Wednesday, 5 September 2018

புகை பிடிப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

புகை பிடிப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

     புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 அன்று அறிவிக்கபட்டுள்ளது. புகைப்போரின் நிலையையும், அதனால் அவர்கள் அடையும் நோய்களையும், தீமைகளையும் பக்கம் பக்கமாக  கட்டுரையில் சொல்லலாம்.

     புகைக்காதவர்களுக்கு புகை பிடிப்பவர்களால் ஏற்படும் கஷ்டங்களை அவர்கள் அறிந்த மாதிரி தெரியவில்லை. கட்டுப்பாடுகளை மற்றவர் என்மீது திணிக்காமல், நானே விரும்பி, சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதே உண்மையான சுதந்திரம் ஆகும்.

     அதாவது, அடுத்தவரின் சுதந்திரத்தைக் கெடுக்காமல், எனது சுதந்திரம் இருக்க வேண்டும். 'உன் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கு நுனி வரை' என்று ஒரு பொன்மொழி சொல்கிறது. அந்த மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் சிகரெட் புகை எவ்வளவு தொந்தரவு என்பது புகைப்போர் நினைப்பதில்லை.

     சிலர் சிகரெட் புகையை, பக்கத்தில் இருப்பவர்களை பற்றி நினைக்காமல் அவர்களது முகத்துக்கு நேரே ஊதி தள்ளுவதை காணும் போது, இவர்கள் 6 அறிவு படைத்தவர்கள்தானா?  என என்ன தோன்றும். இன்னும் சிலர்,  நம்முடன் ஜன்னல் அடைக்கப்பட்ட வேன் அல்லது காரில் வரும்போது புகைத்த வாய் நாற்றமே நமக்கு அலர்ஜியாக மாறுவதை அவர்களுக்கு பாடம் சொல்லி தரவேண்டும் போல.

     மது குடிப்போரின் வாயில் வரும் நாற்றத்தை விட, புகை நாற்றம் மோசமானது. மது குடிப்போர் கூட பாக்கு போன்று எதாவது வாயில் மென்று விட்டு வந்து விட்டால் அது நம்மை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால், ஓரிடத்தில் நம்முடன் AC ரூமில் புகை பிடித்தவர் இருந்து விட்டால் அவ்வளவு தான், வேறு தொந்தரவே தேவை இல்லை.

            'பேசிவ் ஸ்மோக்கிங்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும்,  தான் புகை பிடிக்காமல், புகைப்பழக்கமுள்ளவர்களுடன் தொடர்புடையதாலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

     பிரிட்டன் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுத் தகவல்களின்படி,  குழந்தைகளில் 40 சதவீதத்தினரும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோரில் 30 சதவீதத்தினரும் இம்மாதிரியான பிறரது புகைப்பழக்கத்திற்கு பாதிக்கப்படுகின்றனர்.

     பொது இடங்களில் சிகரெட் புகையினால் பாதிக்கப்படுபவர்கள் புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல, அருகில் இருப்பவர்களும்தான்.

 புகை பிடிப்பதை நிறுத்தினால்..!

     புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.

     புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.

     சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.

            ''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார். 

     பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.

ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!

     பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

     என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?

 சிகரெட் புகைக்காதவர்களுக்கும் பகை !

     ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் தொடர்ந்து புகை பிடிப்பவர் எனில், அவர் விடும் அளவில்லாத புகையால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவருமே நோய்வாய்ப்படுகின்றனர் என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்! 

     இது எந்த அளவுக்குத் தீவிரமான விஷயம் என்பது, அதன் பாதிப்புகளை பொது மருத்துவர் நா.எழிலன் விவரித்தபோது புரிந்தது.

            'சிகரெட் பழக்கம் இல்லாதவர்கள்கூட, அருகில் உள்ளவர்கள் புகைத்து வெளியிடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால், மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களைத்தான் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்என்கிறோம். 1980 - 90-களில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், புகை பிடிக்காத பலரும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கி இறந்தனர்.  பிறகுதான் அதற்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அத்தனை பேரின் வீட்டிலும் சிகரெட் புகைப்பவர் (Active smokerMain ) ஒருவர் இருந்திருக்கிறார். இந்த அதிர்ச்சிக் கண்டுபிடிப்புக்குப் பிறகு, 2006-ல், 'பேஸிவ் ஸ்மோக்கிங்உண்டாக்கும் ஆபத்துக்கள் அனைத்தும் அறியப்பட்டன.

     வீட்டில் அல்லது பொது இடங்களில் ஒருவர் சிகரெட் புகைத்தால், அதிலிருந்து வெளியாகும் 4000 ரசாயனப் பொருட்களை, சுற்றிலும் இருக்கும் 'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்சுவாசிக்க நேர்கிறது. அவற்றுள் 69 ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. ஒருவர் புகை பிடிக்கும்போது, அவர் உள்ளே இழுக்கும் புகையைவிட (stream smoke), வெளியே விடும் புகை (Side stream smoke) அதிகம். இரண்டு புகையிலுமே, நிகோட்டின், காட்டினின், தையோசயனைட்ஸ், பென்சீன் கூட்டுப்பொருட்கள் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் உள்ளன.

