Wednesday, 12 August 2020

முதலாம் ராஜ ராஜ சோழன் - பொது தகவல் 3 @ ராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கில் அவருக்கு பங்கு உண்டா? - சந்தேகத் தகவல், செய்திகள்

 ராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனின் கொலை வழக்கில் அவருக்கு பங்கு உண்டா? - சந்தேகத் தகவல், செய்திகள்

1.உத்தமசோழன் பதவியேற்கும்போது அவருக்கு ஒரு மகன் இருந்திருக்கிறார். அரச விதிமுறைகளின்படி உத்தம சோழனுக்குப் பின் அவர் மகனுக்குத்தான் இளவரசுப் பட்டம் சூட்டவேண்டும். ஆனால், இதற்கு முரணாக அருண்மொழி என்கிற இராஜராஜ சோழன் சிம்மாசனத்தில் அமர்கிறார். ஏன்?

2.இராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ரவிதாசன் முதலியவர்களின் சொத்தைப் பறித்துக்கொண்டு ஊரைவிட்டுத் துரத்துகிறார். தன் அண்ணனை கொலை செய்தவர்களை சிறையில் அடைத்துத் தண்டிக்காமல் இப்படி ஊரை விட்டுத் துரத்தியதுடன் கொலை வழக்கை ஏன் முடித்தார்?

3.தான், செய்யும் எல்லா செயல்களையும் கல்வெட்டில் வடிப்பது இராஜராஜ சோழனின் வழக்கம். தன் காலத்தில் இருந்த தேவதாசிகளின் பெயர் உட்பட எல்லாவற்றையும் கல்வெட்டில் பொறித்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை எந்தக் கல்வெட்டிலும் வடிக்கவில்லை! எப்படி கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள் என்ற தகவலையும் குறிப்பாகக் கூடச் சொல்லவில்லை!

4.இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் உத்தம சோழரின் மகன் கோயில்களை நிர்வகிக்கும் பதவியில் இருந்தார். இவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதாவது தன் மகன் இராஜேந்திர சோழன் பட்டம் ஏற்க போட்டி வரக் கூடாது என்பதற்காகவே உத்தம சோழரின் மகனை இராஜராஜ சோழன் அப்புறப்படுத்தினார் என்கிறார்கள்.

5.உத்தம சோழர் பதவிக்கு வந்த மூன்றாண்டுகள் கழித்து ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பாக வந்தியத்தேவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த வந்தியத்தேவன், பின்னாளில் இராஜராஜ சோழனாக பட்டம் ஏற்ற அப்போதைய அருண்மொழியின் தமக்கை குந்தவையின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தம சோழரின் காலத்தில் நடைபெற்ற ஆதித்த கரிகாலனின் கொலை தொடர்பான விசாரணை விவரங்கள் ஏதும் இப்போது கிடைக்கவில்லை. ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்! ஆனால், இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததுமே 12 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வந்தியத்தேவனை உடனடியாக விடுவிக்கிறார். ஏன் அவர் விடுதலை செய்யப்பட்டார்... ஆதித்த கரிகாலனை வந்தியத் தேவன் கொலை செய்யவில்லை என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் கிடைத்ததா? இந்த விவரங்களும் கவனமாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன!

6.உத்தம சோழரின் ஆட்சிக் காலத்தில் அண்டை நாடுகளுடன் பெரியதாக போர் ஏதும் நடக்கவில்லை. இராஜராஜ சோழன் அரியணையில் அமர்ந்ததும் அண்டை நாடுகள் பிரச்னை செய்ய ஆரம்பிக்கின்றன. இவற்றை ஒடுக்க வேண்டியது ஒரு மன்னரின் கடமை. இராஜராஜ சோழரும் படையெடுத்துச் சென்று அண்டை நாடுகளுடன் போர் புரிந்தார்.

ஆனால், இவை எல்லாம் பிறகு நடந்தவை.எனில், முதலாவது? காந்தளூரில் இருந்த கடிகை (கல்விக் கூடம்) ஒன்றைத்தான், தான் பதவிக்கு வந்ததுமே இராஜராஜ சோழன் படை திரட்டிச் சென்று அழித்தார். ஏன்? எதிரி நாடுகளை விட ஒரு கடிகையை அழிப்பது ஏன் இராஜராஜ சோழருக்கு முதன்மையாகப் பட்டது?

இதற்குக் காரணம் காந்தளூர் கடிகையின் தலைமை ஆசானாக இருந்தவர்தான் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட ரவிதாசனின் குரு! இவருக்கும் அந்தக் கடிகைக்கும் பல உண்மைகள் தெரியும். பின்னாளில் பிரச்னைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காகவே காந்தளூர் கடிகையை இராஜராஜ சோழன் அழித்தார் என்கிறார்கள்.

சரி. யார் இந்த ரவிதாசன்?

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலய சோழரின் மகன் முதலாம் ஆதித்த கரிகாலனின் இரு புதல்வர்களில் ஒருவரான கன்னரத் தேவனின் வம்சத்தைச் சேர்ந்தவர்! இந்த கன்னரத் தேவனுக்கு பட்டம் மறுக்கப்பட்டு இளையவர் பராந்தகர் அரியணை ஏறினார் என்பது வரலாறு!

கன்னரத் தேவனுக்கு ஏன் சோழ அரியணை மறுக்கப்பட்டது என்பதும் இன்று வரை புரியாத புதிர்!

இந்த அரச மர்மங்கள் எல்லாம் வெளிப்பட வேண்டாம் என்றுதான் சோழப் பரம்பரையைச் சேர்ந்த ரவிதாசனை நாட்டை விட்டே இராஜராஜ சோழன் துரத்தினார்... தன் அண்ணன் ஆதித்த கரிகாலனின் கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி வைத்தார்... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.

தன் தம்பி அருண்மொழி பட்டத்துக்கு வர வேண்டும் என்பதற்காக சோழ அரசர் குலத்தில் நிலவி வந்த அரியணைப் போட்டியைத் தனக்கு சாதகமாக குந்தவை பயன்படுத்தி ஸ்கெட்ச் போட்டார்... ஆனால், தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் பட்டத்துக்கு வருவதை அவர் ஏன் விரும்பவில்லை... தன் தம்பி அருண்மொழி என்கிற இராஜராஜன் பட்டத்துக்கு வர வேண்டும் என்று ஏன் ஆசைப்பட்டார்... என்பதெல்லாம் கேள்விகளாகவே இப்போதும் நிற்கின்றன.

இவை எல்லாம் இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லப்படுபவை. நாளையே வேறு ஆவணங்கள் கிடைக்கும்போது ஆதித்த கரிகாலன் கொலை குறித்த புதிய பூகம்பங்கள் கிளம்பலாம்.

மொத்தத்தில் காலம்தோறும் இக்கொலை வழக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை! போலவே இந்த அரசியல் படுகொலைக்கான காரணங்கள் ஒருபோதும் வெளியே வராது என்பதும்!

No comments:

Post a Comment