ராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலன் படுகொலை தகவல், செய்திகள்
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கொலை வழக்கை இந்த 21ம் நூற்றாண்டில் போஸ்ட் மார்ட்டம் செய்ய காரணமிருக்கிறது.ம்ஹும். அமரர் கல்கி எழுதிய என்றும் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் இப்போது இரு பாகங்கள் கொண்ட திரைப்படமாக எடுக்க முயற்சி செய்கிறார் என்பதால் அல்ல!
பிறகு எதற்காக இப்போது..?
சுவாரஸ்யத்துக்காகத்தான்! பின்னே... தமிழகத்தின் பெருமை வாய்ந்த வரலாறாகச் சொல்லப்படும் பிற்காலச் சோழ அரசின் காலத்தில், இளவரசராக பட்டம் ஏற்று மன்னராக முடிசூட இருந்த ஆதித்த கரிகாலன் தன் 28வது வயதில் படுகொலை செய்யப்பட்டார் என்பதும், அதற்கான காரணம் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது என்பதும் எப்பேர்ப்பட்ட க்ரைம் ஸ்டோரி!
முதலில் அமரர் கல்கிக்கு நன்றி. வெறும் வரலாற்றுப் பேராசிரியர்கள் மத்தியில் மட்டுமே பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்த இந்த ஆதித்த கரிகாலன் கொலை வழக்கை தன் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலின் அடிநாதமாக வைத்து பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வந்ததற்காக.
பிறகு இந்த நாவலை அடியொற்றி அமரர் விக்கிரமன், ‘நந்திபுரத்து நாயகி’ என்னும் புதினத்தை எழுதினார்.இவ்விரு நாவல்களுமே ஜஸ்ட் ஆதித்த கரிகாலனின் கொலையை ஊறுகாய் ஆக மட்டுமே பயன்படுத்தி இருக்கின்றன. இதற்காக அமரர் கல்கியையோ விக்கிரமனையோ குறை சொல்ல முடியாது. அவர்கள் காலத்தில் இருந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் தங்களுக்குக் கிடைத்த தகவல்களை வைத்து எழுதிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ‘பொன்னியின் செல்வனை’யும், ‘நந்திபுரத்து நாயகி’யையும் எழுதினார்கள்.
இன்று வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ள நிலையில் இன்னும் நெருக்கமாக இந்தக் கொலை வழக்கை ஆராய வேண்டியிருக்கிறது. ‘காலச்சக்கரம்’ நரசிம்மா இதைத்தான் ‘வானதி’ பதிப்பகம் வெளியிட்டுள்ள தனது ‘சங்கதாரா’ நாவலில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார்!
ரைட். ஆதித்த கரிகாலன் யார்..? அவருக்கும் சோழ அரச குடும்பத்துக்கும் என்ன உறவு..?
ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியிருக்கிறார் அல்லவா ராஜ ராஜ சோழன்... அவரது அண்ணன்தான் இந்த ஆதித்தகரிகாலன். நியாயமாகப் பார்த்தால் இந்த ஆதித்த கரிகாலன்தான் சுந்தரசோழருக்குப் பிறகு சோழ மன்னராகி இருக்க வேண்டும்! இதன் ஒருபடியாக இவருக்கு இளவரசர் பட்டமும் சூட்டப்பட்டிருந்தது!
இந்தச் சூழலில்தான் ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்பட்டார்! இதனையடுத்து யார் சோழ மன்னராவது என கேள்வி எழ... சுந்தர சோழரின் அண்ணன் கண்டராதித்தரின் மகன் உத்தம சோழன் - ராஜராஜ சோழனின் பெரியப்பா மகன் - பட்டத்துக்கு வந்தார்.
இந்த உத்தம சோழரின் காலத்துக்குப் பிறகே ராஜராஜ சோழன் மன்னராக அரியணை ஏறினார். இவருக்குப் பின் இவரது மகன் ராஜேந்திர சோழன் பட்டத்துக்கு வந்தார் என்பதெல்லாம் வரலாறு.இந்த ஹிஸ்டரி எல்லாம் இங்கு வேண்டாம். நேரடியாக ஆதித்த கரிகாலனின் கொலை வழக்குக்குச் சென்றுவிடலாம்! முன்பாக
Reading Between Lines ஆக வரலாற்றில் இருக்கும் சில கேள்விகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.
‘வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள் சூழ்ந்தது...’
என்று திருவாலங்காட்டு செப்பேடுகளில் ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. புருவத்தை உயர்த்துவதும் இதுதான். ஏனெனில் இளவரசர்களுக்கு எல்லாம் சோழ நாட்டின்மீது ஆசை இருக்கும்போது ஆதித்த கரிகாலனுக்கு மட்டும் வானுலகம் மீது எப்படி ஆசை இருந்திருக்க முடியும்?!
அடுத்து, இந்த படுகொலை ரவிதாஸன் என்பவரின் தலைமையில் நடைபெற்றது என்கிறது கல்வெட்டு ஆதாரங்கள். நாவலின் சுவைக்காக இந்த ரவிதாஸனை பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகளில் ஒருவராக அமரர் கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வடிவமைத்திருக்கிறார்.
உண்மையில் ரவிதாஸன் பாண்டிய நாட்டு ஆபத்துதவி அல்ல! எனில் அவர் யார்?
