எப்படி?
நிதி ஆண்டில் ஆயுள் காப்பீடு பிரீமியம், தொழிலாளர் பிராவிடன்ட் ஃபண்ட், பொது பிராவிடன்ட ஃபண்ட், இ.எல்.எல்.எஸ். முதலீடு, இரு குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், மருத்துவக் காப்பீடு பிரீமியம், நன்கொடை மற்றும் இதர வரிச் சலுகைகளைத் தனியே குறித்துக்கொள்ளவேண்டும். இவற்றை மொத்த வருமானத்திலிருந்து கழித்தால் கிடைப்பது வரிக்கு உட்பட்ட வருமானம்.
இதற்கான வரியை உங்கள் சம்பளத்திலிருந்து அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப ஏற்கெனவே பிடித்திருந்தால் வரி எதுவும் கட்டத் தேவையில்லை. அப்படி இல்லாமல் வரி கட்டவேண்டும் என்றால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன், படிவம் 280-ஐ பூர்த்தி செய்து வரித் தொகையை ரொக்கமாகவோ, காசோலையாகவோ ஒரு வங்கியில் செலுத்தி விடவேண்டும். நெட் பேங்க்கிங் வசதி இருந்தால் அதன் மூலமும் செலுத்தலாம். இவ்விதம் பணம் செலுத்தும்போது பிரத்யேக எண்ணுடன் ரசீது ஒன்றைத் தருவார்கள். அந்த எண்ணை வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
எந்தப் படிவத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவேண்டும்.?
மாதச் சம்பளக்காரர்கள் அவர்களின் வருமான ஆதாரத்தைப் பொறுத்து, அதற்கென உள்ள படிவத்தில் தாக்கல் செய்யவேண்டும்.
ஐ.டி.ஆர். - 1 சம்பளம், பென்ஷன், வட்டி வருமானம் மட்டும் உள்ளவர்களுக்கு.
ஐ.டி.ஆர். - 2 சம்பளம், பென்ஷன், வட்டி, மூலதன ஆதாயம், வீட்டு வாடகை போன்ற வருமானம் உள்ளவர்களுக்கு.
ஐ.டி.ஆர். 3 கூட்டு வணிகம் புரியும் தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினருக்கான படிவம்.
ஐ.டி.ஆர். - 4 வணிகம் அல்லது நிபுணத்துவம் மூலம் (டாக்டர், வக்கீல் போன்றவர்கள்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு.
ரிட்டர்ன் தாக்கல் செய்வது எப்படி?
2008-09-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை மதிப்பீடு ஆண்டு (2009-10) 2009-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.
வருமான வரிக் கணக்கை ஐ.டி.ஆர். படிவம் (ஆஃப்லைன்) அல்லது இன்டர்நெட் (ஆன்லைன்) மூலம் தாக்கல் செய்யலாம்.
ஆஃப் லைன் முறை
இந்த முறையில் ஐ.டி.ஆர். படிவத்தைப் பூர்த்தி செய்து அருகிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கொடுத்து விடலாம். அல்லது சார்ட்டட் அக்கவுன்டன்ட் மூலம் தாக்கல் செய்யலாம். அல்லது வருமான வரித்துறை அலுவலகத்தில் வரிப் படிவம் பூர்த்தி செய்வதில் உதவி செய்வதற்கு என்று நியமிக்கப்பட்டிருக்கும் டி.ஆர்.பி. (Tax Return Preparer) மூலம் தாக்கல் செய்யலாம். ஐ.டி.ஆர். படிவத்துடன் எந்த ஓர் ஆவணத்தையும் இணைக்கத் தேவையில்லை. சார்ட்டட் அக்கவுன்டன்ட்டுக்கான கட்டணம் 200 ரூபாயில் தொடங்கி சுமார் 2,000 ரூபாய் வரை வருமானம் மற்றும் வருமான ஆதார எண்ணிக்கையைப் பொறுத்திருக்கும்.
ஆன் லைன் முறை
இணைய தளம் மூலம் மூலம் ரிட்டர்ன் தாக்கல் செய்வது இ-ஃபைலிங்.
இம்முறையில் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வருமான வரித்துறையின்new.incometaxindiaefiling.gov.in இணைய தளத்துக்குச் சென்று, உங்களின் பான் எண்ணை 'யூசர்நேம்' ஆக கொடுத்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். அதன் பிறகு தேவையான ஐ.டி.ஆர். படிவத்தை டவுன் லோட் செய்துகொள்ளவேண்டும். அதை படிவம் 16-ல் உள்ள விவரங்களைக் கொண்டு நிரப்பி, மேலே கூறப்பட்ட வருமான வரி இணையதளத்தில் 'அப்லோட்' செய்யவேண்டும். அப்போது உரிய இடத்தில் டிஜிட்டல் கையெழுத்தைப் பதிவுசெய்து அனுப்பவேண்டும். உங்களுக்கு வரித் தாக்கல் செய்ததற்கான அத்தாட்சி இ-மெயில் மூலம் அனுப்பப்படும். ஐ.டி.ஆர்- V (ITR- V) டிஜிட்டல் கையெழுத்து இல்லாதவர்கள், நிரப்பப்பட்ட ஐ.டி.ஆர். படிவத்தை பிரின்ட் எடுத்து, அதில் கையெழுத்துப் போட்டு அருகிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கொடுத்து அக்னாலெட்ஜ்மென்ட் வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்யவில்லை என்றால் வரிக் கணக்குத் தாக்கல் செய்ததாகவே எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இ-ஃபைலிங் மூலம் ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது சில கட்டங்களை/தகவல்களை நிரப்ப நாம் மறந்துவிட்டாலும் அதை கம்ப்யூட்டர் நமக்கு நினைவுபடுத்தும் விதமாக சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறார்கள்.
இ-ஃபைலிங் செய்ய தனியார் வெப்சைட்களும் இப்போது உதவிபுரிகின்றன. அதற்கெனத் தனியே கட்டணம் வாங்கிக் கொள்கின்றன.
ரீஃபண்ட் பெற என்ன செய்யவேண்டும்?
அதிகமாக வரி கட்டியிருந்தால் அதைத் திரும்பப் பெற, ஐ.டி.ஆர். படிவத்தில் உங்களின் தொடர்பு விவரங்களோடு வங்கியின் பெயர், வங்கியின் 'எம்.ஐ.சி.ஆர்' எண், உங்களின் கணக்கு எண்ணைக் குறிப்பிட வேண்டும். சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யும்பட்சத்தில், அதிகமாகக் கட்டிய வரிக்கு நிதி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே வட்டி கிடைக்கும்.
கெடு தாண்டிவிட்டால்..!
வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஜூலை 31-ம் தேதி. இதைத் தவற விட்டுவிட்டால் என்ன செய்வது?
நீங்கள் வரி எதுவும் கட்டத் தேவையில்லை என்கிறபோது வரிக் கணக்குத் தாக்கலை அபராதம் இன்றி, 2010 மார்ச் 31-ம் தேதி வரை செய்ய மத்திய வருமான வரித்துறை அனுமதிக்கிறது.
ஜூலை 31-ம் தேதிக்குள் வரியைக் கட்டவில்லை என்றால், அதற்கான அபராத வட்டியுடன் 2010 மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்துகொள்ளலாம். இந்தக் கால கெடுவையும் தாண்டினால்தான் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். சில நேரங்களில் மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். நியாயமான காரணம் இருந்தால் இவை எதுவும் இல்லாமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது.
சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்வதன் பலன்..!
சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால்தான் ரிட்டர்ன் படிவத்தில் ஏதாவது தவறு அல்லது விடுதல் இருப்பது தெரியவந்து அதைச் சரிசெய்து புதிதாகத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. நாள் கடந்து ரிட்டர்ன் தாக்கல் செய்து, அதில் தவறு இருப்பது தெரியவந்தால் புதிதாக ரிட்டர்ன் தாக்கல் செய்ய அனுமதி இல்லை.
சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்திருந்தால்தான், பங்கு முதலீடு மூலமான இழப்பை அடுத்து வரும் நிதி ஆண்டுக்கு எடுத்துச் செல்லமுடியும்.
திட்டமிடுங்கள்..! சரியான நேரத்தில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுங்கள். பணத்தை மிச்சப்படுத்துவதோடு நிம்மதியாகவும் இருங்கள்.

எகிறும் விலைவாசி... சமாளிப்பது எப்படி? கவர் ஸ்டோரி

'இந்தியர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள். முன்பெல்லாம் 1,000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களைத் தூக்கி வர இரண்டு திடகாத்திரமான ஆட்கள் தேவைப்பட்டார்கள். இப்போது அதே மதிப்புள்ள மளிகைப் பொருட்களைத் தூக்கிவர ஒரு சிறுவனே போதும்...'
-நகைச்சுவைத் துணுக்கு போலத் தோன்றும் இந்த வாக்கியம், உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தின் நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்க்கிறது. இந்தியர்கள் பலசாலிகளாக மாறிவிட்டார்கள் என்பதல்ல அதன் பொருள்... இந்திய சந்தையில் மளிகைப் பொருட்களின் விலை எந்த அளவுக்குத் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது என்பதே மேற்கண்ட துணுக்கு உணர்த்தும் செய்தி.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு கூடிப்போயிருக்கிறது. கிலோ 6 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இப்போது கிட்டத்தட்ட 24 ரூபாய்க்கு விற்கிறது. கிலோ பீன்ஸின் விலை 80 ரூபாய். மார்ச் கடைசி வாரத்தில் மட்டும் நாடு முழுக்கவும் காய்கறிகளின் விலை 4.1% ஏறியிருக்கிறது. காய்கறிகள்தான் என்றில்லை. எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு என வீட்டின் சமையலறைப் பொருட்கள் முதல், கட்டுமானப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் உச்சத்தில்தான் இருக்கிறது. காரணம்..? பணவீக்கம்! பிரதமர் உள்பட எல்லோராலும் சுட்டிக்காட்டப்படும் மையக் காரணம் இதுதான்.
நாட்டின் பணவீக்கம் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.41 என்ற உச்ச சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த 2004, நவம்பர் 6-ல் பணவீக்க விகிதம் 7.76 சதவிகிதமாக இருந்தது. அதன்பிறகு குறைந்துகொண்டே வந்து, இப்போது மறுபடியும் உயரத்துக்குச் சென்றிருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் பணவீக்கம் கிட்டத்தட்ட 50% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், அரிசி (பாசுமதியைத் தவிர) போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
ஒவ்வொரு குடும்பமும் தன் வீட்டு பட்-ஜெட்டில் வழக்கமாகத் துண்டு விழும் தொகையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், 'எப்-போது உணவுப் பொருட்களின் விலை குறை-யும்..?' என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்-கிறது. இந்தக் கேள்விக்கு விடைகேட்டு, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்சவாவைச் சந்தித்தோம்.
''இந்த திடீர் விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம், பல ஆண்டுகளாக நாட்டின் அத்தியா-வசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து-கொண்டே வந்ததுதான். அதிலும் குறிப்-பாக, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்காத சூழ்நிலையில், பற்றாக்குறையைச் சமாளிக்க நாட்டின் சேமிப்புக் கிடங்குகளில் (Buffer Stocks) உள்ளவற்றைத்தான் எடுத்துப் பயன்படுத்தி வந்தோம். தற்போது அவை தீர்ந்து-போகிற நிலை வந்துவிட்டதால், அவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெளிநாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்க-வேண்டிய சூழ்-நிலையும், உள்நாட்டில் அப்பொருட்களின் தேவை அதிகரிப்பும் ஒன்றிணைந்ததால் விலைவாசி உயர்ந்துவிட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8-9% என்ற அளவில் நல்லவிதமாகத்தான் இருக்கிறது. ஆனா-லும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டு-களாக அறுவடைக் காலங்களில் நாடு முழுவதும் மழைபெய்ததால், உணவு உற்பத்தி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் போன்றவற்றின் உற்பத்தி குறைந்தது. பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், கிடைக்கும் பொருட்களின் அளவு குறைவாகவும் இருந்த-தால் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது.
இது ஒவ்வொரு ஆண்டும் மெள்ள, மெள்ள நடந்ததால் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை. தொழில்துறை, சேவைத்துறை போன்றவை பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுவதில்லை என்பதால், இதே காலகட்டத்தில் அத்துறைகளின் வளர்ச்சி தடையின்றி முன்னோக்கி இருந்தது. இதனால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எவ்விதப் பின்னடைவும் ஏற்படவில்லை.
அதேநேரம் இந்த பணவீக்க உயர்வும், அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியும் இந்தியா-வுக்கு மட்டுமான பிரச்னை இல்லை. ரஷ்யா 11.9%, சீனா 8.7%, துருக்கி 8.1%, அர்ஜென்டினா 7.3% என்ற மற்ற நாட்டு பணவீக்க விகிதங்களும் மிக அதிகமாகத்தான் இருக்கின்றன.
இந்தியாவின் உணவுப்பொருள் உற்பத்தி குறைந்தது ஒரு காரணமென்றால், மற்ற நாடுகளின் பொருளாதாரத் தேக்கநிலையும் இன்னொரு காரணம். இதனால் இது உடனடியாக முடிவுக்கு வரக்கூடிய விவகாரமாகத் தெரியவில்லை. மத்திய அரசு இப்போது தாமதமாக விழித்துக்கொண்டு பண-வீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இதேபோல மற்ற நாடுகளும் தத்தமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் நடைமுறைக்கு வந்து பொருட்களின் விலை குறையத் தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். சகஜநிலைக்குத் திரும்ப ஒரு வருடமாவது தேவைப்படும் என்பது என் கணிப்பு...'' என்றார்.
உலக அளவில் பணவீக்கம் ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், கடந்த 2007 ஆகஸ்டுக்கும் இந்த 2008 மார்ச்சுக்கும், இடையே பன்னாட்டுச் சந்தையில் வேளாண் பொருட்களின் விலை 73%, உணவுப் பொருட்களின் விலை 88%, கோதுமை விலை 74%, அரிசி விலை 72%, எண்ணெய் விலை 71%, சர்க்கரை விலை 35% என உயர்ந்திருக்கிறது. இந்தியச் சந்தையில் கடந்த ஒரு வருடத்தில் சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை 215-220 ரூபாயிலிருந்து 255-260 ரூபாயாகவும், கட்டுமானத்துக்குப் பயன்படும் கம்பி ஒரு கிலோ 32 ரூபாயிலிருந்து 50 ரூபா-யாகவும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வால் பாதிக்கப்படுவது என்னவோ நடுத்தர மக்கள்தான். அவர்களால் எப்படி இதைச் சமாளிக்க முடியும்..? இதைப்பற்றி மேக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நிதி ஆலோசகர் என்.பன்னீர்செல்வத்திடம் பேசினோம்.
''நாட்டின் பணவீக்க விகி-தம் 7.41%-ஐ தொட்-டுள்ளது. இந்நிலையில் ஃபிக்ஸட் டெபா-சிட்டுக்குக் கிடைக்கும் வட்டியான 8% என்பது, வரிபோக நெகட்டிவ் ரிட்டர்னைத் தருவதாக இருக்கிறது. எனவே, பணவீக்க விகிதத்தையும் மீறி நல்ல வருமானம் பெற நினைப்பவர்கள், நீண்டகால அடிப்படையில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சமீபகாலமாக பிரபலமாகி வரும் கோல்டு இ.டி.எஃப். ஃபண்டுகள் இதுபோன்ற நேரங்களில் முதலீடு செய்ய ஏற்றது'' என்று முதலீட்டு ஆலோசனை கூறினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கையாகச் செய்யவேண்டியது ரூபாயின் மதிப்பை உயர்த்துவதுதான். அதன்மூலம் இறக்கு-மதியாகும் பொருட்களுக்குக் கொடுக்கும் பணத்தின் மதிப்பு குறையும். இதில் ஏற்றுமதி பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. கூடவே இறக்குமதியாகும் பொருட்களை உள்நாட்டில் தயாரிக்கும் நிறுவனங்-களும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. ஆனால், உடனடியாக பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு-வர இதுதான் தீர்வாக இருக்கும்.
நீண்டகாலத் தீர்வாக யோசித்தால் உணவுப்பொருட்கள் இறக்குமதிகளைக் குறைத்து நம் தேவைகளை நாமே தீர்த்துக்கொள்ளும் வகையில் விவசாயத்தில் தன்னிறைவு அடைவதுதான். இதனால், பொருட்களை இறக்குமதி செய்யும்போது அந்த நாட்டின் பணவீக்கத்தையும் சேர்த்தே இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது என்ற பிரச்னை தீரும்.
இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
சமாளிக்க சில டிப்ஸ்...
சேமிப்பை கைவிடாதீர்கள்
பட்ஜெட் இடிக்கும்போது எல்லோரும் முதலில் செய்வது மாதச் சேமிப்புக்காக ஒதுக்கி வைக்கும் தொகையில் கைவைப்பதுதான். ஆனால், ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. சேமிப்பைக் குறைக்காமல் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். சேமிப்பையும் இதுபோன்ற நேரத்தில் தங்கமாகச் சேர்ப்பதுதான் சரியானதாக இருக்கும்.
பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துங்கள்
முடிந்தவரையில் பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள். சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் தனித்தனியே போகாமல் நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டு ஒரே வாகனத்தில் செல்வதால் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம்.
