Thursday, 18 June 2015

சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிப்பு

த்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் வரைவு மசோதாவில் மீண்டும் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் இருபப்தைவிட மிகவும் கடுமையானதண்டனைகள் புதிய மசோதாவில் இருப்பதாக மத்திய அரசு சொல்கிறது. சிறை தண்டனை, விதிகளை மீறுபவரின் பெயரை விளம்பரப்படுத்துவது, சமூக சேவை போன்றவை புதிய மசோதாவில் உள்ளன. சாலை விதிகளை மீண்டும் மீண்டும் மீறும் பட்சத்தில் தண்டனை மிகவும் அதிகமாக இருக்கும் என்கிறது புதிய மசோதா.   
 
புதிய மசோதாவின்படி, சாலை விதிகளை மீறும்பட்சத்தில்
 அதிகபட்ச அபராதமாக 2,500 ரூபாய் விதிக்கப்படும். இப்போது 100 ரூபாய்தான் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் விதிகளை மீறினால், 5,000 ரூபாய் அபராதம். இப்போது 300 ரூபாய். 
 
அதிவேகமாக வாகனம் ஓட்டினால்
நாளிதழ்களில் சம்பந்தப்பட்டவரின் பெயரை விளம்பரப்படுத்துவதுடன், குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். ஸ்பீடு லிமிட்டைவிட 19 கிமிக்கு மேல் வேகமாக ஓட்டியிருந்தால் 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு மாதம் வாகனம் பறிமுதல் செய்யப்படும் அல்லது ஓட்டுனர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படும் அல்லது ஓட்டுனர் பயிற்சி மீண்டும் கட்டாயமாக பெற வேண்டும். இரண்டாவது முறை இதே குற்றம் செய்தால், தண்டனை அதிகரிக்கப்படும். 
 
மோசமான விதத்தில் வாகனத்தை ஓட்டினால்
முதல்முறை 2,500 ரூபாய் அபராதம்/15 மணிநேரம் சமூக சேவை/3 நாள் சிறை தண்டனை. தொடர்ந்து இதே குற்றத்துக்கு பிடிபட்டால் 5,000 ரூபாய் தண்டனை/30 மணிநேரம் சமூக சேவை/1 வாரம் சிறை தண்டனை/ஓட்டுனர் பயிற்சி.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்
(சாதாரண ஓட்டுனராக இருப்பின்), 5,000 ரூபாய் அபராதம்/50 மணிநேரம் சமூக சேவை/6 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து. இதே குற்றத்தை மீண்டும் செய்தால் தண்டனை இருமடங்கு அதிகரிக்கப்படும்.   
கனரக வாகனம், பள்ளி கல்லூரி வாகனம், அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஆகியவற்றின் ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கினால், 10,000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். இரண்டாவது முறை பிடிபடும்போது 20,000 ரூபாய் அபராதம் அல்லது 1 முதல் 6 மாதங்களுக்கு சிறை தண்டனை அல்லது 1 வருடம் ஓட்டுனர் உரிமம் ரத்து. 
 
பதிவு செய்யப்படாத 2,3 வீலர் வாகனத்தை ஓட்டினால்
1 மாதம் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு, 1,500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும். கனரக வாகனம் என்றால் 5,000 ரூபாய் அபராதமும், 2 மாதம் வாகனம் பறிமுதலும் செய்யப்படும். தொடர்ந்து இதே குற்றத்தை செய்து பிடிபட்டால் தண்டனை இருமடங்காகும். 
சட்டப்படி அனுமதிக்கப்படாத மாற்றங்களை வாகனத்தில் செய்திருந்தால்,
குறிப்பாக வாகனத்தை உற்பத்தி செய்த நிறுவனம் பொருத்தியிருந்த எக்ஸாஸ்ட்டை மாற்றியமைத்தால் 5,000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை. இன்னொரு முறை குற்றத்துக்காக பிடிபட்டால் 10,000 ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். 

No comments:

Post a Comment