உடையார் கோயில் கல்வெட்டில் (முதல் யாத்திரை) ஆதித்த கரிகாலனைக் கொன்றதைப் பற்றிக் குறிப்பிடுகையில் -
‘துரோகிகளான ரவிதாஸனாகிய பஞ்சவன் பிரும்மாதிராயன், அவன் உடன்பிறந்தோன் சோமன் சாம்பவன்...’
என செதுக்கப்பட்டுள்ளது. இதை அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு, அந்த நாட்டைச் சேர்ந்தவன்தான் துரோகம் செய்ய முடியும். அண்டை நாட்டுக்காரன் பகைவன் அல்லது விரோதிதான். இது கல்வெட்டை செதுக்கியிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். அறிந்தே துரோகம் என குறிப்பிட்டிருக்கிறார்கள் என்றால்... யெஸ். சோழ அரச குலத்தைச் சேர்ந்தவர்தான் ரவிதாஸன்!
காதில் பூ சுற்றவில்லை. சுந்தர சோழர் காலத்தில் சோழ நாட்டின் அமைச்சராக இருந்த அநிருத்தர் பிரும்மராயர் ஓய்வு பெற்றபிறகு இந்த ரவிதாஸனுக்கு - சோழ இளவரசரை படுகொலை செய்த வழக்கின் A1 குற்றவாளியான ரவிதாஸனுக்கு - சோழ அரசில் பெரும் பதவி அளிக்கப்பட்டது! இதன் காரணமாகவே ‘பஞ்சவன் பிரும்மாதி ராயன்’ என்று பெருமையுடன் ரவிதாஸன் அழைக்கப்பட்டார்!
‘பிரும்மாதிராயன்’ என்பது சோழ அரசில் பெரும் பதவியில் உள்ள அந்தணர்களைத்தான் குறிக்கும்! அநிருத்தரும் பிரம்மாதிராயன் என்றே அழைக்கப்பட்டார் என்பதை இங்கு நினைவு கூர்வது நல்லது!
இதை அடிப்படையாக வைத்தே சில சரித்திர ஆசிரியர்கள் ரவிதாஸன் அந்தணனாக இருந்ததாலேயே சோழ நாட்டின் நீதிப்படி அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்கிறார்கள்.எனில், சோழர்கள் படையெடுத்துச் சென்றபோதெல்லாம் அண்டை நாட்டில் இருந்த அந்தணர்களையும், பெண்களையும் கொன்று குவித்தனரே... இதெல்லாம் எதில் சேரும்? சொந்த நாட்டு அந்தணர்களைத்தான் கொல்லக் கூடாது... எதிரி நாட்டு அந்தணர்களைக் கொல்லலாம் என இதை எடுத்துக் கொள்ளலாமா?! அந்தணர்களைக் கொன்றதால் ஏற்பட்ட ‘சோழ பிரும்ம ஹத்தி’ என்கிற பாபத்தைக்கழிக்கவே அரச குடும்பத்தினர் பல விண்ணகரங்களையும் சிவாலயங்களையும் எழுப்பினார்கள் எனக் கருதலாமா?!
போலவே ஆதித்த கரிகாலனின் தந்தையார் சுந்தர சோழருக்குப் பிறகு பதவிக்கு வந்த கண்டராதித்த தேவரின் மகன் உத்தம சோழன்தான் ஆள் வைத்து ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததாக வேறு சிலர் சொல்கிறார்கள்.ஒரு வாதத்துக்காக அப்படி என்றே வைத்துக் கொள்வோம். ரவிதாஸனைக் கொண்டு ஆதித்த கரிகாலனை உத்தம சோழர் கொலை செய்தார் என்றால், தான் பதவிக்கு வந்ததும் அவருக்கு அரச பதவி கொடுத்து ஏன் உத்தமசோழர் மரியாதை செய்தார்..? மக்கள் மனதில் இது சந்தேகத்தை எழுப்பியிருக்காதா?
இந்த உத்தம சோழருக்குப் பிறகு பதவிக்கு வந்த அருண்மொழி என்கிற ராஜராஜ சோழன், தன் அண்ணனான ஆதித்த கரிகாலனைக் கொன்ற ரவிதாஸனுக்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்காததன் காரணம் அவர் அந்தணராக இருந்ததுதான்... இதனாலேயே ரவிதாஸனின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து, உடுத்திய ஆடையுடன் அவரது மொத்தக் குடும்பத்தையும் நாடு கடத்தினார் என்கிறார்கள்.
இதை ஏற்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது! ஏனெனில் சோழ அரச குடும்பத்தின் அடைமொழிச் சொல்லான ‘பஞ்சவன்’ என்ற விருதுப் பெயருடனேயே ரவிதாஸன் அழைக்கப்பட்டிருக்கிறார்! அந்தணர்களுக்கு இப்பட்டத்தை வழங்கும் வழக்கமில்லை!
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், ரவிதாஸன் அந்தணராக இருக்க வாய்ப்பில்லை என்று தெரியும்! எனில், ராஜராஜ சோழன் ஏன் ரவிதாஸன் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவில்லை?!
Cut
to - ரவி என்கிற வடமொழிச் சொல்லுக்கு ஆதித்தன், கதிரவன், பிங்களன்... என பல அர்த்தங்கள் உண்டு என்பதை கவனத்தில் கொள்வது நல்லது!ரைட். ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்..? ஏன் இந்தக் கொலை நடந்தது..? எந்த இடத்தில் நடைபெற்றது..?
No comments:
Post a Comment