ஓட்டல் பில் வேண்டாமே
மாதத்துக்கு நான்கு தடவை குடும்பத்துடன் வெளியில் ஓட்டலுக்குச் சாப்பிடச் செல்வது வழக்கம் என்றால், அதை இரண்டு தடவையாகக் குறைத்துக் கொள்ளலாம்.
வீட்டுக் கடனை மாற்றுங்கள்
வீட்டுக் கடன் வாங்கியவராக இருந்தால் உங்கள் வங்கியின் மாறுபடும் வட்டிவிகிதம் என்னவென்பதைப் பாருங்கள். 11 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் உடனடியாக 9.50% வட்டிவிகிதம் உள்ள வங்கிக்கு உடனடியாக மாறுவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். அல்லது கணிசமான தொகை கையில் இருந்தால், அதைக்கொண்டு கடனில் ஒருபகுதியை அடைத்துவிடலாம். கழுத்தை நெறிக்கும் கடன் தவணையில் இருந்து தப்பமுடியும்.
எண்ணெய் குறையுங்கள்
பொதுவாகவே சமையலில் நாம் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்து-கிறோம். இதைக் குறைப்பது ஆரோக்கியத்துக்கும் பட்ஜெட்டுக்கும் நல்லது. அதேபோல விரைவில் கெட்டுப்போகாத பருப்பு வகைகளை மொத்த விலைக்கடையில் வாங்குவது லாபகரமானது.
செல்போன் பில்லை கவனியுங்கள்
செல்போன் உபயோகம் என்பது நம்மில் பலருக்கு ஆடம்பரச் செலவாகவே இருக்கிறது. சுருக்கமாகப் பேசி முடிப்பது, தகவல்களைச் சொல்ல எஸ்.எம்.எஸ்-ஐ பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் செல்போன் செலவை நன்றாகவே குறைக்கமுடியும்.
மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்
அதிக மின்சாரம் குடிக்கும் பொருட்களை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்கலாம்.
கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துங்கள்
கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தும்பட்சத்தில் வட்டி எதுவும் கிடையாது. இந்த வசதியைப் புத்திசாலித்தனமாகவும், கவனமாகவும் பயன்படுத்தினால் நல்ல லாபம் உண்டு. நம் சேமிப்புப் பணத்துக்குக் கிடைக்கும் குறைந்தபட்சமான 3.5% வருமானம் லாபமான ஒன்றுதானே!
பார்ட்டைம் வேலை
இல்லத்தரசிகளும் டியூஷன் போன்ற பகுதிநேர வேலை செய்வதன் மூலம் குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
காரணம் ஆன்லைன் வர்த்தகமா..?
நாட்டில் எப்போதெல்லாம் விலைவாசி உயர்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 'ஆன்லைன் டிரேடிங்-தான் காரணம்' என்ற குரலும் எழும். அதே குரல் இப்போதும் ஒலிக்கிறது.
இணையம் மூலமாக நடைபெறும் முன்பேர வர்த்தகத்தைதான் ஆன்லைன் டிரேடிங் என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி, சந்தையில் அந்தப் பொருளின் தேவை இவற்றை வைத்து, இன்னும் சில மாதங்கள் கழித்து அந்தப் பொருளின் விலை இவ்வளவாக இருக்கும் என முடிவு செய்து ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட தேதிவரைக்கும் விற்பவர்/வாங்குபவர் இருவருமே அந்தப் பொருளைக் கண்ணால் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆனால், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில், அந்த விலைக்குப் பொருளை டெலிவரி கொடுக்க வேண்டும். இதுதான் ஆன்லைன் டிரேடிங்.
இதில், ஆன்லைன் டிரேடிங் வியாபாரிகள் ஒரு பொருளுக்குத் தாங்கள் நிர்ணயித்த விலையைவிட சந்தை விலை குறைவாக இருக்கும்பட்சத்தில், அதன் விலையைச் செயற்கையாக ஏற்றிவிடுகிறார்கள் என்பது-தான் அவர்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டின் சாராம்சம். இதுபற்றி, திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு சுற்றுச் சூழல் கழகத்தின் தலைவர் அந்தோணிசாமியிடம் கேட்டோம்.
''ஆன்லைன் வர்த்தகம் என்பது தொழில்நுட்பம் தெரிந்த-வர்கள் மட்டும் சம்பாதிக்கும் விஷயம்... அவ்வளவு-தான். சந்தையில் அதிகம் இருப்புள்ள அல்லது கிடைக்கக்கூடிய பொருட்களைத் தவிர்த்துவிட்டு, டிமாண்ட் உள்ள வேறொரு பொருளுக்குச் செயற்கையான கிராக்கியை ஏற்படுத்தி, அதன் விலையைக் கூட்டிவிடுகிறார்கள். அதே நேரத்தில் விலை குறைந்த, அதிகமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வாங்கி பதுக்கிவைத்துவிட்டு, பின்பு அவற்றுக்கும் விலையை உயர்த்துவார்கள்.
ஆன்லைன் வர்த்தகத்தால் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று சொல்வதும், நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. அங்கும் தொழில்நுட்பம் தெரிந்த வியாபாரிகள்தான் பலனடைவார்கள். இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர சுலப-மான தீர்வு, முன்பு அந்தந்தப் பகுதிகளில் நடந்துகொண்டிருந்த பாரம்பரியமான வாரச்சந்தைகளுக்கு புத்துயிர் கொடுப்பதுதான். உற்பத்திப் பொருட்கள் உள்ளூர் சந்தைக்கு வருவதால் போக்குவரத்துச் செலவு, இடைத்தரகர்கள் கமிஷன் எதுவுமின்றி குறைந்த விலையில் நுகர்வோருக்குப் பொருட்கள் கிடைக்கும்'' என்றார்.
ஆனால், ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவான குரல்களும் இல்லாமல் இல்லை. இதைப்பற்றி, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (சுருக்கமாக எம்.சி.எக்ஸ்.) நிறுவனத்தின் சீஃப் எக்கனாமிஸ்ட் சண்முகத்திடம் பேசினோம்.
''ஒரு பொருளை விற்-பவரும், வாங்குபவரும் பரிமாறிக்கொள்வதுதான் எக்ஸ்சேஞ்ச். ஆன்லைன் டிரேடிங் செய்யும்போது, பொருளுக்குப் பதி-லாக ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க எங்களைப் போன்ற நிறுவனங்களும், எங்களைக் கண்காணிக்க மத்-திய அரசின் முன் பேர வர்த்தக சந்தை- ஆணையமும் (Forward market commission) இருக்கிறது.
ஆன்லைனில் நடக்கும் அனைத்து வியாபாரங்களும் வெளிப்படையானவை. யார் வேண்டுமானாலும் அதைப் பார்க்கலாம். கடந்த ஆண்டும் கூட ஆன்-லைன் வர்த்தகத்தால் விலைவாசி உயர்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடனே அரசு ஆன்லைன் மூலமாக துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவற்றை வியாபாரம் செய்ய தடை விதித்ததோடு, இதைப்பற்றி ஆய்வு செய்ய அபிஜிப்சென் (Abhijipsen) என்பவர் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது. ஆய்வுக்கு பின், 'விலை ஏற்றத்துக்குக் காரணம் ஆன்லைன் வர்த்தகம் இல்லை' என்று அவர் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், மேற்சொன்ன நான்கு பொருட்களையும் ஆன்லைனில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றின் விலை வெளிச்சந்தையில் தொடர்ந்து ஏறிக்கொண்டேதான் இருந்தது/இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா, விலை ஏற்றத்துக்கும், ஆன்லைன் வர்த்தகத்துக்கும் தொடர்பு இல்லை என்பது..?'' என்றார்.

சொத்துப் பத்திரம் காணாமல் போனால்...

வாழ்க்கையில் எதிர்பாராதது ஒன்றுதான் எதிர்பார்க்கக் கூடியது என்பார்கள். அப்படித்-தான் டெல்லியைச் சேர்ந்த சுதிர் பாவா என்பவர் விஷயத்திலும் நடந்தது. அவர் பன்-னாட்டு வங்கி ஒன்றில் 2000-ல், 9 லட்சம் ரூபாய்
வீட்டுக் கடன் வாங்கி இருந்தார். 2002-ல் கடனை முழுமையாகச் செலுத்திவிட்டு, வீட்டுப் பத்திரத்தைக் கேட்டால், 'பத்திரம் காணாமல் போய்விட்டது' என்று வங்கி ஒரு வரியில் சொல்லிவிட்டது. அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஒன்றைத் தாக்கல் செய்துவிட்டு வங்கி எனக்கென்ன என்று விலகி விட்டது. பத்திரம் காணாமல் போனதற்கு இழப்பீடு எதுவும் தரவில்லை. ஒரிஜினல் பத்திரம் இல்லாத நிலையில், வீட்டை சுமார் 10 லட்சம் ரூபாய் நஷ்டத்துக்கு விற்றிருக்கிறார் பாவா. இந்த நஷ்டத்தைத் தவிர்க்க வேண்டுமானால் வங்கியின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து கோர்ட்டுக்குத்தான் செல்லவேண்டும் என்பதுதான் சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
இப்படி பத்திரம் தொலைந்துபோவது என்பது வங்கிகளில் மட்டும் நடக்கக்கூடிய விஷயமல்லவே. நமது வீடுகளிலேயே கூட நடக்கலாம். ஒரிஜினல் பத்திரம் இல்லாவிட்டால் அந்தச் சொத்தின் மதிப்பைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. நிச்சயம் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள். இப்படி எதிர்பாராதவிதமாக பத்திரங்கள் காணாமல் போகும்போதோ சேதமடையும்போதோ என்ன செய்யவேண்டும்? இவை குறித்து அறிய சொத்து ஆலோசனை நிறுவனமான ரேங்க் அசோஸியேட்ஸின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.சி.ரகுராமை அணுகினோம்.
