Sunday, 12 August 2018

நாவல் - தகவல்


நாவல் - இலக்கியத்தின் அடிப்படை



நாவல் அல்லது புதினம் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத சஞ்சிகைகளில் தொடராக வெளிவருவதும் உண்டு.

நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கியவடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கியவகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 1879 ல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம். இது மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டதாகும். சில வருடங்களுக்குள் வெளிவந்த பிற இரு நாவல்களும் முன்னோடிகளாக கருதப்படுகின்றன. அவை ராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், . மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம். ஏறத்தாழ இக்காலத்தில் ஈழ இலக்கியத்தில் முதல் நாவல் உருவானது. சித்தி லெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் ஈழத்தில் வெளிவந்த முதல் நாவலாகும். 1890 ல் எஸ். இன்னாசித்தம்பி அவர்களால் எழுதப்பட்ட "ஊசோன் பாலந்தை கதை"மற்றும் "மூர் என்பார் எழுதிய "காவலப்பன்" கதை என்பவற்றையே ஈழத்தவர்களின் முதல் நாவல்களாக விவாதிப்பவர்களும் உளர். தமிழில் நாவல் கலை பெரும் வளர்ச்சியைக் கண்டுவருகிறது. தமிழ்நாவல்களின் வரலாற்றை சிட்டி, சிவபாதசுந்தரம் எழுதிய தமிழ்நாவல் வரலாறு என்ற நூலில் காணலாம்.

பலரும் நாவலை வாசிக்க முடிவதில்லை எனச்சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. புதிய மொழி புதிரான கதை எனக் காரணங்கள் இருக்கலாம். ஒரு நாவலை ஒதுக்குவதற்கோ பாராட்டுவதற்கோ நமக்கு நாவலின் கூறுகளைத் தெரிந்திருக்கவேண்டும்.

மேம்போக்காக நாவல் நன்றாக இல்லை எனச் சொல்லும்போது உங்களுக்கு ஈகோவைத் தடவியதாகவும், நாவல் எழுதியவருக்கு கோபத்திற்கு அப்பால் தமிழ் இலக்கியத்தில் முளைகளை கிள்ளி எறிவது பார்க்க கூடியதாக இருக்கிறது.

புலம்பெயர்ந்தவர் எழுதி சமீபத்தில் வந்த சிறந்த நாவல் கசகரணம். அது நாவலில் அக்கரைப்பற்று சந்தையின் அழிவை இன ஓற்றுமையின் அழிவின் படிமமாகக வைத்துள்ளது. போரால் இனங்களின் ஒற்றுமை சிதைவதை சில பாத்திரங்கள் மூலமாக சொல்கிறது. ஆனால் இரண்டு வார்த்தையில் பலர் அந்த நாவலை தூக்கியெறிந்தார்கள்.

எழுதிவன் ஆணா பெண்ணா அல்லது அவன் அல்லது அவள் அரசியல் என்ன என்பதே பலகாலமாக நாவல் பற்றிய தரத்தை தீர்மானிக்கிறது.
ஒரு பொறியியலாளர் பாலத்தைப் பற்றி கருத்துச் சொல்லும்போதோ மருத்துவர் ஒரு மருந்தைக் குறை கூறும்போதோ அதற்கான காரணத்தையும் கூறுவார். இந்தக்கடமை இலக்கிய விமர்சகர்களுக்கும் உள்ளது.

நாவல் என்றால் என்ன?

நாவல் - தொடர்ச்சியாக வசனத்தில் எழுதப்பட்ட நீண்ட கதை. இந்த வடிவம் அதற்கு முன்பு செய்யுள் நாடகம் என இருந்த இலக்கிய வடிவங்களில் இருந்து மாறுபடுகிறது.

நாவல் என்ற இலக்கிய வடிவம் 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் உருவாகியது. காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமானதுபுத்தகங்கள் பதிக்கக் கூடிய அச்சுத்தொழில் ஐரோப்பாவில் உருவாகியதுதான். அதற்கு அப்பால்; தொழில் வளர்ச்சியால் உருவாகிய பணத்தால் கல்வியறிவு பெற்ற மத்திய வகுப்பு உருவாகியது. அதிலும் பெண்கள்; கல்வியறிவைப் பெற்;றாலும் அவர்கள் அக்காலத்தில் வெளிவேலைகளில் ஈடுபடவில்லை. வீட்டில் குடும்பம் என்ற வட்டத்தில் சுழன்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மலிவான பொழுதுபோக்கு சாதனம் தேவைப்படுகிறது. இதனால் பல நாவல்கள் பெண்களைக் கவர்வதற்காக எழுதப்படுகிறது. பல பெண்களாலும் எழுதப்பட்டன.

உதாரணமாக மெடம் போவரி என்ற புகழ்பெற்ற பிரான்சிய நாவலில் எம்மா என்ற கதாநாயகி இளம் பராயத்தில் படித்த நாவல்களின் காரணமாக அவள் தொடர்ச்சியாக காதலர்களைத் தேடுவதாக அங்கே சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் மத்தியதர பெண்கள் ஒழுக்கமாக இருந்துகொண்டு கணவர்களைத் தேடுவதற்கு உதவும் நாவல்களாக ஜேன் ஓஸ்ரினின் நாவல்கள் வருகின்றன.

ஐரோப்பிய தாக்கம் உலகெங்கும் பரவும்போது மற்றைய மொழிகளில் நாவல்கள் வருகிறது.

ஐரோப்பிய நாவல்களுக்கு முன்பாக நாவல் வடிவம் சீனா யப்பானில் இருந்தது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரிதம் 1879 இல் மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதியது என்கிறார்கள்.

நல்ல நாவல்களை எப்படி படிப்பது?

50 பக்கங்கள் படிக்கும்போது நாவல் நல்லதா…? கெட்டதா…? என்பது தெரிந்துவிடுகிறது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், (50 Pages Test ). இவ்வாறு சொல்வதற்கு நாவல் இலக்கியத்தின் மிக அடிப்படையான தன்மைகளைத் தெரிந்திருக்கவேண்டும். அந்தத்தன்மைகள் அவற்றில் உள்ளனவா எனப் பார்க்கவேண்டும். எந்த நாவலிலும் இருவர் குறைந்த பட்சம் இருப்பார்கள்.எழுத்தாளர் மற்றவர் கதை சொல்பவர். வண்ணத்திக்குளம் நாவலில் கதாசிரியர் நடேசன். கதை சொல்பவர் சூரியன்.

மற்றொரு உதாரணம் ரூ கில் மொக்கிங்பேட் To kill a mocking bird ) ஆறுவயதான Scout Finch என்ற சிறுமி.

 நாவல் இருவகையாக சொல்லப்படும்.
1) ஒருவர் தனது பார்வையாக கதை சொல்லுவார்.
2) மூன்றாம் இடத்தில் இருந்து கதை எழுதுவது.
மூன்றாம் இடத்தில் இருந்து எழுதுபவருக்கும் கதைக்கும் மத்தியில் இடைவெளியை உருவாக்குவது. அதாவது இந்த மூன்றாம் மனிதர் எல்லோரையும் அவதானிப்பவராக இருந்து கதை சொல்வார். பெரும்பாலான புத்தகங்கள் இந்த வரிசையைச் சேர்ந்தவை. இதைவிட நாவலில் பாத்திரமாக வரும் ஒருவரது மனதை கடன்வாங்கி அவர் மூலமாக கதை சொல்வது (Free indirect discourse ) இதற்குப் பல உதாரணங்கள் உள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் கோயில் மயில் பேசுவதாக ஒரு கதை எழுதியுள்ளேன். கதையை எப்படிச் சொல்வது எனத் தீர்மானிப்பது நாவலைப் பொறுத்தது.

பாத்திரப்படைப்பு

இதில் முழுமையான படைப்பு தட்டையான படைப்பு என இரண்டு வகையுண்டு. முழுமையான பாத்திரம் உதாரணமாக கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி. சிறந்த பாத்திரத்திற்கு அவள் உதாரணம். முழுமையான பாத்திரம் நல்ல பாத்திரமாகவோ விரும்பும் பாத்திரமாகவோ இருக்கவேண்டியதில்லை. இதில் ரஷ்ஷிய எழுத்தாளர்கள் பியவிடோர் டொஸ்ரெஸ்கி செக்கோவ் மற்றும் டால்ஸ்;டாய் மகோன்னதமானவர்கள். தவறான வழியில் செல்லும் பாத்திரத்தை இறுதியில் எமது அனுதாபத்துக்குரிய பாத்திரமாக்குவார். அன்னா கரீனா இதற்கு ஒரு உதாரணம்.

விபரித்தல் (Descriptionn)    
    
இடங்களையும், மனிதர்களையும், பொருட்களையும் விபரிப்பது முக்கியமானது. இந்த விபரிப்பு சினிமாவைப்போல் மனக்கண்ணால் வாசிப்பவருக்கு மனதில் காட்சியை உருவகிக்க உதவுகிறது. மேலும் சில விபரிப்பை கதை சொல்பவர் சொல்லாமல் அங்கு வரும் பாத்திரத்தின் ஊடாக விபரிப்பது கதைக்கு முக்கியமாகிறது. சில இடங்களில் அதிகமாக விபரித்து இருந்தால் பலர் அதை விட்டுவிடுகிறார்கள். ஆனால் உண்மையில் விபரிப்பு அந்த கதையின் முக்கியத்துவத்தை அல்லது பாத்திரம் செய்ய இருக்கும் செயலை புரியவைக்கிறது.

கல்கியின் பொன்னியின் செல்வனில் காவேரிகரையில் செல்லும்போது வந்தியத்தேவன் காணும் காட்சி பல பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. அங்கு அந்தக் கதைக்கு அவ்வளவு விபரிப்புத் தேவையா…? என நான் நினைத்தது உண்டு. தமிழ் எழுத்தாளர்களில் ஜெயமோகனை வாசிக்கும்போது சில இடங்களில் விபரிப்பு அதிகம் எனக்கருதும் இடங்கள் உண்டு. ஆனால் தேர்ந்த வாசகன் விபரிப்பை தவிர்க்க மாட்டான்.

சில நாவல்களில் வசனங்கள் நீளமானவை. இதையே பலர் தங்களது ஸ்டைலாக பாவிப்பார்கள். அதேபோல் ஹெமிங்வே போன்றவர்கள்; மிகவும் சிறிய வாக்கியங்களை பாவிப்பார்கள்.

சம்பவங்களின் விபரிப்பை அதற்கும் மேலாக கொண்டு செல்பவை முரண்நகை ( Irony) பொருள்மயக்கம் (Ambiguity ) இவற்றை இலக்கிய வெடிமருந்துகள்(explosive devices of literature) என்பார்கள்.

இங்கே முரண்நகைக்கு உதாரணமாக எனது வண்ணாத்திக்குளம் நாவலில் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கும்போதுயாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற வரவேற்புப் பலகையை பார்த்துஎன்னையுமா…?’ என்கிறாள் சித்திரா என்ற சிங்களப்பெண். சமீபத்தில் நான் வாசித்து நயப்புரை எழுதிய டோனி மொறிசனின் நாவலில் அடிமைகள் வாழ்ந்த வீடு சுவீட்ஹோம் எனப்படுகிறது.

பொருள் மயக்கத்திற்கு சிறு உதாரணம்: எனது நண்பர் ஒருவர் எனது உனையே மயல்கொண்டு நாவலைப்படித்துவிட்டுநாவல் நன்றாக இருந்தது. கடைசியில் முடிக்கவில்லை’’ என்றார்.

அந்த நாவலில் கதாநாயகன் வேறு பெண்ணுடன் உறவு கொண்டதால் மனைவி தற்கொலை செய்ய முயன்று தப்பிய பின்னர்; – மனம் மாறிய கணவனை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘நீங்கள் தயவு செய்து மெல்பனுக்கு போங்கள்எனக்கு மன ஆறுதல் ஏற்பட சிலகாலம் தேவை. ‘ என்று அவள் சொன்னது ஒரு வேலைக்காரனை துரத்தும் செயலுக்கு ஒப்பானது. முடிவில் அங்கு என்ன நடக்கிறது அல்லது இருவரும் சேருகிறார்களா என்று கேள்விகளை அடுக்கி வாசகர் தீர்மானிப்பார். இதுவே இலக்கியத்தில் பொருள்மயக்கம்.

எந்த நாவலுக்கும் ஐந்து பகுதிகள் உள்ளன. ஆரம்பம் மத்தியபகுதி முடிவு சம்பவங்களின் கோர்வை (Plot) கதை.

ஒரு செய்யுள் ஆரம்பம் மத்தியபகுதி - முடிவு என்பன கொண்டதாக இருக்கும் என்று அரிஸ்டோட்டல் இரண்டாயிரம் வருடம் முன்பே சொல்லியிருக்கிறார். இதை மூன்று அங்க அமைப்பென்கிறார்கள்.

ஆரம்பம்
தொடக்கத்தில் பாத்திரங்களை அறிமுகப்படுத்தி இந்தக் கதை எதைப் பற்றியது என வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது.

நடுப்பகுதி
நடக்கும் சம்பவங்களால் கதை திருப்பப்படுகிறது.

முடிவு
எப்படி கதை நகர்ந்து முடிக்கப்படுகிறது என்பதை உணர்த்துவது. இங்கே சம்பவங்களை கோர்ப்பது ஆங்கிலத்தில் புளட் எனப்படுகிறது. இதற்கான மொத்த உருவம் கதையாகும். கதை என்பது தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள். ஆனால் சம்பவங்களின் கோர்வை என்ற புளட் கதையை எப்படி வாசகர்களிடம் சேர்ப்பிப்பதில் தங்கியிருக்கிறது.

எல்லோருக்கும் புரியும் மொழியில் சொல்வதானால்மூலக்கதையை எழுதும் நாவலாசிரியரது கதையை புளட்டாக்குவதுஅதாவது திரைப்படத்திற்கு ஏற்ற கதையாக்குவதுதான். அதனையே திரைக்கதை ஆசிரியர் செய்கிறார்.

சிறுகதைகளில் ஒன்று இரண்டு பாத்திரங்கள். ஆனால் நாவல் பல பாத்திரங்களைக் கொண்டது. பல காலம் மட்டுமல்ல தலைமுறைகளையும் தாண்டிச் செல்லும்.

நாவலுக்கு கவிதைபோல் பெரிய அளவில் மொழி வளம் தேவையில்லை.

தகவல் பதிவு செய்த நாள்  - 17.12.2014.

1 comment: