உணவுக்கும் உடல்நலனுக்கும் நீங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
நம்மை நாமே தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டு உள்ள கேள்விகளுக்கான விடையை 'டிக்’ செய்யுங்கள். கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடைகளைப் பாருங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்களைக் கூட்டிப்பாருங்கள். எந்த அளவுக்கு உணவு விஷயத்தில் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரியும்.
1. காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்?
அ. இல்லை. நிச்சயம் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்வேன்.
ஆ. ஓரிரு நாட்கள் மட்டும் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறேன்.
இ. காலை உணவைச் சாப்பிடுவது இல்லை. காபி அல்லது டீ மட்டும் பருகுவேன்.
(காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. காலை 8 மணி வாக்கில் அளவாகச் சாப்பிடுவது நல்லது. இது உங்கள் உடலின் வளர்ச்சிதைமாற்றப் பணியை மேம்படுத்தும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.)
2. உணவில் எவ்வளவு பச்சைக் காய்கறி- பழங்களை எடுத்துக்கொள்வீர்கள்?
அ. உணவில் பெரும்பாலான பகுதி காய்கறி - பழங்கள்தான்.
ஆ. எப்போதாவது சாப்பிடுவேன்.
இ. சமைத்த காய்கறிகள் மட்டும்தான்.
(குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று கப் பச்சைக் காய்கறிகளை உணவாகக்கொள்வது அவசியம். இதில் அதிக அளவில் வைட்டமின், ஆன்டிஆக்சிடன்ட், நார்ச்சத்து உள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு இவை அவசியம்.)
3. எந்த எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவீர்கள்?
அ. உணவில் முடிந்த வரை எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்ப்பேன்.
ஆ. ஆலிவ், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்.
இ. பாமாயில், கார்ன் ஆயில்.
(ஆலிவ், நல்லெண்ணெய், கடலை எண்ணெயில் நல்ல கொழுப்பான ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகம். இருப்பினும் எண்ணெயில் பொறித்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பாமாயிலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால், உடலில் கொழுப்புத்தன்மை கூடும். கார்ன் எண்ணெயில் 85 சதவிகிதம் உடலுக்கு கெடுதலான செறிவூட்டப்படாத கொழுப்பு உள்ளது என்பதால், அதைத் தவிர்ப்பது நல்லது.
4. ஒரு நாளைக்கு எத்தனை டம்ளர் தண்ணீர் அருந்துவீர்கள்?
அ. ஆறு டம்ளருக்கு மேல்.
ஆ. மூன்று முதல் ஐந்து டம்ளர்.
இ. இரண்டு டம்ளருக்கும் கீழ்.
(குறைந்தது ஆறு டம்ளருக்கும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும், சராசரியாக இரண்டு முதல் இரண்டரை லிட்டர்.)
5. பால் பொருட்களை எந்த அளவுக்குப் பயன்படுத்துவீர்கள்?
அ. காலை மாலை இரண்டு டம்ளர் பால் குடிப்பேன்.
ஆ. ஒரு டம்ளர் பால். பிறகு தயிர், மோர் போன்ற பால் பொருட்களைச் சேர்த்துக்கொள்வேன்.
இ. காபி அல்லது டீயில் பால் கலந்து குடிப்பதோடு சரி.
(தினமும் பால் பொருட்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், தேவையான கால்சியம் கிடைக்கும். காபி அல்லது டீயாகக் குடிக்கும்போது பாலின் தன்மை மாறி, பலனின்றிப் போய்விடும்)
6. வீட்டுக்கு வெளியில் இருக்கும்போது தாகம் எடுத்தால் என்ன செய்வீர்கள்?
அ. வெளியில் செல்லும்போது எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பேன்.
ஆ. இளநீர், ப்ரெஷ் ஜூஸ் குடிப்பேன்.
இ. ஏதாவது ஒரு குளிர்பானம் குடிப்பேன்.
(கையில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது. அப்படி இல்லை எனில் இளநீர், பழரசம் என்பது நல்லது. சாஃப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை மற்றும் ரசாயனப் பொருட்கள் உடல்பருமன், சர்க்கரை நோய், பற்சிதைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.)
7. ஹோட்டல் உணவை எவ்வளவு நாளைக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வீர்கள்?
அ. மாதத்துக்கு ஒன்று இரண்டு முறை.
ஆ. வாரத்துக்கு ஒரு முறை.
இ. வாரத்துக்கு மூன்று அல்லது அதற்குக் கீழ்.
(மாதத்துக்கு ஒன்று இரண்டு முறை என்றால் ஓ.கே. முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. உணவகங்களில் சுவைக்காக பல பொருட்களைச் சேர்க்கின்றனர். ஆனால் வீட்டில் செய்யும்போது நல்லதா கெட்டதா என ஆராய்ந்தே பொருட்களைச் சேர்க்கிறோம்.)
(அ-வுக்கு 3, ஆ-வுக்கு 2, இ-க்கு 1 மதிப்பெண்கள்)
15-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள்:
வாழ்த்துகள். உங்களின் உணவுப் பழக்கம் மிகவும் ஆரோக்கியமானது. சரியான அளவில் சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள்.
8 முதல் 14 மதிப்பெண்கள் பெற்றவர்கள்:
உங்கள் உணவு முறை ஓரளவுக்குப் பரவாயில்லை. ஆனால், இது போதாது, உங்கள் உணவு முறையில் சிறிது மாற்றங்கள் தேவை. உங்கள் உணவில் தினமும் அதிக அளவு காய்கறி, பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். ஹோட்டல் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
7-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள்:
உங்கள் உணவு முறையை முற்றிலும் மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவில் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ளன. இது உடல் பருமனுக்கு வழிவகுத்து இதயம், சிறுநீரகம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தலாம். உடனடிக் கவனம் தேவை.
No comments:
Post a Comment