''எழுபதுகளில் அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான ஒரிஜினல் ஆவணங்கள் தீயில் எரிந்துவிட்டன. ஆனால், எல்.ஐ.சி. கொடுத்த சான்றிதழ்களைக் கொண்டு அனைவராலும் எரிந்த பத்திரத்துக்குரிய சொத்துக்களைப் பிரச்னை இல்லாமல் சந்தை விலையில் விற்க முடிந்தது.
இன்னொரு சம்பவம்... ஒரு பன்-னாட்டு வங்கி தனது அலுவலகத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றும்போது சில ஆவணங்களைத் தொலைத்துவிட்டது. அந்நிலையில், வங்கி கொடுத்த உறுதிமொழிப் பத்திரம் (Indemnity) மூலம் சொத்து விற்கப்பட்டன. அதனால் வங்கியோ, நிதி நிறுவனங்களோ முறையான சான்று-களைக் கொடுத்தால் விற்பனை செய்வதில் எந்தச் சிக்கலும் வரப்போவதில்லை. வங்கியில் அடமானம் வைத்த சொத்துப் பத்திரம் காணாமல் போய்விட்டது என்கிறபோது, இதற்கு வங்கியின் அஜாக்கிரதை, அலட்சியம் என்று நிரூபிக்க முடிந்தால் நஷ்டஈடு பெற வாய்ப்பு உள்ளது'' என்றவர், தனி நபர் விஷயத்தில் சொத்துப் பத்திரம் சேதமடைந்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லத் தொடங்கினார்.
''சொத்து ஆவணங்கள் கிழிதல், கறையான் அரித்தல், தண்ணீர்பட்டு எழுத்துகள் அழிதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், அவற்றை அந்நிலையிலேயே பாதுகாத்து வருவது அவசியம். 'ஒரிஜினல் ஆவணம் சேதம் அடைந்துவிட்டதால்தான் மாற்று ஆவணம் பெற்றிருக்கிறேன்' என்பதை, சொத்தை வாங்குபவரிடம் எடுத்துக்-காட்ட வசதியாகத்தான் இந்த ஏற்பாடு.
சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து, ஆவணத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை (Certified Copy) வாங்கிக்கொள்ளலாம். சேதம் அடைந்த அசலையும் சான்றளிக்கப்பட்ட நகலையும் சேர்த்துவைத்து, சொத்தை அதன் உண்மையான சந்தை விலைக்கே விற்கலாம்'' என்றவர், சொத்துப் பத்திரம் காணாமல் போய்விட்டால், உடனடி-யாகச் செய்யவேண்டியது என்னென்ன என்பதை விளக்கினார்.
''காணாமல் போன பத்திரத்தை மற்ற-வர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க (வங்கியில் அடகு, சொத்தை விற்க முயற்சி) முதலில் போலீஸில் புகார் கொடுக்க-வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸ் நிலை-யத்திலிருந்து, பத்திரத்தைக் கண்டு-பிடிக்க இயலாத நிலையில் கண்டு-பிடிக்க இயலவில்லை என்ற சான்-றிதழ் (Non - Traceable Certificate) பெற்றுக்கொள்ள வேண்டும். கூடவே உள்ளூர் நாளிதழ்களில் (ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு தமிழ் பத்திரிகை) காணாமல்போன பத்திரத்தின் விவரங்கள் அடங்கிய பொது அறிவிப்பை வக்கீல் மூலம் விளம்பரமாகக் கொடுக்கவேண்டும். அடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற்றுக்கொண்டு அத்துடன் போலீஸ் புகார் நகல், காவல் துறையின் சான்றிதழ் முதலியவற்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
ஆக மொத்தத்தில் சொத்து... பத்திரம். அதைவிட அதன் பத்திரம், பத்திரம்!

 
 
                            
    

உயில் ஜாக்கிரதை! கவர் ஸ்டோரி


‘‘அ வர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக் கூடியவர்’’ என்று ஊரே கொண்டாடிய பொள்ளாச்சி ராமசாமி கடந்த மாதம் இறந்து போனார்.
அவருடைய காரியங்கள் முடிந்து, சொத்துகளை யார் பராமரிப்பது என்ற யோசனை வந்தபோது, குடும்ப வக்கீல் ஓர் உயிலைக் கொண்டுவந்து கொடுத்தார். உயிலைப் பிரித்துப் படித்த குடும்பத்தினர் மனநிறைவோடு ராமசாமியை நினைத்துக் கொண்டனர். யாருக்கும் எந்த மனவருத்தமும் இல்லாமல், எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக உயிலை எழுதியிருந்தார்.
தன்னுடைய மறைவுக்குப் பிறகு யாருக்கும் எந்தப் பிரச்னையும் எழக்கூடாது என்று நினைத்த ராமசாமிக்கு, எண்ணத்தை ஈடேற்ற உதவியாக இருந்தது உயில்!
உயில் என்றால் என்ன? ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்). உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது நல்லது. சிவில் கோர்ட்டில் போய்ப் பார்த்தால் எத்தனை வழக்குகள் குடும்பச் சொத்து தொடர்பாக நடந்து கொண் டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கி விடும். சொத்துக்களை முறையாகப் பிரித்து உயில் எழுதிவிட்டால் பிரச்னை ஏதுமில்லை.
‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.
உயில் எழுதவேண்டிய அவசியத்தைத் தெரிந்து கொண்டுவிட்டோம். அதை எப்படி எழுதுவது? அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள வக்கீலைத்தான் நாடவேண்டுமா?
ரிஷிகேஷ் ராஜாவிடமே கேட்டபோது, ‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’ என்றவர், உதாரணமாக ஒரு வடிவத்தைச் சொன்னார்.
‘எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.
உதாரணத்தைச் சொன்ன ரிஷிகேஷ் ராஜா, ‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.
உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.
உயில் அமல்படுத்துநராக ஒருவரை நியமிப்பது அவசியம். உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்களை உயில் அமல்படுத்துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.
Click to Enlarge 
Click to Enlarge
உயில் எழுதப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டு கோர்ட் படியேறுகிறார்களே... மூத்த மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார், இளைய மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார். இரண்டுமே ஒரிஜினலாக வேறு இருக்கிறது. அதுபோன்ற சூழலில் என்ன செய்வது?
இதுபற்றி ஒரு வழக்கறிஞரிடம் கேட்டபோது, ‘‘அப்படிப்பட்ட சூழலில் கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் செல்லுபடியாகும். ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் சட்டப்படி செல்லும்’’ என்றார்.
உயில் இல்லாமல் போனால் தோன்றக்கூடிய நிலை குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகி சகுந்தலா சுந்தரம் கூறுகையில், ‘‘உயில் எழுதி வைக்காமல் ஒருவர் இறந்துபோனால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி (அவர் சார்ந்திருக்கும் மதத்துக்கு ஏற்ப) வாரிசுகள் அனைவருக்கும் சொத்து பிரிக்கப்படும். இறந்தவர், தனது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் கூடுதலாக சொத்தைக் கொடுக்க நினைத்திருந்தாலும், உயில் எழுதாவிட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை. சொத்தை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்ய விரும்பி இருந்தாலும் அதுவும் நடைபெறாது’’ என்றார்.
தன்னுடைய கணவர் உயில் எழுதி வைக்காததால் தான் படும் சிரமங்கள் குறித்துச் சொன்ன யுவராணி, ‘‘என்னை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்ட என் கணவர், 1999-ல் இறந்து போனார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மனைவியும் எனது கணவரது குடும்பத்தினரும், சொத்தில் எங்களுக்குச் சேரக்கூடிய பங்கைக் கொடுக்காமல் மாதம் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்து வந்தனர். பிறகு, அந்தப் பணத்தையும் சரியாகக் கொடுக்கவில்லை. வேறுவழியில்லாமல் 2004-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். என் கணவர் முறையாக உயில் எழுதி, அதில் எங்கள் பங்கைப் பற்றிச் சொல்லியிருந்தால் இத்தனை கஷ்டங்கள் வந்திருக்காது’’ என்றார்.
உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!
சொத்து மட்டும் அல்ல. வீட்டுக் கடன், குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்கான செலவு போன்ற எதிர்கால பணச்சிக்கல்களைப் பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் குடும்பத்தினர் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
பெரும்பாலான குடும்பத் தலைவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் பொருளாதாரச் செயல் களையும், எதிர்கொள் ளும் பணச்சிக்கல்களை யும் தங்கள் குடும்பத்தி னரிடம் முழுமையாகத் தெரிவிப்பதில்லை. உயில் எழுதாமல் இறந்துபோகிற பட்சத்தில், அவரது குடும்பம் எதிர்பாராத சுமைகளைத் தாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும். அதைத் தவிர்க்க கண்டிப்பாக உயில் எழுத வேண்டும்.
இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!
 நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
 உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
வங்கி நாமினி, உயில் வாரிசு, என்ன வித்தியாசம்?
வ ங்கிக் கணக்கில் நாமினியாக ஒருவரைக் குறிப்பிடுவது என்பது கணக்கு வைத்திருப்பவர் இறக்கும்போது, அந்தக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் வழங்குவது என்பதை மட்டுமே குறிக்கும். மேலும், நாமினிக்கு வங்கிப் பணம் வந்தபிறகு, அந்த பணத்தின்மீது இறந்து போனவரின் வாரிசுகளுக்கு உரிமை உண்டு. ஆனால், ‘தான் இறந்த பிறகு, சொத்துகள் யாருக்குச் சேரவேண்டும்’ என்று குறிப்பிட்டு வாரிசை நியமிப்பது உயில். அதன்மூலம் இறந்தவரின் அனைத்து உடமைகளுக்கும் ஒருவர் வாரிசாக நியமிக்கப்பட்டபின், அந்தச் சொத்து வாரிசுக்கு மட்டுமே சொந்தம். எனவே, வங்கி நாமினியை விட, உயில் வாரிசு மிக முக்கியத்துவம் பெறுகிறார்.
உயில்கள் பலவிதம்!
கு றிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.
மிகச் சிறிய உயில்கள்
டெ ல்லியைச் சேர்ந்த பிமல் ரிஷி, 1995-ல் ‘எல்லாம் மகனுக்கே! ( All to son ) என்று எழுதியதுதான் மிகச் சிறிய உயில். 1967-ல் செக் நாட்டைச் சேர்ந்த கால் டவுச் எழுதிய உயிலில் ‘எல்லாம் மனைவிக்கே!’ ( All to Wife ) என்று எழுதியிருந்தார்.
வாரிசு மைனராக இருந்தால்..?
உ யிலில் குறிப்பிடப்படும் வாரிசு, 18 வயதுக்கு உட்பட்ட மைனராக இருந்தால், அவருக்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவரே வாரிசின் சொத்துக்குப் பாதுகாவலராகத் திகழ்வார். எதிர்காலத்தில், பாதுகாவலருக்கு இறக்கக்கூடிய நிலை ஏற்படுமாயின், மேலும் ஒரு பாதுகாவலரை நியமிப்பது நல்லது.
உயில் எப்போது செல்லாமல் போகும்?
கு டிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.
சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
Will உயில் (விருப்ப ஆவணம்) 
Testator உயில் எழுதியவர் 
Executor உயில் அமல்படுத்துநர் 
Codicil இணைப்புத் தாள்கள் 
Attested சரிபார்க்கப்பட்டது. 
Probate நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு 
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர் 
Succession Certificate வாரிசு சான்றிதழ் 
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம் 
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian காப்பாளர் 
Witness சாட்சி
‘காமெடி’ உயில்
க னடா நாட்டு வழக்கறிஞரான சார்லஸ் மில்லர், ‘தான் இறந்து 10 ஆண்டுகளுக்குள், எந்த பெண்மணி அதிக பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாளோ, அவள்தான் தனது மொத்த சொத்துகளுக்கும் வாரிசு’ என்று உயில் எழுதி வைத்தார். சார்லஸின் வாரிசுகள், உயில் போலியானது என்று நிராகரிக்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இறுதியில், மொத்த சொத்து, நான்கு பெண்மணிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது!
‘ஆன் லைன்’ உயில்
உ யில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.
புகழ்பெற்றவர்களின் உயில்கள்!
பி ரெஞ்சுப் பேரரசரான நெப்போலியன், தனக்கு உதவிய போர் தளபதிகள், போர்வீரர்களுக்கு சொத்தில் ஒரு பங்கைப் பிரித்துக் கொடுத்தார். பாத்திரங்கள், கரண்டிகள், பெட்டிகள், மேஜைகள், ஆடைகள், புத்தகங்கள், போர்வாள்கள், துப்பாக்கிகள் போன்று, தன் வாழ்நாளில் பயன்படுத்திய எல்லா பொருட்களையும் தன் உயிலில் குறிப்பிட்டார்.
மறைந்த தொழில் அதிபர் எம்.பி. பிர்லாவின் மனைவி பிரியம்வதா தன் 5,000 கோடி ரூபாய் சொத்துக்கள் அனைத்தையும் குடும்ப நண்பரும், ஆடிட்டருமான ஆர்.எஸ்.லோதா பெயருக்கு எழுதிவிட்டார்! ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திருபாய் அம்பானி உயில் எழுதி வைக்காததால் அவருடைய மகன்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் தாயார் கோகிலா பென் அம்பானி தலைமையில், நிதி ஆலோசகர்களின் உதவியுடன், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களைப் பிரித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
உயில் பரிசு!
ஸ் வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரெட் நோபல் 1867-ல் டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். அதை விற்றதன் மூலம் கோடிக் கணக்கான பணம் சம்பாதித்தார். இந்த டைனமைட் வெடிமருந்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1888-ல் இவர் இறந்தபோனதாக நினைத்து, பிரெஞ்சு பத்திரிகை ஒன்று, இவரது டைனமைட் கண்டுபிடிப்பை மனதில் கொண்டு, ‘மரணத்தின் வியாபாரி’ என்பது போன்ற கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்தது. இச்செய்தியைப் படித்த ஆல்பிரெட், தனது கண்டுபிடிப்பால் ஏற்பட்ட கொடுமைகளை எண்ணி மனம் வருந்தினார். ‘தன் வாழ்நாளில் சம்பாதித்த சொத்துகள் முழுவதையும் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமூக சேவை அல்லது உலக அமைதி போன்ற துறைகளில் முன்னிலை வகிப்போருக்கு பரிசு வழங்க வேண்டும்’ என்று உயில் எழுதினார். அதுதான் இப்போது பிரபலமாக இருக்கும் நோபல் பரிசு!
சென்னைவாசிகளுக்கு உயில்!
செ ன்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் வசிப்பவர்கள் உயில் எழுதும்போது முக்கியமான ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். வாரிசுகளுக்குச் சொத்தை சம பங்காகப் பிரிக்காமல், தன் விருப்பப்படி உயில் எழுதியிருந்தால், கோர்ட் அனுமதியுடன்தான் அதைச் செல்லுபடியாக்க முடியும். மற்ற ஊர்களைப் போல உயில் எழுதியவரின் மறைவுக்குப் பிறகு, அந்த உயிலில் சொன்னபடி சொத்தை வாரிசுகள் பிரித்துக்கொள்ள முடியாது.
இதுபற்றி சென்னையைச் சேர்ந்த அட்வகேட் கண்ணனிடம் கேட்டபோது, ‘‘சென்னைக்கு வெளியே எங்கு சொத்துக்கள் இருந்தாலும் சென்னை விலாசத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதிவிட்டால், அதை கோர்ட்டில் தாக்கல் செய்தால்தான் செல்லுபடியாகும். இதை புரொபேட் ( Probate ) என்பார்கள். சென்னை ஹைகோர்ட்டில் உயிலில் சொல்லப்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பில் 3% கட்டணமாகச் செலுத்தி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
உயிலில் சாட்சியாகக் கையெழுத்துப் போட்டவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது கோர்ட்டுக்கு வந்து, ‘இந்த உயில் என் முன்னிலையில் நேர்மையாக, நாணயமாக யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சொந்த விருப்பத்தின்படி எழுதப்பட்டதுதான்’ என்று சொல்ல வேண்டும். கூடவே, ஒரிஜினல் உயில், அதை எழுதியவரின் இறப்புச் சான்றிதழ், சொத்துகளுக்கான ஆதாரங்கள் போன்றவற்றை இணைத்துக் கொடுக்கவேண்டும். அதோடு சமமாகப் பிரிக்கப்படாததால், யாருக்காவது எதிர்ப்பு இருந்தால் அவர்களை எதிர்தரப்பாக மனுவில் சேர்க்க வேண்டும்.
கோர்ட் விசாரணைக்குப் பிறகு, சொத்தின் மதிப்பு பற்றிய தகவலுக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் அவர்கள் சரி பார்ப்பார்கள். அதன்பிறகு, உரிய கட்டணத்தைச் செலுத்தி உயிலைச் செல்லுபடியாக்கிக் கொள்ள முடியும்’’ என்றார்.
சென்னையிலேயே வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இந்த புரொபேட் தேவையில்லை என்பது கண்ணன் சொன்ன கூடுதல் தகவல்!

உங்கள் செலவுகள் கட்டுக்குள் இருக்கிறதா,,? சுய பரிசோதனை

ப. சிதம்பரம் மட்டுமல்ல... மாதச் சம்பளக்காரர்கள் பலரும் வீட்டில் பற்றாக்குறை பட்ஜெட்தான் போடுகிறார்கள். இருக்கிற சம்பளத்தில் வாழ்க்கையைச் செம்மையாக நடத்துவதற்கு செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருந்தாலே போதும். அந்த வித்தைதானே கைக்குச் சிக்க மறுக்கிறது என்கிறீர்களா... கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்... உங்கள் மார்க் என்ன என்பதைப் பார்த்துவிட்டு எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்!
சென்னையைச் சேர்ந்த சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் முரளீதரன் நாணயம் விகடன் வாசகர்களுக்காக வீசும் கேள்விகளுக்கு பதில் கொடுங்கள். இதோ கேள்விகள்...
1) குடும்பம், ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து, கடன், சேமிப்பு, பாதுகாப்பு போன்றவற்றுக்கான செலவுகளில் உங்கள் முக்கியத்துவம் எதற்கு இருக்கிறது?
அ) முதல் மூன்று மட்டும்
ஆ) முதல் ஐந்து மட்டும் இ) அனைத்தும்
2) நிச்சய செலவுகளான கல்வி, இன்ஷூரன்ஸ், பண்டிகை போன்றவற்றுக்கான பணத்தேவையை சமாளிக்க எதில் கை வைப்பீர்கள்?
அ) சேமிப்பு ஆ) கையிருப்பு பணம்
இ) நண்பர்களிடம் கடன்/வங்கி லோன்
3) மருத்துவம், விபத்து போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு உங்கள் ஆயுதம்..?
அ) கிரெடிட் கார்ட்
ஆ) மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இ) கடன்
4) மாத வருமானத்திலிருந்து பணத்தை எப்படிச் சேமிக்கிறீர்கள்?
அ) வங்கி ஆ) மியூச்சுவல் ஃபண்ட்
இ) பங்கு முதலீடு
5) போனஸ் அல்லது அதிக வருமானம் வரும்போது எப்படிச் செலவழிப்பீர்கள்?
அ) பொருட்கள் வாங்குவது ஆ) சேமிப்பு/முதலீடு இ) கடன் அடைப்பது
6) அவசரத் தேவைக்காக சேமிப்பில் கைவைத்த பிறகு, மீண்டும் அந்தப் பணம் சேரும்வரை எந்த செலவுகளைத் தவிர்ப்பீர்கள்?
அ) சினிமா, ஓட்டல், பொழுதுபோக்கு ஆ) தனிப் பட்ட செலவுகள் இ) எதையும் தவிர்ப்பதில்லை
7) மாதச் சம்பளத்தை மீறி, செலவுகள் அதிகமாகும்போது எப்படிச் சமாளிப்பீர்கள்?
அ) கூடுதல் வருமானம் பார்ப்பது
ஆ) செலவுகளைக் கட்டுப்படுத்துவது
இ) கிரெடிட் கார்ட்
8) உங்கள் நிகர வருமானத்தில் கிரெடிட் கார்டின் மூலம் செலவழிக்கும் தொகையின் சதவிகிதம்...?
அ) 30% ஆ) 20% இ) 10%
9) வரவு செலவு கணக்குகளைத் தினமும் எழுதி வைப்பீர்களா?
அ) அவ்வப்போது
ஆ) கணக்கு பார்ப்பதில்லை
இ) அனைத்துச் செலவுகளையும் எழுதுவது
10) உங்கள் நிகர வருமானத்தில் கடன்களைத் திருப்பித்தர எவ்வளவு ஒதுக்குகிறீர்கள்..?
அ) 30% ஆ) 40% இ) 50%
இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதில்களுக்கு என்ன மதிப்பெண்கள் என்பதை இங்கே சரிபார்த்துக்கொள்ளுங்கள்!
மதிப்பெண்கள் 
22 முதல் 30 வரை மதிப்பெண் வாங்கியிருந்தால் நீங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து, திட்டமிட்டுச் செலவு செய்வதில் வல்லவர்கள். உங்களால் முறையாகச் சேமித்து, முதலீடு செய்து எதிர்கால வாழ்க்கையை வளமானதாக மாற்றிக்கொள்ள முடியும். எப்படிப்பட்ட செலவுகள் வந்தாலும் அதைத் திறமையாகச் சமாளித்து வெற்றி பெறமுடியும். எல்லா பணத்தேவைகளையும் கடன் வாங்காமல் சமாளித்து வாழ்க்கையில் முன்னேறமுடியும். இந்தக் கட்டுப்பாட்டைத் தொடருங்கள்.
15 முதல் 21 வரை மதிப்பெண்கள் வாங்கியவர்களே, கொஞ்சம் கவனம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள், உங்களைக் கடனாளியாக்கிவிடும். இப்போது சரி செய்தாலும் மீண்டு வரமுடியும். எனவே, வரவு-செலவு கணக்குகளை எழுதும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் எழுதிப் பழகுங்கள். அது உங்கள் வெட்டிச் செலவுகளை வெளிச்சம் போட்டு உங்களைச் சரியான பாதைக்குத் திருப்பும்.
இலக்குகளைத் தீர்மானித்து திட்டமிட்டு சேமிக்கவும்வேண்டும். அவை மட்டுமே எதிர்வரும் செலவுகளையும், அவசரத் தேவைகளையும் சமாளித்து முன்னேறமுடியும். இதனைத் தொடர்ந்து செய்யும்போது மட்டுமே எதிர்காலத்தில் சிக்கல் இல்லாமல் வாழமுடியும். இல்லை என்றால் சம்பாதிக்கும் பணமெல்லாம் வட்டி கட்டுவதற்கே போய்விடும்.
15-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்களா... ஆபத்தான கட்டத்தில் இருக்கிறீர்கள். வருமானம் மற்றும் செலவுகள் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விஷயம். இன்றைய நாள் பிரச்னை இல்லாமல் இருந்தால்போதும் என்ற மனநிலையில் இருக்கிறீர்கள். அதற்காக கடன் வாங்கிக் குவிக்கவும் தயங்காமல் இருக்கிறீர்கள். இந்தப் போக்கு ஆபத்தில் முடிந்துவிடும். கூடுதல் வருமானம், சேமிப்பு இல்லாமல், செலவு செய்வது தவறு. உடனே, நல்ல நிதி ஆலோசகரை அணுகுங்கள். கூடுதல் வருமானத்துக்கும் செலவுகளைக் குறைத்து சேமிப்புக்கும் வழி தேடுங்கள். மீதமுள்ள வாழ்க்கையை அடிப்படையில் இருந்து திட்டமிட்டு ஆரம்பிப்பது நல்லதுதானே!

ரியல் எஸ்டேட்: ஃப்ளாட் வாங்கப் போகிறீர்களா? உஷார் டிப்ஸ்!

ஃப்ளாட் வாங்கப் போகிறீர்களா?
பெ ரிய ஹால்... காற்றோட்டமான கிச்சன்... வசதியான அலமாரிகள் என்ற கனவோடு ஃப்ளாட் வாங்கப் போனால், இடம் ஆரம்பித்து விலை வரை பல சந்தேகங்கள்...
‘‘என்னென்னவோ சொல்கிறார் பில்டர். அவர் சொல்லும் விஷயங்கள் எதுவும் புரியவில்லையே?” என்று திகைத்துப் போயிருக்கிறீர்களா... உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!
இந்திய பில்டர்கள் சங்கத் தென்னக மையத்தின்(பி.ஏ.ஐ) கௌரவ செயலாளர் ராமசாமி சொல்வதைக் கேளுங்கள்.
‘‘கார்ப்பெட் ஏரியா ( Carpet Area ), ப்ளிந்த் ஏரியா ( Plinth Area), காமன் ஏரியா ( Common Area ), சூப்பர் பில்ட்அப் ஏரியா ( Super Buildup Area ) என்று நான்கு விதமாக இடத்தைச் சொல்கிறார்கள்.
நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதிதான் கார்ப்பெட் ஏரியா. அதாவது, பயன்படுத்தக்கூடிய கட்டுமானப்பகுதி. ப்ளிந்த் ஏரியா என்பது கட்டடத்தின் நான்கு சுவர்களோடு சேர்ந்த பகுதி. காமன் ஏரியா என்பது லிஃப்ட், மாடி படிக் கட்டு, செப்டிக் டேங்க், லிஃப்ட் மெஷின் ரூம், சுற்றுச் சுவர், நடைபாதை போன்றவை அடங்கியது. ப்ளிந்த் ஏரியா மற்றும் காமன் ஏரியா சேர்ந்ததுதான் சூப்பர் பில்ட்அப் ஏரியா.
இந்த சூப்பர் பில்ட்அப் ஏரியா அடிப்படையில்தான் ஃப்ளாட்டின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அடுக்கு மாடி குடியிருப்பில் ஃப்ளாட்டின் விலை என்பது மனையின் விலை, ஃப்ளாட் மற்றும் காமன் ஏரியாவுக் கான கட்டுமானச் செலவு, சேவை வரி (12.24%), கல்வித் தீர்வை (2%), கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கான வரி (4%), ஃபிரிஞ்ச் பெனிஃபிட் வரி (1%), பில்டர் அல்லது ப்ரமோட்டரின் லாபம் போன்றவை சேர்ந்ததாக இருக்கிறது. பொதுவாக, சதுர அடிக்கு இவ்வளவு என்று விலை நிர்ணயிக்கப்படுவதால், ஒவ்வொரு வரும் வாங்கும் சதுர அடிக்கேற்ப விலை கொடுக்க வேண்டிவரும். அதே நேரத்தில், 600 சதுர அடி ஃப்ளாட் வாங்கியவருக்கும், 1,200 சதுர அடி ஃப்ளாட் வாங்கியவருக்கும் காமன் ஏரியா ஒன்றுதான்.
விவரம் தெரிந்தவர்கள் தற்போது ஃப்ளாட்டைப் பார்க்க வரும்போதே, காமன் ஏரியா, கார்ப்பெட் ஏரியா எவ்வளவு வருகிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு பில்டரிடம் விலை குறைக்கச் சொல்வதும் நடக்கிறது.
ஒரு ஃப்ளாட்டில் கார்ப்பெட் ஏரியா 800 சதுரஅடி என்றால், ப்ளிந்த் ஏரியா 940 சதுரஅடியாகவும், சூப்பர் பில்ட்அப் ஏரியா 1080 சதுர அடியாகவும் இருக்கும். பொதுவாக, கார்ப்பெட் ஏரியாவைவிட ப்ளிந்த் ஏரியா 15% அதிகமாக இருக்கும். அதைவிட, சூப்பர் பில்ட்அப் ஏரியா 15% அதிகமாக இருக்கும். நூலக அறை, நீச்சல் குளம், பூங்கா போன்றவை அமைக்கும்போது இது 2540 % அளவுக்கு அதிகரிக்கும்’’ என்ற ராமசாமி, கார் பார்க்கிங் விலை நிர்ணயம் பற்றிச் சொன்னார்.
‘‘கார் நிறுத்த 50 சதுரஅடி பரப்பு போதும் என்றாலும் காரை நிறுத்தி, எடுக்க இடம் தேவை என்பதால் 150 சதுரஅடி ஒதுக்கப்படும். இந்த கார் பார்க்கிங் பகுதி, அடுக்கு மாடி குடியிருப்பின் தரைதளத்தில் அமைந்திருக்கும். ஃப்ளாட் வாங்குபவர், கார் நிறுத்தும் இடத்துக்கு தனியே விலை கொடுக்கவேண்டும். பொதுவாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் பார்க்கிங் ஒதுக்கப்படும். கார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயம் வாங்கவேண்டும். இந்த விலை மனையின் விலையைப் பொறுத்து மாறுபடும்.
அதேசமயம், திறந்த வெளியில் கார் நிறுத்தும் வசதியைப் பயன்படுத்த பணம் வாங்குவதில்லை. அந்தப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் எதுவும் போடக்கூடாது. வீட்டுக்கு வரும் விருந்தினர் நிறுத்திக் கொள்வதற்காகத்தான் திறந்த வெளி கார் நிறுத்தம் உருவாக்கப்படுகிறது. சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கும். அப்போது, கார் நிறுத்த கூடுதல் இடம் தேவைப்பட்டால், கார் இல்லாமல் கார் பார்க்கிங்கைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களிடம் பேசி, வாடகை அல்லது விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
‘‘காமன் ஏரியா அதிகமாக இருக்கும் ஃப்ளாட்டின் விலை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப அதிக வசதிகள் அதில் இருக்கும். பட்ஜெட் வீடுகள் கட்டப்படும் போது காமன் ஏரியா குறைக்கப்படுவதால் ஃப்ளாட் விலையும் குறைக்கப்படும்.
சாலையின் அகலம் அதிகமாக இருந்தால், வீட்டின் விலையும் கூடுதலாக இருக்கும்.பிரமாண்டமான இடத்தில் டவுன்ஷிப் போன்ற அமைப்புடன் அடுக்குமாடிக் குடி இருப்புகள் கட்டும்போது, மனையை உயர்த்த, உள்சாலை, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், பூங்கா, மழை நீர் வடிகால், போன்றவற்றை அமைக்க ஆகும் செலவும் காமன் ஏரியாவுக்கான செலவில் சேர்க்கப் பட்டு ஃப்ளாட் விலையில் ஏற்றப்படும். இதுதவிர, மழைநீர் சேகரிப்பு வசதி, குடிநீர்-கழிவு நீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான செலவும் காமன் ஏரியாவில்தான் சேர்க்கப்படுகிறது’’ என்றார் ராமசாமி.
ஃப்ளாட் வாங்கும்போது தெளிவாகக் கிளம்புவீர்கள்தானே..!
இ ந்த சூப்பர் பில்ட்அப் ஏரியாவின் அடிப்படையில்தான் சொத்து வரி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே வீடு வாங்குபவர்கள், பில்டர்களிடம் சூப்பர் பில்ட்அப் ஏரியா பற்றிய விவரத்தை அவர்களின் லெட்டர் பேடில், அலுவலக முத்திரையுடன் வாங்கிக்கொள்ள வேண்டும். வீட்டில் இடம் பெற்றிருக்கும் டாய்லெட்களின் எண்ணிக்கை, தரை போடப்பட்டிருக்கும் விதம் (சிமென்ட், மார்பிள், மொஸைக், டைல்ஸ்), சொந்த உபயோகத்துக்கா அல்லது வாடகைக்கு விடப்படும் கட்டடமா என்பதை எல்லாம் பொறுத்தே சொத்து வரி நிர்ணயிக்கப்படும்.
கு டியிருப்போர் அனைவரும் இணைந்து சங்கம் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. அப்போதுதான் ஃப்ளாட்களில் பொது பயன்பாட்டுக்கான காமன் ஏரியாவைப் பயன்படுத்துவதில் பிரச்னை என்றால் விரைவில் தீர்வு காணலாம். அதேபோல், தனிநபர் பிரச்னை என்றாலும் சங்கம் மூலமாகக் குரல் கொடுத்தால் உடனே எடுபடும். மேல்நிலை தண்ணீர் தொட்டி, கார் பார்க்கிங், குழந்தைகள் விளையாடுமிடம், லிஃப்ட் போன்றவற்றை பிரச்னை இல்லாமல் பராமரிக்கவும் சங்கம் அமைப்பது அவசியம்.

வந்தாச்சு போனஸ்!

‘போ னஸ் போட்டாச்சு... நல்லதா ஒரு பட்டுப் புடவை, பசங்களுக்கு ஆளுக்கு 1,000 ரூபாய்க்கு வெடி, பலகாரங்களுக்கு தனியாக ஒரு தொகை’ என்று பலமாக பட்ஜெட் போட ஆரம்பித் திருக்கும் மாதச்சம்பள ஊழியர்களே... இந்தக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு, உங்கள் பட்ஜெட்டைப் போடுங்கள். ஏனென்றால், அதில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கும்.
பண்டிகை, திருநாள் என்பதெல்லாம் கொண்டாட்டம்தான்... மகிழ்ச்சியாக இருப்பதற்கான தினங்கள்தான். ஆனால், அடுத்தநாள் அந்த மகிழ்ச்சி நீடிக்குமா... பட்டாடைகளிலும் பட்சணங்களிலுமா இருக்கிறது உண்மையான மகிழ்ச்சி..? உபரியாகக் கிடைத்த போனஸ் பணத்தை எப்படி உபயோகமாக முதலீடு செய்திருக்கிறோம் என்பதில் இருக்கிறது!
‘‘பண்டிகைகளின்போது புத்தாடை வாங்குவதும், வெடி வெடித்து மகிழ்வதும் நடக்கவேண்டிய விஷயம்தான். ஆனால், நம்முடைய தேவைகளுக்கு அதிகமாக இருக் கிறதே என்று செலவழிக்காமல் தெளிவாகத் திட்டமிட்டுக் கொண்டால் அந்த முதலீடு, எதிர் காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும்’’ என்றார் நிதி மேலாண்மை வல்லுநர் ஒருவர்.
போனஸ் பணத்தை எப்படி முதலீடு செய்வது?
‘‘கிடைக்கும் போனஸில் 25 முதல் 30% விழாக் கொண்டாட்டத்துக்கு ஒதுக்கிவிடலாம். அதிலேயே நிறைவாகக் கொண்டாட முடியும். மீதமுள்ள பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பதற்கு பல திட்டங்கள் இருக்கின்றன. பட்டாசு வாங்குவதும் ஆடைகள் வாங்குவதும் வீண் செலவு என்று அதைத் தவிர்த்துவிட்டு மார்க்கெட்டில் புதிதாக வந்திருக்கும் மொபைல் போனை வாங்கக் கூடாது. அல்லது ஹோம் தியேட்டர், டி.வி.டி போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் காசைப் போடக்கூடாது. இதெல்லாம் வீட்டு உபயோகப் பொருட்கள்தானே தவிர, முதலீடு கிடையாது’’ என்று சொன்ன அந்த நிதி மேலாண்மை வல்லுநர், சில முதலீட்டு வழிகளை அடையாளம் காட்டினார்.
‘‘பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பழக்கம் உள்ளவராக இருந்தால் நீண்டகாலப் பங்குகளில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது அந்தப் பங்குகளில் கைவைப்பதில்லை என்ற முடிவோடு முதலீடு செய்யுங்கள்.
எதிர்காலத்தில் அதிக பென்ஷன் பெற விரும்புகிறவர்கள், அலுவலகத்தில் பி.எஃப் பிடிக்கும் வாய்ப்பு இல்லாதவர்கள், தபால் அலுவலக பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் 8% வட்டி மற்றும் போனஸ் கிடைக்கும்’’ என்றார்.
புளூசிப் கார்ப்பரேட் இன்வெஸ்ட்மென்ட் சென்டரின் இணைத் துணைதலைவர் சரவணனிடம் கேட்டபோது, ‘‘இன்றைய இளைஞர்கள் மாதம் சராசரியாக 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள். அப் படி இருக்கும்போது அவர்களது போனஸ் தொகை நிச்சயமாக அதைவிட அதிகமாகத்தான் இருக்கும். அவர்கள், நல்லவிதமாக முதலீடு செய்வது அவர்களுடைய எதிர்காலத்துக்கு நல்லது.
பங்குச் சந்தை நல்ல லாபம் தரும் என்பார்கள், ஆனால், அதைத் தொடர்ந்து கவனிக்க நேரம் இருக்காது. அதனால், நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் எது என்பதை அலசி ஆராய்ந்து அதில் முதலீடு செய்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம். இப்போதைய சூழ்நிலையில் நீண்டகால அடிப்படையில் ‘டைவர்ஸி ஃபைட் ஈக்விட்டி ஃபண்ட்’ திட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். இவற்றின் மீதான ரிட்டர்ன் சராசரியாக 15 முதல் 20% இருக்கும். மேலும், நீண்டகால முதலீடு என்பதால், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தால், முதலீடு மீதான வருமானம் குறைய வாய்ப்பில்லை’’ என்றார். இப்போது இருக்கும் வாய்ப்புகளை வைத்து நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் எது என்பதை அறிய ஒரு மணிநேரம் செலவிட்டால் போதும்.
அதேபோல, ‘‘உபரியாகக் கிடைக்கும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதும் நல்ல முடிவாக இருக்கும்’’ என்கிறார் ‘குட்வில் இண்டஸ்ட்ரியல் ஹோம் கேர்’ என்ற நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் கன்சல்டன்ட் காமராஜ்.
‘‘மனை மற்றும் வீட்டில் செய்யப்படும் முதலீடு நிச்சயமாக லாபம் தரக்கூடியது. பத்தாண்டுகளுக்கு முன் 40 வயதுக்கு மேல்தான் வீடுவாங்குவது பற்றி யோசிப் பார்கள். இன்றைக்கு முப்பது வயதுக்குள் வீட்டுக்குச் சொந்தக்காரராகி விடவேண்டும் என்று துடிக்கும் அளவுக்கு இளைஞர்களின் வருமானம் இருக்கிறது. அதனால், அவர்களின் கவனம் ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியிருக்கிறது’’ என்றார் அவர்.
‘‘ரியல் எஸ்டேட் என்பது பெரிய முதலீடாக இருக்குமே... சின்னதாகக் கிடைக்கும் போனஸ் பணத்தை வைத்து அதில் எப்படி முதலீடு செய்யமுடியும்?’’ என்ற சந்தேகத்தை அவரிடம் கேட்டபோது,
‘‘இப்போது குடும்பத்தில் கணவரும் மனைவியும் வேலைக்குச் செல்வது அதிகமாக இருக்கிறது. இருவருக்கும் கிடைக்கும் போனஸைக் கணக்கிட்டால், புறநகர் பகுதியில் இடமே வாங்கிப் போடமுடியும். அது ஒருவகையில் முதலீடுதானே! அப்படி இல்லாவிட்டா லும் கடன் வாங்கி வீடு கட்டியிருந்தால் போனஸாகக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு வீட்டுக் கடனை அடைத்து வந்தால் வீணாக வட்டி கட்டுவதைத் தவிர்க்கலாமே... அல்லது புதிதாக வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு வங்கிக் கடன் தவிர, முன்பணமாகச் செலுத்துவதற்கு இந்தத் தொகை பெரிய அளவில் பயன்படும். ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்லமுடியும். ரியல் எஸ்டேட் முதலீடு பாதுகாப்பான, அதிக ரிட்டர்ன் தரக்கூடியது’’ என்றார் காமராஜ்.
ஆலோசகர்கள் சொல்வது ஒருபக்கம் இருக்க, அனுபவபூர்வமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த முரளி. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் அவர், போனஸ் தொகையை எப்படி முதலீடாக மாற்றுகிறார் என்று கேட்டபோது, அவர் மனைவி ஜெயராணியுடன் சேர்ந்தே பேசினார். ஜெயராணியும் பணிபுரிகிறார்.
‘‘இந்த வீடு கட்டுவது என்பது எங்கள் கனவாக இருந்தது. அதனால், உபரியாகப் பணம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டுக்காகவே சேமித்து வைத்துக் கொண்டிருந்தோம். இப்போது வீட்டைக் கட்டி முடித்துவிட்டோம்.
அடுத்து, வீட்டுக்கான அடிப்படைத் தேவை களுக்கு செலவழித்தோம். இப்போது வரப்போகும் போனஸ் தொகையை சேமிக்க வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டைத் தேர்வுசெய்து வைத்திருக்கிறோம். வங்கிகளில் இப்போது 8 முதல் 8.5%வரை வட்டி தருகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நினைத் துக்கூடப் பார்த்திருக்க முடியாத வட்டி விகிதம் இது. அதோடு, பணத்தை முதலீடு செய்துவிட்டு, நல்லபடியாகத்தான் இருக்கிறதா என்று தினமும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பணத்தைப் போட்டுவிட்டு அதை மறந்துவிட வேண்டும். அதில் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு எனக்கு இப்போது நேரமில்லை. அதனால், இந்த முறை என் சாய்ஸ் ஃபிக்ஸட் டெபாசிட்தான்’’ என்றார் முரளி.
ஜெயராணி, ‘‘ஆடைகளை வாங்கிக் குவிப்பதைவிட, எப்போதும் மதிப்பில் உச்சத்தில் இருக்கும் தங்கநகையில் முதலீடு செய்வது புத்திசாலித் தனமானது. நாங்கள் அதை எப்போதும் செய்து வருகிறோம். முதலீட்டு கோணத்தில் பார்த்தால் ஆபரணங்களை விட தங்கநாணயங்கள் லாபகரமானவை என்பது என் கருத்து’’ என்றார்.
குழந்தைகளுக்குச் சிறிய தொகைக்கு பட்டாசு வாங்கிக் கொடுத்துவிட்டு, அவர்களுக்குப் பயன்படும் விளையாட்டு பொருட்கள், அறிவை வளர்க்கும் பொருட்களை வாங்கிக்கொடுத்து, பொறுப்பானவர்களாக மாற்றமுடியும்.
போனஸ் பணத்தைப் பொருத்தமான முறையில் முதலீடு செய்து அதனைப் பன்மடங்காக பெருக்க வாழ்த்துக்கள்...!