     ஒரே வீட்டில் வசிக்கும், புகை பிடிப்பவருக்கும், புகை பிடிக்காதவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. இருவரும் ஒரே அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேதனையின் உச்சம்!

            புகைப்பவரின் அருகே, புகை உண்டாகும்போது கூடவே இருப்பவர்களை 'இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்’ (2nd hand smoker) என்போம். அந்தப் புகை கலைந்துபோன பின்னும், அந்தச் சுற்றுச்சூழலில் புகையின் துகள்கள் சுற்றியிருக்கும் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும். அந்தக் காற்றைச் சுவாசிப்பவர்களை 'மூன்றாம் நிலை புகைபிடிப்பவர்’ (3rd hand smoker) என்று சொல்வோம். இந்த இரு வகையினருக்குமே (நேரடியாக சிகரெட்டைத் தொடாதவர்கள்) புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் உண்டு. அதேபோல், இதய அடைப்பு நோய்கள், ஆன்ஜைனா போன்றவை வரும் வாய்ப்பும் 30 சதவிகிதம் உண்டு.

     இவர்களுக்கு, நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்களுக்கான அபாயம் அதிகம்.

     இதைவிடக் கொடுமை... வீட்டில் கர்ப்பிணிப் பெண் இருந்தால், அவருக்குக் குறைப் பிரசவம் ஏற்படலாம். கரு கலையவும் வாய்ப்பு உண்டு. புகைக்கும் சூழலில் இருக்கும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி, சிந்திக்கும் திறன், .க்யூ  குறைபாடுகள் ஏற்பட வாய்ப்பு மிக அதிகம். சொல்லப்போனால், கருவில் குழந்தையின் வளர்ச்சியே சுருங்கிவிடும். குழந்தையின் அப்பா, தொடர்ந்து புகைபிடிப்பவர் என்றால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா, நிமோனியா மற்றும் பிராங்காய்ட்டீஸ் (சுவாசக்குழாய் சுருக்க நோய்) வருவதற்கும், மற்ற குழந்தைகளைவிட 15 - 20 சதவிகிதம் வாய்ப்பு அதிகம். 

     வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும்கூட ஆபத்து நேர்வதைப் புகைபிடிக்கும் ஆண்கள் உணரவேண்டும். பொது இடம், கழிப்பறை, வீட்டின் வெளியே என எங்குமே புகைபிடிக்கக் கூடாது.

குடும்ப நலனில் அக்கறையும், சுற்றுசூழலில் ஆர்வமும் குறிப்பாக மனித நேயம் உள்ளவர்களாகவும் இருப்பவர்களால் மட்டுமே புகைப்பழக்கத்தை உடனடியாக நிறுத்த முடியும்'' என்கிறார் டாக்டர் எழிலன்.
     சிந்தியுங்கள் சகோதரர்களே... இழுத்துவிடும் புகையை இனியாவது நிறுத்துங்கள்!

பொது இடங்களில் புகைக்குத் தடை... நோய்க்கு விடை!

            'பேஸிவ் ஸ்மோக்கர்ஸ்’-க்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மேலைநாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  புகை பிடிப்பவரது குடும்பத்தினரின் முடி, தோல், சுவாசக்குழாய், மூக்கு நுழைவுக்குழாய் போன்ற உறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில்தான், நச்சுக்களின் படிமானம் அந்த உறுப்புகளில் படிந்திருப்பது கண்டறியப்பட்டது.

     இதன் பிறகு, புகையை சுவாசிப்பவர்களுக்கு ஏற்படும் கேடுகளை மனதில் கொண்டு, பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடை உத்தரவு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்ததும், மேலைநாடுகளில் தடை செய்த இடங்களில் எல்லாம் சுற்றுச்சூழலில் இருந்தவர்களிடம் மாதிரி எடுத்து ஆராய்ந்தபோது, அங்கெல்லாம் பிரசவ பாதிப்புகள், புற்றுநோய், நிமோனியா, இதய நோய் போன்றவற்றின் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது.

HEALTH ADVISORY / STATUTORY WARNING

புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்.
SMOKING CAUSES CANCER, SMOKING KILLS.

மது அருந்துதல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
LIQUOR DRINKING IS INJURIOUS TO HEALTH.

***************************************************
CONSUMPTION OF ALCOHOL IS INJURIOUS TO HEALTH, IT DESTROYS YOUR LIFE AND HOME.

SAY ‘NO’ TO DRUGS,

SAY ‘YES’ TO LIFE.

No comments:

Post a Comment