நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில், உங்களோடு இணையப் போகும், "லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே, உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும், அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர். பின், திரும்பவும் தொடர்பு ஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று, ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி, அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment